தவெகவை விட ஒரு வாக்கு கூடுதலாக திமுக பெற்றுவிடுமா? எனக் கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, தவெக வெற்றி பெற்றால், உதயநிதி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அக். 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுகவை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி கூறுவார். ஆனால், இப்போது ஒருவர் உள்ளார். திமுகவை அழிக்க வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.
அறிஞர் அண்ணா 1967-ல் மக்கள் ஆட்சியைக் கொண்டு வந்தார். அதன் பிறகு கலைஞர் கருணாநிதி குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்து, பிறகு மன்னர் ஆட்சியைக் கொண்டு வந்தார். பின்னர் வந்த மு.க. ஸ்டாலினுக்குத் தன் மகனைப் பெரிய மன்னனாக்க வேண்டும் என்ற கனவு உள்ளது.
நல்ல மன்னன் போருக்குச் சென்று மக்களைப் பாதுகாப்பார். இன்னும் சில மன்னர்கள் அந்தப்புரத்தில் மட்டுமே இருப்பார்கள். தேர்தல் என்றால் என்ன? அது ஒரு யுத்தம். அந்த யுத்தத்திற்குள் திடீரென வந்த இளவரசருக்கு அந்தப்புரத்தில் கற்றுக்கொண்ட ஆபாசம்தான் வாயில் வரும். மன்னராட்சியை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் தலைவன் வந்துள்ளான். அதுதான் முதல்வர் ஜோசப் விஜய்.
இளவரசர் உதயநிதி எங்கள் தலைவர் அளவுக்குப் பேச வேண்டாம். எங்களுக்கு முதலில் பதில் கூறுங்கள். நான் ஓபன் சேலஞ்ச் சொல்லிட்டேன். மதுராந்தகத்தில் எங்கள் அக்கா விசில் சின்னத்தில் நின்று ஒரு லட்சம் வாக்கில் ஜெயிக்கப் போகிறார். எங்களை விட நீங்கள் ஒரு ஓட்டு அதிகமாக வாங்கி காட்டுங்கள். நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன். காது கேட்கிறதா, உதயநிதி அவர்களே? பக்கத்தில்தான் இருக்கிறாராம். நீங்கள் திமுகவில் இருக்கக்கூடிய எல்லா பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு ரிட்டயர்மென்ட் ஆவதற்கு ரெடியா?
சத்தியமாக அவர்கள் இந்த சேலஞ்சை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காது கேட்காத மாதிரி போய்விடுவார் உதயநிதி. நாங்கள் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள் 70 ஆண்டு பழமையான கட்சிதானே, மதுராந்தகத்தில் தவெகவை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கிக் காட்டுங்கள்” என சவால் விடுத்தார்.
