புதிய தலைமை செயலக அரசாணை ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Nirmal Kumar Press Meet

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரைவில் விரிவான விளக்கம் அளிப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீட்டுவசதி வாரியம், வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடியில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை கடந்த 8-ஆம் தேதி வெளியானது.

ADVERTISEMENT

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, அப்பகுதி மீனவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ஒரு திட்டம் என்றால் முதலில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்படும். அதன் பிறகுதான் அதைச் செயல்படுத்தலாமா, வேண்டாமா என்று முதலமைச்சர் முடிவு செய்வார். மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்; அவர்களின் கருத்தையும் கேட்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆனால், முதலமைச்சர் முடிவு செய்யாமல் அரசாணை எவ்வாறு வெளியானது என எதிர்க்கட்சிகளும் பலதரப்பினரும் கேள்வி எழுப்பி, அவரது கருத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்:

செக்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் இதுகுறித்துக் கூறுகையில்: “புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விரைவில் விரிவான விளக்கம் அளிப்பார். மக்களுக்கு அல்லது மீனவர்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு நிச்சயமாகச் செய்யாது.

ADVERTISEMENT

தற்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த ஆய்வு மட்டுமே நடைபெற்று வருகிறது. புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்பது கடந்த 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையாகும். தற்போதுள்ள அனைத்து அரசு தலைமை அலுவலகங்களும் சென்னை மாநகரில்தான் அமைந்துள்ளன. எனவே, அதற்கு அருகிலேயே வேறு எந்தெந்த இடங்களில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share