தவெக வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக் கூடாது! கொந்தளிக்கும் சிபிஎம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக வேட்பாளர்கள் மிகவும் பொறுப்பற்றத்தனமாகவும் நெறிமுறை தவறியும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. த.வெ.க. வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் அந்த வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் இன்று (செப்டம்பர் 24) சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இடைத்தேர்தல் இடதுசாரிகள் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுராந்தகத்தில் என்னுடைய கட்சியினுடைய மாநிலக் குழு உறுப்பினர் சுகந்தி அவர்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகிறார். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதனுடைய வேட்பாளராக கதிர் அரிவாள் சின்னத்தில் லட்சுமணன் போட்டியிடுகிறார். நிச்சயமாக எங்களது இடதுசாரிகளுக்கு சாதகமான ஒரு தேர்தல் முடிவாக அமையும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.

நாங்கள் கூட்டணியில் இல்லை. அரசுக்கு ஆதரவு கொடுக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இடதுசாரிகள் இணைந்து நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மக்களுடைய பிரச்சினைகளில் அல்லது மாநில அளவில் இடதுசாரிகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய, எந்த அணியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரி கட்சிகளோ இடம் பெறவில்லை. அந்த அடிப்படையில் தான் இடதுசாரிகள் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம்.” என்றார்.

ADVERTISEMENT

ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்பு அளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “தேர்தல் நடந்து முடிந்து 20 நாட்களில் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று இப்போது வாக்கு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக ராஜினாமா செய்தார்கள், எதற்காக இப்போது மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிறார்கள்? இதுதான் என்னுடைய கேள்வி.

அந்த வேட்பாளர்கள் ரொம்பவும் பொறுப்பற்றத்தனமாகவும் நெறிமுறை தவறியும் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. த.வெ.க. வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக் கூடாது.

ADVERTISEMENT

அப்படி ஒருவேளை தப்பித்தவறி வெற்றி பெற்றால், இன்னும் அதிமுக, திமுகவில் இருந்து பலரும் இப்படி ராஜினாமா செய்வது, திரும்ப இடைத்தேர்தல் வருவது, திரும்ப அவர்கள் போய் அங்கே சேருவது என்ற விஷயத்திற்கு அதற்கு ஊக்கம் தரக்கூடிய வகையிலும், ஆதரவளிக்கக்கூடிய விதமாகவும் இருக்கும்.

இதனால் தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதியினுடைய வாக்காளர்களுக்கு என்னுடைய வேண்டுகோள், இப்படி வாக்குகளைப் பெற்று வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைத்து நெறிமுறையற்ற முறையில் நடந்து கொண்ட இந்த இரண்டு வேட்பாளர்களும் தோற்கடிக்கப்படுவதே தான் இந்த தேர்தலில் முதன்மையான கடமை என்பதை நான் வலியுறுத்தியிருக்கிறேன். திரும்பவும் அதை வலியுறுத்துறேன்.”

ADVERTISEMENT

தவெக ஜெயித்தாலும் கம்யூனிஸ்ட்கள் ஜெயித்தாலும் அரசுக்கு ஆதரவுதானே தரப்போகிறீர்கள் இதனால் என்ன பெரிய வித்தியாசம் என்ற கேள்விக்கு, “கடந்த நான்கு மாத காலத்தில் இந்த அரசாங்கத்தை எதிர்த்து எங்களை விட கூடுதலான போராட்டம் நடத்துன வேற ஒரு கட்சியைச் சொல்லுங்க? அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதினாலேயே, உடன்படுகிற விஷயத்தில் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம், வரவேற்கிறோம். முரண்படுகிற விஷயத்தில் எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம், எதிர்த்துப் போராட்டங்களை நடத்துகிறோம். அந்த அணுகுமுறை என்பது தொடரும். இது ஆரம்பத்திலிருந்தே தொடர்கிறது. ஆகவே மீண்டும் நாங்கள் வெற்றி பெற்றாலும் இந்த அணுகுமுறைதான் எங்களுடைய அணுகுமுறை.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share