சக்திவேல் வீராசாமி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி சொன்ன ஒரு கருத்திற்காக , அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்கள் தவெகவினர்.
சமூகவலைதளங்களில் அவர் பற்றிய வசைகள் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன. களத்தில், தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், “விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”, “விஜய் சேதுபதிக்கு கட்டம் சரியில்லை. இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது” என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் கூட ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டை இதுவரை பல முதலமைச்சர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே விமர்சனத்துக்கு ஆளானவர்கள். இவர்கள் மீது கேலிச்சித்திரங்கள், கட்டுரைகள் தீட்டப்பட்டிருக்கின்றன. முந்தைய முதலமைச்சர்கள் மீது மீம்கள், ட்ரோல் வீடியோக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காட்டமான கருத்துகளுடன் கூடிய எதிர்ப்பு போராட்டங்களும் நடந்திருக்கின்றன. ஆனால், விஜயை மட்டும் எவரும் எதுவும் சொல்லக்கூடாது, விமர்சிக்கக்கூடாது, குறைத்து பேசிவிடக்கூடாது என்று பொத்திப் பாதுகாப்பது ஏன்? இது என்ன மன்னராட்சியா, விஜய்க்கு நடந்தது பட்டாபிஷேகமா, பதவியேற்பா?

வெறும் சில மாதங்கள் ஆட்சிக்காலத்திலேயே, விஜயும் தவெகவும் தமிழ்நாட்டில் உருவாக்கிவரும் சூழல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தவெக, அரசியலமைப்பின் படி ஆட்சியமைத்திருக்கும் ஒரு கட்சி. விஜய், அதன் சார்பாக மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருப்பவர். அவர் உட்பட எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் அரசியலமைப்பு சத்தியப் பிரமாணம் எடுத்தவர்கள். இங்கிருக்கும் அத்தனை மக்களின் சுதந்திரத்தையும் கருத்துரிமையையும் பேணிக்காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், இரண்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அவர்களே மாறி வருகிறார்கள்.
இப்போது விஜய் சேதுபதி செய்தியில் அடிபடுகிறார். இதற்கு முன்பாக, ரஜினிகாந்த்தின் மீதும் இதே மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் எதுவும் செய்யவில்லை. தன் மீதான ஒரு கருத்து வந்தபோது காலம் பதில் சொல்லும் என்று சொன்னார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சென்று சந்தித்தார். விஜய் முதலமைச்சரானதும் வாழ்த்து சொல்லாமல் தவிர்த்தார். இவ்வளவு தான். உடனே, அவர் விஜயை மதிக்காமல் இருக்கிறார் என்று புரிந்துகொண்டு, இன்று வரை வன்மமும் வஞ்சமும் கொட்டப்படுகிறது தவெகவினரால்.

இங்கே சில கேள்விகள். ஏன் விஜய் பேசியதில்லையா அரசியல் பஞ்ச் டயலாக்குகள்? காலம் பதில் சொல்லும் போல அத்தனை அரசியல் பஞ்ச் டயலாக்குகள் உண்டு அவர் வாழ்க்கையில். விஜய் வாழ்க்கையில் எந்த அரசியல் தலைவரையும் சந்திக்காமல் முதலமைச்சராகி விட்டாரா? ரஜினியேனும் நண்பரென சந்தித்தேன் என்றார். ஆனால், விஜய் அரசியல் ஆதரவே அளித்தார் ஜெயலலிதாவுக்கு. அனைவருக்கும் அனைத்து தருணங்களிலும் வாழ்த்துகளை அள்ளி தெளித்தவரா விஜய்? அவர் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக திரைப்பிரபலம். கடந்த 10 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரம். எத்தனை சாதனையாளர்களுக்கு அவர் சொன்னார் வாழ்த்து?
இவற்றையெல்லாம் விஜய் ஏன் செய்தார் அல்லது ஏன் செய்யவில்லை என்று எவரும் கேட்கவில்லை. அவர் வாழ்க்கை, அவர் முடிவு. ஆனால், அதே வாழ்க்கையையும் முடிவையும் இன்னொருவர் செய்யும் போது எங்கிருந்து வருகிறது இத்தனை வன்மமும் வஞ்சமும்? இதற்கு, ரஜினியை முன்மாதிரியாகச் சொல்லி வளர்ந்தவர் விஜய். சூப்பர்ஸ்டாரின் சீடன் என்றும் அடையாளப்படுத்தியவர். ரஜினி புகழ், நல்ல பொருளாதாரம் என வாழ்பவர். அவர் தங்கள் தலைவனுக்கு பிடிக்காத ஒன்றைச் செய்ததற்காக இத்தனை ஆத்திரம் காட்டப்படுகிறது என்றால், விஜயை எதிர்க்கும் சாமானிய மக்களின் கதி என்ன?

