விஜய் பதவி விலக வேண்டும்! – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Nov 2026, 4:17 PM

பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, ஆட்சியாளர்களுக்கும் பாதுகாப்பில்லை – சட்டம் – ஒழுங்கைச் சீரழித்த முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு, ஆளும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் முறையற்ற எண்ணத்துடன் வாட்ஸ்அப் செய்தி அனுப்பியதாகவும், பின்னர் மதுபோதையில் அவரது இல்லத்திற்கே சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மாவட்டத்தின் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வால் இந்த அச்சுறுத்தல் என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னாவது? மாவட்ட ஆட்சித்தலைவருக்கே பாதுகாப்பில்லாத அளவிற்குத்தான் முதல்வர் ஜோசப் விஜய் இங்கு அலட்சிய ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்! பொதுவாக சமூக விரோதிகளிடமிருந்து பெண்களைக் காக்கத்தான் அரசுப் படைகள் தேவைப்படும்; ஆனால் தவெக ஆட்சியில், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவே தனியாக ஒரு ‘சிங்கப்பெண் காவல் படை’ அமைக்க வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்தில் தேனியில் காவல் ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், “அவர் சீருடையில் இல்லை” என்று கூறி அரசு சப்பைக்கட்டுக் கட்டுகிறது தவெக அரசு. காவல்துறையினருக்கே சீருடை இல்லையென்றால் பாதுகாப்பு இல்லை என்கிறபோது, அன்றாடம் வீதியில் நடமாடும் பாமர மக்களுக்கு இந்த தவெக ஆட்சியில் என்ன பாதுகாப்பு மிச்சமிருக்கிறது?

பண்டிகை நாளான தீபாவளி அன்று மட்டுமே தமிழகத்தில் 14 கொடூரக் கொலைகள் அரங்கேறியுள்ளன. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், பட்டப்பகலில் வெட்டுக்குத்துகள் என ஒட்டுமொத்த சட்டம் – ஒழுங்கும் முற்றிலும் தடம் புரண்டுள்ளது. ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களுக்கே பாதுகாப்பில்லை; பாதுகாப்பை வழங்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை; சாமானியப் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அறவே பாதுகாப்பில்லை! இத்தகைய காரணங்களாலேயே, “முதல்வர் திரு. ஜோசப் விஜய் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று நான் ஏற்கனவே ஆணித்தரமாகக் கூறினேன்.

ADVERTISEMENT

தன் கட்சி எம்.எல்.ஏ-க்களின் அராஜகங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு என்ற பெயரில் வெறும் கண்துடைப்பு நாடகங்களை நடத்தி, தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை முற்றிலுமாகச் சீரழித்துவிட்ட முதல்வர் விஜய் பதவியில் நீடிக்க எந்தத் தார்மீக உரிமையும் இல்லை; அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலகியே ஆக வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel