தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் கிரீன் காப்பர் என்ற பெயரில் திறக்க முயற்சி நடைபெறுகிறது; இதற்காக முதல்வர் விஜய்யை சந்திக்க ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் முயற்சிக்கிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (நவ.10) நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: ஸ்டெர்லைட்டை எதிர்த்து எத்தனை பெரிய போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.. ஸ்டெர்லைட்காரன் அனில் அகர்வால் தமிழ்நாடு அரசிடம் இந்தப் போராட்டத்தை நடத்த விடாதீர்கள் என்று தகவல் சொல்லிவிட்டான். அவன் தகவல் சொன்னால் என்ன? எடப்பாடி பழனிசாமி போலீஸை விட்டுச் சுட்டுக் கொன்றார். இது தொடர்பாக 2,000 பக்கத்துக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்.
இப்போது மீண்டும் அதே ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டுவருவதற்கு, ‘கிரீன் காப்பர்’ என்ற பெயரில் முயற்சி நடக்கிறது. இந்தியாவில் தாமிரம் கிடைக்கவில்லை, விலை கூடிவிட்டது, ஆகவே அதற்குத் தேவை அதிகமாக இருக்கிறது என்று மோடி ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது அதே தூத்துக்குடியில், அதே ஆலையில் உள்ள முக்கிய இயந்திரங்களை வைத்துக் கிரீன் காப்பர் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

நான் முதலமைச்சர் விஜய் அவர்களிடம் எந்தத் தனிப்பட்ட சிபாரிசுக்கும் போவதில்லை. முதலமைச்சரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். மகாராஷ்டிராவில் இருந்து விரட்டப்பட்டு, கோவாவில் அனுமதி மறுக்கப்பட்டு, குஜராத்துக்குள் நுழைய முடியாமல், ஜெயலலிதாவைப் பார்த்து ஒரே வாரத்தில் உரிமம் வாங்கியவர் அனில் அகர்வால். அதற்குப் பிறகு வந்த எல்லா அரசாங்கங்களையும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் அனில் அகர்வால்.
இப்போது உங்களிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டு முயற்சி செய்கிறார்கள் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. Give him appointment? அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்காதீர்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் கொடுக்காதீர்கள், மிஸ்டர் விஜய்.
வேதாந்தா குழுமம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நாளில் நான் கயத்தாறில் இருந்தேன். வழக்கறிஞர் முரளி எனக்குத் தகவல் சொன்னார். நீங்கள் வழக்கில் நேரடியாக மனுதாரராக இருக்கிறீர்கள். நாங்கள் வழக்கறிஞர்களாகப் போய் பேச முடியாது. நீங்கள் இருந்தால்தான் பேச முடியும் என்றார்.
இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுங்கள். நீதிபதிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார். உடனே ஒரு சகோதரர் வீட்டுக்குச் சென்றேன். வைஃபை இருக்கிறதா என்று கேட்டேன். நன்றாக வேலை செய்தது. எல்லாம் பிரமாதமாக இருந்தது. சரியாக 12 மணிக்கு வழக்கு எண்ணைச் சொன்னவுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினேன்.
My Lords, I have been fighting against this… என்று என்னுடைய வாதத்தை முன்வைத்தேன். அப்போது நீதிபதிகள் அமர்ந்திருந்தார்கள். பின்னர் வழக்கின் அடுத்த விசாரணைத் தேதியைப் பற்றிப் பேசினார்கள். நவம்பர் 16-ஆம் தேதிக்குப் பிறகு தேதி கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். நீதிபதிகள் நவம்பர் 23-ஆம் தேதி என்று சொன்னார்கள். நான் குறித்துக்கொண்டேன்.
ஆனால், முந்தாநாள் வழக்கறிஞர் முரளி தகவல் சொல்கிறார். என்னவென்று தெரியவில்லை, நவம்பர் 20-ஆம் தேதிக்கு மாற்றிப் போட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அறிவித்தது நவம்பர் 23-ஆம் தேதி. இப்போது பதிவில் நவம்பர் 20-ஆம் தேதி என்று இருக்கிறது. எனவே, என்னுடைய நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செய்துவிடுகிறேன். நீங்களே நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்தால்தான் நன்றாக இருக்கும் என்றார். நான் வருகிறேன். வழக்கில் மனுதாரர் நான்தானே? என்னால் முடிந்த அளவுக்குப் போராடுகிறேன் என்று சொன்னேன்.
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு ஒப்பந்தம் எடுத்தவர்களை வைத்து, 10 அல்லது 15 பேருக்குப் பணம் கொடுத்து மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக அவர்கள் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். என்னுடைய மனுவுக்கு எதிராகவும் இருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது? அது அந்த நீதிதேவதைக்கே வெளிச்சம்.
அடுத்து இந்தக் கோயம்புத்தூர் நூலகம். ஐயோ, படிக்க முடியவில்லை!
அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்று புத்தகங்களை வாங்கியிருக்கிறார்கள். என்னென்ன புத்தகங்கள் வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? அரசு தரப்பில் எப்போது உத்தரவு கொடுத்தார்கள்? யாருடைய புத்தகங்கள்? இந்த விவரங்களையெல்லாம் விசாரணை ஆணையம் அமைத்து வெளியே கொண்டுவர வேண்டும்.
எந்தத் தேதியில் உத்தரவு கொடுக்கப்பட்டது? உத்தரவு கொடுத்த அதிகாரி யார்? எல்லா விவரங்களும் வெளிவர வேண்டும்.
அவர்கள் கொடுத்த புத்தகங்களைப் படித்தால், புறநானூற்றைப் பற்றித் தெரியாத சமஸ்கிருதத்தில் யாரோ எழுதி வைத்ததுபோல இருக்கிறது. புறநானூற்றைப் பற்றி இவர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல் புத்தகத்துக்குத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். உள்ளே தமிழே கிடையாது. புத்தகத்தின் விலை ₹2,000, ₹2,500. ஊழல் என்னும் கொள்ளிவாய்ப் பிசாசு நூலகத்துக்குள் நுழைந்து ஆடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வைகோ பேசினார்.









