ஆதவ் அர்ஜூனா மீது அதிமுக பாய்ச்சல்! சத்துணவு பணியாளர் மகனுக்கு ரூ534.90 கோடி சொத்து வந்தது எப்படி?

Published On:

| By Mathi

EPS-Aadhav Arjuna-AIADMK

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அதிமுகவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிக மோசமான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியின் மகன், கட்சியில் அடிப்படை உறுப்பினர் தவிர எந்த பொறுப்பும் வகிக்காத போது, அவரைப் பற்றி வாய்க்கு வந்ததை அவதூறாக அள்ளி வீசுவது கடும் கண்டனத்திற்குரியது.

“சொத்து அபகரிப்பு” என்ற சொல்லை உச்சரிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

ADVERTISEMENT

எங்களைப் பொறுத்தவரை, பொதுச் செயலாளராக மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு, கழகத்தின் சொத்துகள், வங்கி இருப்புகள் உயர்ந்து இருக்கிறதே தவிர குறையவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.

சாதாரண சத்துணவுப் பணியாளரின் மகனாகப் பிறந்த “எளிய மனிதரான” திரு. ஆதவ் அர்ஜுனா, 2026 தேர்தல் Affidavit-ல் காட்டிய சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 534.90 கோடி ரூபாய்!

ADVERTISEMENT

இவரின் குடும்ப சொத்துகளைச் சேர்த்தால் பல ஆயிரம் கோடிகள் கூட இருக்கலாம்.

இவ்வளவு சொத்தை திரு. ஆதவ் அர்ஜுனா உழைத்து சம்பாதித்தாரா என்ன? எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதை இந்த வாய்ச்சொல் வீரர் பொதுவெளியில் சொல்வாரா?

தன் மாமனார் சொத்தை அபகரித்து தான் ஆதவ் அர்ஜுனா அவர்களின் சொத்து வந்திருக்கிறது என்று நாங்கள் சொல்லலாமா?

அதேபோல், அதிமுகவைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் சுதந்திர முடிவையும் மதிக்கும் பக்குவம் எங்களுக்கு உள்ளது.

தங்கள் கூட்டணியில் இருக்கும் கல்லாப்பெட்டி கட்சிகளை கிஞ்சிற்றும் மதிக்காமல், “நீங்கள் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள், நானெல்லாம் வரமாட்டேன்” என்று நவீன தீண்டாமையை கூட்டணியிலேயே கடைபிடிக்கும் ஒரு கட்சித் தலைவரை ஏற்றுள்ள ஆதவ் அர்ஜுனா அவர்கள், எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலதனம் எங்கள் தொண்டர்கள் தான். கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், எங்கள் கழகத்தின் தொண்டர்கள் உழைப்பில் நின்று வெற்றிபெறக் கூடிய தெம்பு, திராணி எங்களுக்கு உள்ளது!

திமுக-வுக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி MLA-களிடம் இரவல் பெற்று ஆட்சியின் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கும் தவெக-வுக்கு, கழகம் என்றால் உயிரைக் கொடுத்து உழைக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை! இவ்வாறு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share