தவெக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தவெக உறுப்பின அருள்விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதோடு, மதுபோதையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷின் கண்ணியக் குறைவான, ஒழுக்கக்கேடான, பாலியல் வன்மச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.









