திமுக அணி தோல்விக்கு SIR காரணம்.. விசிக எம்.பி. ரவிக்குமார் ‘பரபர’ பேட்டி

Published On:

| By Mathi

SIR-DMK-Ravikumar

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் திமுக அணி தோல்வி அடைந்ததற்கு SIR எனப்படுகிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ரவிக்குமார் எம்.பி. இன்று (செப்டம்பர் 29) செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குரிமை என்பது இப்போது அரசியலமைப்புச் சட்ட உரிமையாகத்தான் (Constitutional Right) இருக்கிறது. அடிப்படை உரிமையாக (Fundamental Right) இல்லை. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்திலேயே, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால், அவருடைய குரல் அன்று ஏற்கப்படவில்லை. காங்கிரஸ் அரசு, நேரு தலைமையிலான அரசு அதைப் புறக்கணித்துவிட்டது.

ADVERTISEMENT

அதனுடைய பலனைத்தான் இன்று பார்க்கிறோம். 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு, வாக்குரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இல்லாததும் காரணம். எனவே, வாக்குரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

SIR காரணமாக வீழ்ந்த தமிழகம், மே.வங்க அரசுகள்

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு நடத்தப்பட்ட மாநிலத் தேர்தல்களில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அரசுக்கு எதிரான கட்சிகளின் அரசுகள் வீழ்த்தப்பட்டதற்கு எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை ஒரு காரணமாக இருக்கிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ADVERTISEMENT

தலித், பட்டியல் சமூக வாக்காளர்கள் நீக்கம்

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை சட்டவிரோதமான நடவடிக்கை என்பது இன்று வெளிப்பட்டிருக்கிறது. அந்த நடவடிக்கையில் பெருமளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாக்காளர்கள் சமூக ரீதியாக எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்க வேண்டும். நிச்சயமாக பெரும்பாலானவர்கள் தலித் சமூகத்தை, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இந்தப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களித்தார்கள். பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்தார்கள். பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வாக்களித்தார்கள்.

ADVERTISEMENT

அது மேற்கு வங்கமாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி, இந்த வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்குத்தான் சென்றிருக்கும். எனவே, எதிர்க்கட்சிகளின் தோல்வியில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம்.

ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று முதலில் சொன்னது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அதேபோல 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

விசிக வழக்குகள்

இதுதொடர்பாக இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தோம். உச்ச நீதிமன்றத்தில் பீகார் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். தமிழ்நாடு எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தோம். பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஏற்பட்ட வாக்கு மாற்றத்தில் எஸ்.ஐ.ஆருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

திமுக அணி தோற்க SIR காரணம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததில் எஸ்.ஐ.ஆர். இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், பல இடங்களில் திமுக அணி தோற்றுப் போனதற்கு எஸ்.ஐ.ஆர். ஒரு காரணம் என்பதை நான் சொல்கிறேன்.

தவெகவுக்கு வரவேண்டிய வாக்குகள் வந்திருக்கும். ஆனால், திமுக அணிக்கு வரவேண்டிய வாக்காளர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன என்பதைத்தான் சொல்கிறேன்.

சமூக ரீதியாகப் பார்த்தால் தலித் சமூக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள். காலையில் வீட்டைவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். வீட்டுக்குச் சென்று பார்க்கும்போது வீடு பூட்டியிருக்கிறது என்பதற்காக, ‘Shifted’ என்று குறிப்பிட்டு, அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என பெயரை நீக்கியிருக்கிறார்கள்.

அவர்கள் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று கேட்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் ஒருவருக்கு அன்றைக்கு கூலி வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு. அவரிடம், ‘இன்று வேலைக்குப் போகாதே; வீட்டிலேயே இரு; படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கொண்டு போய்க் கொடு; இதற்கு முந்தைய எஸ்.ஐ.ஆர். நடந்தபோது எங்கே இருந்தாய்? உன் அப்பா எங்கே வாக்களித்தார்?’ என்று கேட்கிறார்கள்.

நன்றாகப் படித்தவர்களாலும், அரசு வேலையில் இருப்பவர்களாலும்கூட அந்தப் படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்தது. பெரும்பாலான படிவங்களில் கையெழுத்து அல்லது கைரேகையை மட்டும் வாங்கிச் சென்றார்கள். எஸ்.ஐ.ஆரில் மிகப்பெரிய குழப்பம் நடைபெற்றது. அந்தக் குழப்பம் இன்று தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருக்கிறது.

ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகித்தான் ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. அதுதான் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நல்லது. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு எதிராக மாறும் என்று அவர்கள் நினைத்தால், ஞானேஷ் குமாரைப் பதவி விலகச் சொல்லிவிடுவார்கள்.

நாளை இந்தியா கூட்டணிக் கட்சிகளும் முடிவு எடுக்கப் போகிறோம். நிச்சயமாக ஞானேஷ் குமார் பதவி விலகுவார் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். இது ஒரு போராட்டத்தால் மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாக மக்களுடைய மனநிலையும் அதற்கு எதிராக இருக்கிறது. இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share