தியாக தீபம் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும், திலீபனின் 31-ஆவது நினைவு நாள் இன்று.(செப்டம்பர் 26) அனுசரிக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இலங்கையின் யாழ்ப்பாணம் நல்லூரில் சொட்டு நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தவர் திலீபன். திலீபனின் 31-வது நினைவேந்தல் உலகம் முழுவதும் தமிழர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டது.
1987-ம் ஆண்டு, இலங்கையில் முகாமிட்டிருந்த இந்திய அமைதிப்படையிடம் திலீபன் முன்வைத்த 5 அம்ச கோரிக்கைகள் இவைதான்:
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியே 12 நாட்கள் சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தார் திலீபன்
திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவிலில் வழக்கமான நினைவேந்தல் நிகழ்வாக இல்லாமல் குல தெய்வ வழிபாட்டைப் போல

’தூக்கு காவடி’ எடுத்து வந்து திலீபன் நினைவைப் போற்றினர். இந்த நிகழ்வுக்கு இலங்கை போலீசார் தடை விதித்தனர். ஆனால் நீதிமன்றம் இந்த தடையை நீக்கியது.
தமிழர் வாழ்வியலில் மக்கள் நலன் காத்தவர்கள் நடுகல் வீரர்களாக, குல தெய்வங்களாக வழிபடுவதும் அவர்களுக்கு இத்தகைய வழிபாட்டு முறைகள் மூலம் சிறப்பு செய்வதும் தொன்று தொட்டு வரும் பண்பாடு. அதையே யாழ்ப்பாண இளைஞர்களும் இன்று திலீபனுக்காக செய்திருந்தனர்.
இதேபோல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் திலீபன் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் பொறுப்பு துணைவேந்தர் பிரின்ஸ் ஜெயதேவன் முதலில் பொதுச்சுடரேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் வேலனை வங்காளவடிசந்தியில் உள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பருத்தித்துறையில் மருத சிவன் கோவிலடி வளாகத்தில் உள்ள நினைவுத் தூபி முன்பாக திலீபன் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