விஜய் மற்றும் தவெகவின் இந்த செயலை, மே 4க்கு பிறகு மட்டும் பொருத்திப் பார்க்க முடியாது. அவர் சினிமா காலத்தின் இறுதியாண்டுகளையும் கவனத்தில் எடுத்தே பார்க்க வேண்டும். இந்த காலகட்டம் மிகமுக்கியமானது. ஏனென்றால், இந்த காலத்தில் தான் விஜய் எனும் பிம்பம் பூதாகரமாக உருவாக்கப்பட்டது. அவரது திரை எதிரிகளின் மீது வன்மம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. சக திரைப்படக் கலைஞர்கள் விஜயைப் பிடித்தவர்களாக, அதாவது, ‘அணில்’களாக காட்டிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால், அவர்கள் படத்திற்கு இவர்கள் ‘NOC’ தரமாட்டார்கள்.
எப்படியொரு கூட்டத்தை உருவாக்கி விட்டிருக்கிறார் விஜய். தேர்தல் கட்சியாக இருக்கும் வரை எந்த விளைவுகளும் வெளியே தெரியவில்லை. ஆனால், இப்போது ஆளுங்கட்சியானதும், அதிகாரம் அமைந்ததும், இவர்கள் மையக் கவனம் கொண்டதும், அத்தனை கோலங்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. சினிமாத்துறையில் செய்த அத்தனை கதையாடல் வித்தைகளையும், திட்டமிட்ட தாக்குதல்களையும், தறிகெட்டத்தனத்தையும் அரசியலுக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் கொண்டுவந்திருக்கிறார்கள். விஜய், அத்தனையையும் பார்த்துக்கொண்டு முன்புபோல கமுக்கமாக அமர்ந்திருக்கிறார். சினிமாக்காரர்களில் பெரும்பாலானோருக்கு வாய் இல்லை. ஆனால், மக்களுக்கு கண், வாய், மனசாட்சி எல்லாம் இருக்கிறது!
விஜயின் ஆட்சியில் பத்திரிகைகளின் தடயமே இல்லை. மாறாக, காசுக்கு துதிபாடும் ‘ஹாய் பிரண்ட்ஸ்’ இன்ஃபுளூயன்சர் கூட்டம் வளர்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் அரசு நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கப்பட்ட வரலாறு இல்லை. ஆனால், விஜயின் ஆட்சியில் அது நடந்தது. இதுவரை எந்த ஆட்சியிலும் முதலமைச்சர் பத்திரிகைகளுக்கு ஒரு பேட்டியோ, நேர்காணலோ அளிக்காமல் இருந்ததில்லை. ஆனால், விஜயின் முகத்தைப் பார்ப்பதே பத்திரிகையாளர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. மீண்டும் அதே சொல்… இது மன்னராட்சியா? நடந்தது பட்டாபிஷேகமே தானா? அட, உலகமெங்கும் மன்னர்கள் கூட பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள்!

