ஆந்திரா வழியில் நியாயவிலைக் கடைகளில் சன்ன ரக அரிசி விற்க வேண்டும்! – அன்புமணி

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் அரிசி விலை ரூ.40 வரை உயர்ந்துள்ள நிலையில் ஆந்திரா வழியில் கிலோ ரூ.50க்கு நியாயவிலைக் கடைகளில் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் அன்றாடப் பயன்பாட்டுக்கான அரிசி விலைகள் கடந்த இரு மாதங்களில் கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தவித்து வரும் நிலையில், அவர்களின் துயரங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதத்திலிருந்தே அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் இட்லி அரிசி விலை கிலோவுக்கு ரூ.8 வரையிலும், சன்னரக அரிசி விலை ரூ.15 வரையிலும், சில வகை அரிசி விலை ரூ.30 வரையிலும் உயர்ந்தன. அதை சுட்டிக்காட்டி, அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜூலை 22ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரிசி விலை கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.

இரு மாதங்களுக்கு முன் மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி போன்ற அரிசி வகைகளின் விலை 50 ரூபாயிலிருந்து ரூ.65 ஆக உயர்ந்தது. இப்போது கிலோவுக்கு மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.85 ஆக அதிகரித்திருக்கிறது. அதி சன்னரக அரிசி விலை முதலில் ரூ.55லிருந்து ரூ.75 ஆகவும், இப்போது ரூ. 90 முதல் ரூ.95 ஆக உயர்ந்துள்ளது. இட்லி அரிசி விலை ரூ.43லிருந்து படிப்படியாக அதிகரித்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. உயர் ரக இட்லி அரிசி கிலோ ரூ.71 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை சாப்பாட்டு அரிசி விலை கிலோ ரூ.70க்கும் கூடுதலாக இல்லை. ஆனால், இப்போது ரூ.70க்கும் குறைவாக எந்த சாப்பாட்டு அரிசியும் கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் இட்லி அரிசியின் அதிகபட்ச விலை ரூ.50 ஆக இருந்தது. ஆனால், இப்போது குறைந்தபட்ச விலையே ரூ.60 ஆகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

பருவமழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி குறைந்ததும் விலை உயர்வுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், இது மட்டுமே அரிசி விலை உயர்வுக்கு காரணம் அல்ல. கடந்த ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களிலும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நெல் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையில் இந்த அளவுக்கு விலை உயர வாய்ப்புகள் இல்லை. மாறாக, நடப்பாண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் நெல் விளைச்சல் குறையும்; அதனால் அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் தான் அனைத்து வகை அரிசிகளின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அரிசி விலை மட்டுமின்றி, பருப்பு வகைகள், சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தைக் குறைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தல், மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டு சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தக் கடமையை அண்டை மாநிலமான ஆந்திர அரசு சிறப்பாக செய்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், ரயத்து பசார் எனப்படும் உழவர் சந்தைகளில் அரிசி விற்பனைக்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, பாபட்லா எனப்படும் சம்பா மசூரி, கே.என்.எம் எனப்படும் சோனா மசூரி ஆகிய அரிசி ரகங்கள் கிலோ ரூ.50 என்ற விலையிலும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையிலும் விற்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் கிலோ ரூ.90&95 வரை விற்பனை செய்யபடும் இந்த வகை அரிசி கிட்டத்தட்ட பாதி விலைக்கு விற்கப்படுவதாலும், வெளிச்சந்தையில் ரூ.75 வரை விற்கப்படும் வெங்காயம் பாதிக்கும் குறைவான விலையில் கிடைப்பதாலும் அம்மாநில மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் சன்னரக அரிசி, வெங்காயம் உள்ளிட்ட பொருள்களின் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகளில் கிலோ ரூ.35 என்ற விலையில், ஓரு குடும்பத்திற்கு ஒரு கிலோ வீதம் மொத்தம் 1000 டன் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, கடந்த 3&ஆம் தேதி விற்பனையைத் தொடங்கியது. ஆனால், மிகக்குறைந்த அளவிலேயே வெங்காயம் வழங்கப்பட்டதால், ஒரு மணி நேரத்தில் அனைத்து வெங்காயமும் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், கூடுதலாக வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதைப் போலவே வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை.

ஆந்திர மாநில அரசை பின்பற்றி, தமிழ்நாட்டிலும் இலவசமாக வழங்கப்படும் அரிசி தவிர, சன்னரக அரிசியை கிலோ ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள் மூலம் இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share