2020-ம் ஆண்டு டெல்லி வன்முறை தொடர்பான சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அவருடன் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) தள்ளுபடி செய்தது.
2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையின் பின்னணியில் மிகப்பெரிய சதி நடைபெற்றதாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

உமர் காலித் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். அப்போது முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஜாமீன் கோரி தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி இவர்களது ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே உமர் காலித் மீண்டும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகினார். கடந்த ஜூலை 4-ஆம் தேதி அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினர். உமர் காலித் கைது செய்யப்பட்ட பிறகு தாக்கல் செய்த 3-வது ஜாமீன் மனு இதுவாகும். இந்த மனுக்களை நீதிபதிகள் பிரதிபா எம். சிங், தினேஷ் பட் அமர்வு இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின்போது, சாட்சிகளிடம் விசாரணை முடிவடையவில்லை; உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டும் முடியவில்லை. இந்த 2 நிபந்தனைகளில் எதுவும் தற்போது நிறைவேறவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த நிலையில் ஜாமீன் வழங்குவது உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றுவதாக அமைந்துவிடும்; அதை உயர் நீதிமன்றத்தால் செய்ய முடியாது என்று கூறி உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
யார் இந்த உமர் காலித்?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) முன்னாள் மாணவர் உமர் காலித். JNU-வின் வரலாற்று ஆய்வு மையத்தில் ஜார்க்கண்ட் பழங்குடியினர் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டவர்.
உமர் காலித் தேசிய அளவில் முதன்முதலில் அதிகம் பேசப்பட்டது 2016-ம் ஆண்டு JNU விவகாரத்தின்போது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பாக கண்ணையா குமார் உள்ளிட்ட மாணவர்களுடன் உமர் காலித் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டங்களில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். அப்போது நடந்த கலவரத்தின் பின்னணியில் நடந்ததாகக் கூறப்படும் பெரிய சதியில் உமர் காலித்துக்கு முக்கியப் பங்கு இருந்ததாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக UAPA உள்ளிட்ட சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2020 செப்டம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார்.
