வண்டலூர் சிறுமி விவகாரம் : சர்ச்சையில் சிக்கிய தாம்பரம் போலீஸ்!

Published On:

| By Kavi

வண்டலூர் சிறுமி விவகாரத்தில் பதிவிட்ட ட்வீட்டை தாம்பரம் காவல்துறை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூரை அடுத்த கண்டிகை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

ஆயிரத்துக்கு அதிகமான மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றபோது கைக்குட்டையை முகத்தில் வைத்து அழுத்தி இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிலையில், இன்று காலை அந்த மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். “பள்ளியிலேயே பாதுகாப்பு இல்லையா” என்று மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் கோஷம் எழுப்பினர்.

ADVERTISEMENT

மாணவிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், ”இந்த செய்தி உண்மையில்லை தவறானது. டெலிட் செய்யுங்கள்” என்று தாம்பரம் நகர காவல் துறை எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

இந்த சூழலில் பெற்றோர்கள் உறவினர்களின் போராட்டத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தாம்பரம் காவல்துறை, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கூறப்படும் புகார் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகள் மேற்பார்வையில் பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

பள்ளி சுற்றுப்பகுதிகளில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரைவாக விசாரணை நடத்தப்பட்டது. 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள படி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இந்த செய்தி பொய்யானது என்று வெளியிட்ட பதிவை எக்ஸ் பக்கத்தில் இருந்து தாம்பரம் காவல்துறை நீக்கியுள்ளது. 

இந்த சூழலில் விசாரணை நடக்கும் போது எதன் அடிப்படையில் அது ‘பொய்யானது’ என காவல்துறை சொன்னது. யாரை காப்பாற்ற இதனை எல்லாம் காவல்துறை செய்கிறது. 

இந்த சம்பவத்தில் காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும் என்று திமுக கேட்டுக் கொண்டுள்ளது. 

டெலிட் செய்யப்பட்ட பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இந்த பதிவை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share