தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் பகுதியில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் சுப நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றிருந்த நிலையில் இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் பதிவில், மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த தவெக அரசு எதிர்பார்க்கிறது?
உயிரச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல் கூட இந்த சொரணையற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.”என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் தீபக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுராந்தகத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி, பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மனதை உலுக்குகிறது. தன்னைத் தானே முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முடியாத ஒரு குழந்தையைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. குழந்தைகளின் பாதுகாப்பையும், குறிப்பாக மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் நமது சமூகமும் அரசும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலை இது வெளிப்படுத்துகிறது.
இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் மனம் பதறுகிறது. அந்தச் சிறுமி எந்த அளவுக்கு அச்சத்தையும் வேதனையையும் அனுபவித்திருப்பாள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மாற்றுத்திறனாளி என்பதற்காக ஒரு குழந்தையின் கண்ணியம், பாதுகாப்பு, உடல் சுயாட்சி ஆகியவை எந்த வகையிலும் குறைவானவை அல்ல. மாறாக, அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பும் ஆதரவும் வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும்.
L2 சட்டங்கள் உள்ளன. குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் நம்மிடம் உள்ளன. தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் சட்டங்கள் இருப்பது மட்டும் போதாது; அவை தரையில் செயல்பட வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புகார் அளிக்கும் பாதுகாப்பான வழிமுறைகள், உடனடி மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவு, சட்ட உதவி, விசாரணையின் போது குழந்தைக்கு ஏற்ற அணுகுமுறை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.
ஒருபுறம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைப் பெற்றவுடன் கைவிடும் மனநிலை இன்னும் சில இடங்களில் இருப்பதை நாம் பார்க்கிறோம். மறுபுறம். மாற்றுத்திறனாளி குழந்தையை அன்போடு வளர்த்து, கல்வி கொடுத்து, சமூகத்தில் சம உரிமையுடன் வாழச் செய்யும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அத்தகைய குடும்பத்தின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது மிகுந்த வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உங்களது நேரடி பொறுப்பில் இருக்கிறது. நியாபகம் இருக்கா?
இந்தச் சம்பவத்தில் அரசு தன்னுடைய பொறுப்பைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். குற்றச்சாட்டு தொடர்பாக நேர்மையான, விரைவான மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உகந்த விசாரணை நடைபெற வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் அதைவிட முக்கியமாக. பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான மருத்துவம், உளவியல் ஆலோசனை, சட்ட உதவி மற்றும் பாதுகாப்பு ஆகியவை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெறும் நலத்திட்டப் பிரச்சினை அல்ல; அது மனித உரிமை, குழந்தை உரிமை மற்றும் சமூக நீதியின் கேள்வி.
“எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; பரிதாபம் வேண்டாம். எங்களுக்கு உரிமைகள் வேண்டும்; வெறும் அறிவிப்புகள் வேண்டாம்.
இச்சம்பவம் குறித்து அரசு மௌனம் காக்காமல் உணர்வுப் பூர்வமான பொறுப்பான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் எதிர்பார்ப்பு.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
