தமிழக முதல்வர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் நடந்த விழாவில் இன்று (செப்டம்பர் 28) தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இத்திட்டத்திற்காக ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை இன்று தொடங்கி வைக்க தமிழக முதல்வர் விஜய் தனி விமானத்தில் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை மக்கள் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவனியாபுரம், பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி ரிங் ரோடு, கருப்பாயூரணி வழியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் வந்தடைந்தார். அங்கு அவரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தில் பிறந்த 25 குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் தங்க மோதிரங்களை அணிவித்தார். விழாவில் பல குழந்தைகள் மற்றும் தாய்மார்களுடன் முதல்வர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டிற்குச் சென்ற முதல்வர், பத்து குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தார்.
இதனிடையே, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் இத்திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
