‘மக்கள் பிரதிநிதி பதவி பெண்களை மோசமாக அணுக விதிவிலக்காக இருக்க முடியுமா?’ மாதர் சங்கம்

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Nov 2026, 5:43 PM

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மீது சட்டரீதியான , கட்சி ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் எனஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, அத்தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

பெண்கள் பல்வேறு தடைகளைக் கடந்து கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் முன்னேறி வரும் சூழலில், அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அவமதிக்கும் இத்தகைய செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பெண்களை மோசமாக அணுகலாம் அச்சுறுத்தலாம் என்ற ஆணாதிக்க அதிகார மனப்பான்மையையே இந்த இத்தகைய புகார்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் பெண் அதிகாரிக்கே இந்த மோசமான சம்பவம் நடந்து ருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ADVERTISEMENT

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்குமான போராட்டத்திலும் பெண்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முன்னிற்கும். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை நிற்கிறது.

இப்புகார் குறித்து முதலமைச்சர் என்ற முறையில் விஜய் அவர்கள் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும் எந்தவித அரசியல் நிர்பந்தமும் பாரபட்சமும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்ற முறையில், தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்துள்ள இத்தகைய புகாரை அலட்சியப்படுத்தாமல், உடனடியாகக் கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் தவெக கட்சித் தலைமை தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
கட்சிப் பொறுப்பும் மக்கள் பிரதிநிதி என்ற பதவியும் பெண்களை மோசமாக நடத்துவதற்கும் அணுகுவதற்கும் விதிவிலக்காக இருக்க முடியாது.

பெண்களின் சுயமரியாதை பாதுகாத்து , பெண்கள் பணி செய்யும் இடங்களில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சூழல் அமைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தனது முகநூல் பதிவில், “பெண் ஆட்சியரிடமே சீண்டலா…?

அதுவும் MLA?

கொஞ்சமாவது படிங்கப்பா..” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel