RTI: இனி சட்டம்-ஒழுங்கு தகவல்கள் இரகசியமா? விஜய் அரசுக்கு குவியும் கண்டனங்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ், தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொதுத் துறை’ (சட்டம் மற்றும் ஒழுங்கு) குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தவெக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், “பொது துறையை (சட்டம் மற்றும் ஒழுங்கு) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) இருந்து விலக்கு அளிக்கும் அரசின் இந்த நடவடிக்கை, ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு கொண்டு வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க RTI சட்டம், இந்தியா முழுவதும் ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நினைவுகூர்வது அவசியம்.

ADVERTISEMENT

காவல்துறை துப்பாக்கிச் சூடு, காவலில் நடக்கும் மரணங்கள், சித்ரவதைகள், கைதிகளின் மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பு தொடர்பான தடுப்புக் காவல் வழக்குகள், சாதி மற்றும் சமூக மோதல் அறிக்கைகள், அரசியல் ரீதியாக உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் மற்றும் அவதூறான கட்டுரைகள், செய்திகள், உரைகள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான விவகாரங்கள் போன்ற மிகவும் முக்கியமான விஷயங்களைச் சட்டம் மற்றும் ஒழுங்குத் துறை கையாள்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் தற்போது பொதுமக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன.

இத்தகைய பின்னோக்கிய நடவடிக்கைகள் வெளிப்படையான நிர்வாகத்திற்கு அழகல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டம் விரிவாக்கப்பட வேண்டுமே தவிர, சுருக்கப்படக் கூடாது முதல்வரே” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில்,”தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு – பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சும் தவெக அரசால் எப்படி வெளிப்படையான ஆட்சியை வழங்க முடியும்?

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வரும் சமுதாய மற்றும் சாதிய மோதல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாணவர்கள், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான விவரங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் தாராளப்புழக்கத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்கும் அனைத்து தகவல்களும் Intelligence உடன் தொடர்புடையது என வகைப்படுத்தி மூடி மறைக்க முயல்வது தன் நிர்வாகத் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் அதிகார பயன்பாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களை மக்களின் பார்வைக்கு எட்டாத வகையில் மறைத்து வைப்பது எந்த வெளிப்படைத்தன்மையில் வருகிறது என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் அரசின் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்க முயலும் தவெக அரசு, தனது ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை முழுமையாகத் துண்டித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசு நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகமாக இருக்கவே முடியாது என்பதை உணர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளிக்கும் அரசிதழை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், ” தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள்.

காவல் மரணங்கள் நடக்கின்றன.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுகிறது.

கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல் துறை.

நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டம் & ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது தமிழ்நாட்டை “போலீஸ் ஸ்டேட்டாக” மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி.

இந்த உத்தரவை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share