பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்புடைய போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா முறையீடு செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பிரபல தொழிலதிபர் ‘ஜெம் கிரானைட்’ வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. இவ்விகாரத்தில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டபோது, காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் சென்னை கமிஷனர் அருண், சென்னை தெற்கு காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன், கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி ஐபிஎஸ், சென்னை மேற்கு சட்டம்-ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ் , தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக ஊடகத் தொடர்பு அலுவலர் முத்தரசி ஐபிஎஸ் மற்றும் சென்னை பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி ஐபிஎஸ் ஆகியோரைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அமைத்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோக்கள் வெளியாகி உள்ளதால், வழக்கின் விசாரணை பாதிக்கப்படாமல் இருக்கச் சிபிஐ-க்கு (CBI) மாற்ற வேண்டும் என நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு மூத்த வழக்கறிஞர் என்.எல். ராஜா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மேலும், இது தொடர்பாகத் தான் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அம்மனுவை அவசர விசாரணையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதி, “தற்போது மாநிலக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது; அந்த விசாரணை தொடரட்டும். அதற்குத் தற்போது எந்தத் தடையும் விதிக்க முடியாது. இருப்பினும், உங்கள் கோரிக்கை தொடர்பான மனு தாக்கல் செய்யும் நிலையில், அந்த மனு என்னிடம் வந்தால் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
