தாராபுரம் இடைத்தேர்தல்: தடுப்புகளைத் தள்ளிவிட்டு ஓடிய தவெகவினர்.. கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தாராபுரத்தில் முதல்வர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில், போலீசாரின் அறிவுறுத்தல்களைக் கண்டுகொள்ளாமல் முண்டியடித்துச் சென்ற தவெக தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் இன்று (செப்டம்பர் 30) தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி தாராபுரம் நகரம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் இன்று மாலை சுமார் 3 மணியளவில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுக்கூட்டத்தில் QR குறியீடு கொண்ட அனுமதிசீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிசீட்டு இல்லாதவர்கள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தடுப்புகளைத் தாண்டி முண்டியடித்த தொண்டர்கள்

மாலை 3 மணிக்கு விஜய் உரை நிகழ்த்தவுள்ள நிலையில், மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்ட நிழற்குடை பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இடத்தைப் பிடிப்பதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் முண்டியடித்துச் சென்றனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலர் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாகக் காத்திருந்த தொண்டர்கள் நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்குள் முண்டியடித்துச் சென்றதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தளபதி என்ற கோஷமிட்டு தவெகவினர் செல்லும் நிலையில் போலீசார் ஓடாதீர்கள்.. பொறுமையாக போங்கள் ஒருவரை ஒருவர் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share