இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
அரசியல் ஆதாயங்களுக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுபவர்களிடம், தேர்தல் செலவுக்கான தொகையை வசூலிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ”வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தலுக்கான செலவை வசூலிக்க உரிய நடைமுறையை வகுக்க உத்தரவிட வேண்டும்.
ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் இருந்து தேர்தல் செலவை வசூலிப்பது தொடர்பாகவும், அவர்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிப்பது தொடர்பாகவும் எந்த சட்டமும் இல்லாத நிலையில் நீதிமன்றம் சட்ட திருத்தம் கொண்டு வர முடியுமா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது முந்தைய தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட விவரங்களை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பலாம்
ஆனால் அந்த செலவை போட்டியிடும் வேட்பாளர்களிடம் வசூலிக்கும்படி கேட்க முடியாது. அதேபோல குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் முடியாது என்று கூறி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.
ஐந்து ஆணடுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் மட்டுமே சட்டத்தை இயற்ற முடியும் என்று கூறி ராஜினாமா எம்எல்ஏக்கள் போட்டியிடுவதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.
