5 அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் மின்வெட்டு: கோவையில் மட்டும் ரூ. 30 கோடி மெஷின்கள் சேதம்! – அன்புமணி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக அரசும் மின்சார வாரியமும் இனியும் அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்த அவர் தனது எக்ஸ் பதிவில், “திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இன்று காலை நடைபெற்ற செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கலந்தாய்வுக் கூட்டத்தின் போது மின் தடை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடைகளும் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

தலைநகரம் சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் அழுத்தம் சீராக இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மட்டும் கோவை பகுதியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் சேதமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் கூடுதலான கருவிகள் சேதமடைந்துள்ளன.

வழக்கத்தை விட மின்சாரத்தின் தேவை அதிகமாக இருப்பது தான் மின் வெட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து வாங்கப்படுவதாகவும், அதனால் மின்வெட்டு சீராகி விட்டதாகவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், கள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மின்வெட்டை சரி செய்வது சாத்தியமில்லாத செயல் அல்ல. தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை விட உற்பத்தியும், கொள்முதலும் சேர்ந்து 2000 மெகாவாட் குறைவாக இருப்பது தான் மின் வெட்டுக்கு காரணம் ஆகும். தேசிய சந்தையில் மின்சாரம் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து கூட மின்சாரம் வாங்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் முழுமையாக மேற்கொள்ளப்படாதது மின்வெட்டு மற்றும் மின் தடைக்கு காரணம் ஆகும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்த பிறகும் மின்வெட்டு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் இனியும் அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில்மின்வெட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share