பத்திரிகையாளர்கள் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் முத்திரை குத்தப்பட்டது அறிந்த வரலாறு. அவர்களின் நியாயமான கருத்துகளுக்கும் வண்ணம் பூசப்பட்டன. பல பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக கண்ணீரோடு அதைப் பதிவு செய்தார்கள். இதற்காக திமுகவுக்கு எந்நாளும் மன்னிப்பு இல்லை. அவர்களின் தோல்விக்கு மக்கள் எழுதிய மடலில், கடைசிவரி அந்தக் கண்ணீரால் ஆனது. ஆனால், அந்தக் கட்சி செய்த குறைகளை சரிசெய்வோம் என்று சொல்லி, அதாவது மிகப்பிரபலமான ‘தீயசக்தியாக இல்லாத தூயசக்தி’யாக செயல்படுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக என்ன செய்கிறது? அதையே இன்னும் அப்பட்டமாக, கட்டுக்கோப்பாக செய்கிறது.
திமுகவுக்கு சங்கி, தற்குறி ஆயுதங்களென்றால், தவெகவுக்கு ‘கொத்தூஸ்’. விமர்சிக்கும், எதிர்த்துக் கேள்விகேட்கும் அத்தனைப் பத்திரிகையாளர்களுமே கொத்தூஸ். அவர்களின் கருத்துகள் ஒரேயடியாக நிராகரிக்கப்படுகின்றன. அவர்களின் கோரிக்கைகள் குப்பைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் கொஞ்சம் வாதத்தை நீட்டினால், “திமுக ஆட்சிக்காலத்தில் இதைச் சொல்ல வேண்டியது தானே, ஸ்டாலினைக் கேட்டாயா, உதயநிதியைக் கேட்டாயா” என்று வசைகள். எல்லாப் பத்திரிகையாளர்களும் அமைதியாக இருந்திருப்பார்கள் நீங்கள் மாற்றம், சீர்திருத்தம், புரட்சி, அண்ணன் ஒரு மாடர்ன் சேகுவேரா என்று நீட்டி முழக்காமல் இருந்திருந்தால். இத்தனையும் சொன்னபின் கேட்கத்தான் செய்வார்கள்.
சமூகவலைதளங்கள் மக்கள் அரசின் மீதான கருத்துகளை, விமர்சனங்களை, கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பிரதான இடமாக திகழ்கின்றன. தவெக ஆட்சி பிரச்சனைகளே இல்லாத ‘எங்கும் சுவர்க்கம், எல்லாம் சுபிட்சம்’ என்ற முன்னுதாரண ஆட்சியாக இல்லை. தீராத மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் மக்களை நெருக்குகின்றன. குறைந்த காலத்திலேயே மலையென ஊழல் புகார்கள் பெருகுகின்றன. குழந்தைகளுக்கு ஊட்டும் ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. வளர்ச்சித் திட்டங்கள் திடீர் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு மோசமாகிக் கொண்டே போகிறது.

ஒரு முதலமைச்சராகவும் விஜய் சரியான முன்னுதாரணத்தை அமைப்பவராக இல்லை. சென்னையை தாண்டி அவர் எங்கும் அவ்வளவாக கால் பதிப்பதில்லை. சென்னையிலேயே அவர் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்துவந்ததோடு சரி. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் இல்லை. அறிவிப்புகளும் எல்லாம் விவாதத்திற்கு இடமற்ற 110 அறிவிப்புகள். மாநிலத்தில் பல பிரச்சனைகள் இருக்க, அவர் தனது திரை நண்பரின் கார் பந்தயத்தை சிறப்பிக்கச் செல்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பத்திரிகைகளைக் கண்டாலே பயந்து ஓடி ஒதுங்குகிறார்.

இவையெல்லாம் தலையாயப் பிரச்சனைகள். ஆனால், இவை பற்றி சமூகவலைதளத்தில் மக்கள் விமர்சிக்கவோ, விவாதிக்கவோ இடமில்லை. யாரேனும் விமர்சித்தால், அவர்களின் சமூகவலைதளக் கணக்குகள் நோட்டமிடப்படுகிறது. ரிப்போர்ட் செய்யப்படும் என்று பயமுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாமானியரும் தவெக ஐடி விங், ஃபேக்ட் செக்கிங் விங்குற்கு பயந்தே கருத்து வெளியிட வேண்டியிருக்கிறது. மக்கள் பலர் ஹிட்லர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உலகளவில் ஜனநாயகத்தின் உறைவிடமாகத் திகழும் இந்தியாவில் ஹிட்லர்களுக்கு என்ன வேலை? ஐந்து மாதத்திற்கே இப்படியென்றால், ஐந்தாண்டுகள் எப்படியிருக்கும்?

இளைஞர்களின், மாணவர்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் பெருவாரியான ஆதரவில் ஆட்சிக்கு வந்தவர் விஜய். அவர்கள் இவரை ஒரு புதிய சக்தியாக, உண்மையிலேயே மாற்றம் தரும் சக்தியாக பார்த்தார்கள். ஆனால், ஒரு இளைஞர், மாணவர், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என எல்லாம் சேர்ந்த பாரதிதாசன், தன்னுடைய உதவித்தொகைக்காக அரசை விமர்சித்தார் என்பதற்காக, நார் நாராக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், அவர் விவகாரம் நாடறிந்த செய்தியாக மாறிவிட்டது. தன்னுடைய தலைவனுக்கு இது பெரும் அவமானம் என, ஒரு அப்பாவி மாணவனை இலக்காக்கி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் தவெகவினர்.

