தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட குண்டடம் மேற்கு ஒன்றியம் பெல்லம்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜிடம் அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை களத்தில் உள்ளன. தாராபுரத்தில் மீண்டும் சத்தியபாமா தவெக தரப்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் வாக்கு சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குண்டடம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அப்பகுதி மக்கள் சிலர் அவரிடம் வாக்கு சேகரிக்க வேண்டாம் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அருண்ராஜிடமும் பெல்லம்பட்டி பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “வாக்கு கேட்டு வராதீர்கள்” எனக் கூறி சிலர் அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் “நம்பிக்கையோடு ஓட்டு போடுங்கள்.. நீங்கள் கேட்பதைச் செய்து தருகிறோம்” என உறுதியளித்தார்.
முன்னதாக தாராபுரம் தவெக வேட்பாளருக்கு எதிராக சில இடங்களில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள், மாற்று அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு நடத்தப்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் உண்மையான மனநிலை தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபாமா, தாராபுரம் தொகுதியில் தனக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், திமுக மற்றும் அதிமுக தரப்புகள் இணைந்து திட்டமிட்டு எதிர்ப்பு போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்
