“இடைத்தேர்தலில் பணம் தாராளம்… : தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்!

Published On:

| By Kavi

இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தினர் பண பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. 

வரும் அக்டோபர் 6ஆம் தேதி தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இதில் 5 முனை போட்டி நிலவுவதால் அந்தந்த கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் ராஜினாமா செய்து, மீண்டும் தமிழக வெற்றி கழக வேட்பாளராக அதே தொகுதிகளில் போட்டியிடும் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோருக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. 

ADVERTISEMENT

இந்த சூழலில் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தினர் பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக எம்பி இன்பதுரை புகார் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், “மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக மீறப்படுகின்றன. 

ADVERTISEMENT

செப்டம்பர் 22, 2026 அன்று தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்காளர்களை கவர்வதற்காக, ரெட்டிபாளையம் பகுதியில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறிப்பிட்ட பகுதி மட்டுமின்றி அந்த தொகுதி முழுவதும் இதுபோன்று சட்டவிரோத பண விநியோகமும் வாக்காளர்களுக்கு ஆசை காட்டும் நடவடிக்கைகளும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதாக நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெறும் இத்தகைய செயல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நேரடியாக சீர்குலைப்பதோடு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ல் பிரிவு 123(1)ன் ஊழல் நடவடிக்கையாகவும், பாரதிய நியாய சன்ஹிதா 2023ன் கீழ் குற்றவியல் குற்றமாகவும் அமைகிறது. 

எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள் முழுவதிலும் உடனடியாக விரிவான கள ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகள், சிசிடிவி காட்சிகள், கள வீடியோ பதிவுகள் மற்றும் சமூக வலைதள மின்சார ஆதாரங்கள் ஆகியவை மாற்றப்படுவதற்கோ அல்லது அழிக்கப்படுவதற்கோ முன்பு உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து பாதுகாக்க வேண்டும். 

அரசியல் பின்னணி, அதிகாரத்தை பொருட்படுத்தாமல் இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். 

மேற்கொண்டு பணப்பட்டுவாடா நடைபெறாமல் இருக்க மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் உள்ள அனைத்து பதற்றமான பகுதிகளிலும் பறக்கும் படைகள், செக்போஸ்ட் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share