இந்த விஜயின் அரசு ஒரு படி மேலே சென்று, அந்த மாணவனின் செலவு தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டது. அவர் நாடகமாடுகிறார், பொய் சொல்கிறார் என அதிகாரப்பூர்வ அறிக்கையே விட்டது. இப்படிச் செய்தால் இனி எந்த மாணவன், மாணவி தனக்காகவும், சமூகத்துக்காகவும் குரல் எழுப்புவார் என்ற சிறு ஜனநாயக உணர்வும் இல்லை. அல்லது அப்படியொரு உருத்தெரியா அச்சத்தை விதைப்பது தான் இவர்களின் நோக்கம். இனி எந்த மாணவரும் தவெக அரசையோ, அதன் தலைவர் விஜயையோ எதிர்க்க முன்வர மாட்டார்கள். அவர்களின் நாக்கு கல்வி எதிர்கால பயத்தாலும், அவதூறு பயத்தாலும் இறுக்கிக் கட்டப்பட்டு விட்டது.

இறுதியாக, விஜயின் ஆட்சியில் ஒரு புதுப்பழக்கமும் உண்டாக்கப்பட்டு வருகிறது கருத்துச் சொல்வதற்கு. இது மிக நுணுக்கமானது, ஆபத்தானது. அதாவது, எதுவாக இருந்தாலும் மரியாதையாகச் சொல்ல வேண்டும் இவர்களுக்கு. அறப்போர் இயக்கம் இதைச் சமீபத்தில் சந்தித்தது. இந்த ஆட்சியில் கட்டுக்கடங்காமல் சாலையோரங்களிலும், தெருக்களிலும் வைக்கப்படும் கட் அவுட்கள், பேனர்கள், கொடிக்கம்பங்களைப் பற்றி அந்த இயக்கம் விமர்சித்து கேள்வி கேட்டது. உடனே, “மரியாதையாகச் சொல்லுங்கள்” என்று பதில் வந்தது. இது தான் அத்தனைச் சாமானியர்கள் பேசும் போதும்.
முதலில் மரியாதை கேட்டுப்பெறுவது அல்ல, ஈட்டுவது. இரண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலோ, அல்லது வேறு எந்த சட்டத்திலோ அரசிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் மரியாதையாகத் தான் எதையும் சொல்ல வேண்டும் என்றில்லை. பெயர்… பெயர் ஒன்றைச்சொல்லி அழைத்து எதையும் சொன்னால் போதும். திடீரென எங்கிருந்து வந்தது இந்த மரியாதையாகச் சொல்லுங்கள், மாண்புமிகு போட்டுச் சொல்லுங்கள், மண்டியிட்டு வணங்குங்கள் என்ற வழக்கம்? பழைய வரி தான். ஆனால், இன்றும் என்றும் அது வழக்கொழியாது. ‘ஜனநாயகத்தில் மக்கள் தான் ஒரே எஜமானர்கள்’.

விஜயை திரைத்துறையின் கடவுளாக பிம்பம் கட்டிய கூட்டம், பேனர், போஸ்டர், பட்டாசு என அவருக்கான பக்தியை வாழ்வதற்கான முழு தகுதியாக ஆக்கிக்கொண்ட கூட்டம், தற்போது அவரது அருளால் அரசியல் பதவியையும், சமூக அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டதாக கருதுகிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டின் எட்டுகோடி மக்களும் அந்த கடவுள் பிம்பத்தை அப்படியே ஏற்று அடிபணிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. கடவுள் பிம்பத்தை சூடிக்கொண்டிருப்பவருக்கும் அதுவே தீராத ஆசை.
விஜய் ஒன்றும் கடவுள் இல்லை. அது விஜய் சேதுபதியோ, ரஜினிகாந்த்தோ, பாரதிதாசனோ, பத்திரிகையாளர்களோ, இயக்கங்களோ, சாமானிய மக்களோ அவரை வழிபட்டு காலடியில் கிடக்க வேண்டும் என்றும் அவசியமில்லை!
கட்டுரையாளர் குறிப்பு

சக்திவேல் வீராசாமி
சுயாதீனப் பத்திரிகையாளர் (Independent Journalist). விகடனில் வரவேற்பு பெற்ற பல அரசியல் கட்டுரைகளை எழுதியவர்.
