மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளின் பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சிபிஎம் கட்சி வலியுறுத்தி உள்ளது. மேலும் தனுஷ்கோடியில் ராம் யாத்திரை நடத்தப்பட்டதற்கும் சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்களை அரசு-தனியார் பங்களிப்பு என்ற பெயரில் முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க டெண்டர் கோரியுள்ள நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் தேவைக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு தாரை வார்க்கும் இந்த மக்கள் விரோத முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோவையின் குடிநீர் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் சேலம் குடிநீர் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்க முயன்றபோது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போதைய தவெக அரசும் அதே தனியார்மயக் கொள்கையை தீவிரமாக முன்னெடுத்து, முதன்முறையாக ஒட்டுமொத்த பாதாளச் சாக்கடை திட்டத்தையே தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
பாதாளச் சாக்கடை என்பது மக்களின் அடிப்படை சுகாதாரம் மற்றும் வாழ்வுரிமை சார்ந்த பொதுச் சேவையாகும். இதனை லாப நோக்கம் கொண்ட தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பின்வரும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்: பராமரிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மீது மிகக் கடுமையான கழிவுநீர்க் கட்டணங்கள் மற்றும் வரிகள் சுமத்தப்படும்.
மக்கள் தங்களின் புகார்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கும் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவை எதிர்பார்க்கும் அவலநிலை உருவாகும். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை தற்காலிகத் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு அவர்கள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாவார்கள்.
மதுரைக்கு ரூ. 2,377.48 கோடியும், நாகர்கோவிலுக்கு ரூ. 189.82 கோடியும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அரசே முழு நிதி ஒதுக்கீடு செய்து பொதுத்துறை மூலம் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டருக்கு கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது. இப்படி மீண்டும், மீண்டும் தமிழக அரசு பொதுமக்களின் அடிப்படை பொதுச்சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பது அரசின் பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும்.
மக்கள் நல அரசு என்பது பொதுச் சேவைகளை வழங்குவதிலிருந்து பின்வாங்கக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த தனியார்மய டெண்டர் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
ராம் யாத்திரை
கடந்த செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் ‘ராம் யாத்ரா’ என்ற பெயரில் அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழுவினருடன் இணைந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநாட்ட வேண்டிய ஒரு அரசே, தனது அதிகாரப்பூர்வ துறையின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத இதிகாச மரபையும், குறியீடுகளையும் முன்னிறுத்தி இந்நிகழ்ச்சியை நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
சுற்றுலாத் துறை என்பது தமிழ்நாட்டின் பன்முகப் பண்பாடு, வரலாறு, இயற்கை வளங்கள் மற்றும் கலைகளை உலகிற்கு பறைசாற்றும் அமைப்பாக இருக்க வேண்டும். அதை விடுத்து, அரசு நிர்வாகமே நேரடியாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு துணை போவது மதச்சார்பின்மைக்கு எதிரானது.
மேலும், சுட்டெரிக்கும் கடுமையான வெயிலில் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகளை நீண்ட நேரம் காவி ஆடைகளுடன் நிற்க வைத்து நடனமாடச் செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் உயர்த்திப் பிடிக்கும் மத அடையாளங்களுடன் குழந்தைகளை ஈடுபடுத்தியது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் பன்முகத் தன்மையையும், மதச்சார்பற்ற அமைதியையும் சீர்குலைக்கும் இத்தகைய போக்குகளை அரசாங்கம் பின்பற்றுவது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு விழாக்களும், துறை சார்ந்த நிகழ்வுகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பற்ற கோட்பாடுகளுக்கு உட்பட்டே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
