தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய் செல்லும் வழியில் கடைகளை அடைக்க உத்தரவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க, முதல்வர் விஜய் இன்று தாராபுரம் வர உள்ள நிலையில் கடைகளை அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்துத் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று (செப்டம்பர் 30) தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி தாராபுரம் நகரம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் இன்று மாலை சுமார் 3 மணியளவில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காகச் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுக்கூட்டத்தில் QR குறியீடு கொண்ட அனுமதிசீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிசீட்டு இல்லாதவர்கள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

3,500 போலீசார் பாதுகாப்பு

முதல்வர் ஜோசப் விஜய் வருகையையொட்டி தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,500 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடைகளை அடைக்க உத்தரவு

முதல்வரின் பயணப்பாதை, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், தாராபுரத்தில் முதல்வர் விஜய் வரும் வழியில் உள்ள கடைகளை அடைக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் அப்பகுதி வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். “ஏற்கனவே மழையில்லாமல், தண்ணீரில்லாமல் மக்கள் சிரமப்படும் நிலையில், இன்று எங்களின் பிழைப்பையும் கெடுத்துவிட்டார்கள்” என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், முதல்வர் விஜய்யின் தாராபுரம் வருகை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share