பாமக இல்லை என்றால் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
தாராபுரத்தில் நேற்று (செப்டம்பர் 28) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உங்கள் வீட்டில் அண்ணனாக இருப்பேன், தம்பியாக இருப்பேன், மாமனாக இருப்பேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பச்சைப் பொய். பாசம் என்று சொன்னால் தாய், தந்தையுடன் வாழ வேண்டும். கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும். பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். மேடைகளில் வீரவசனம் பேசினால் மட்டும் போதாது. நிஜ வாழ்க்கையிலும் அதனைப் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும்” என்று முதல்வர் விஜய்யை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்தநிலையில், இன்று (செப்டம்பர் 29) சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை கொங்கு மண்டலத்தில் அதிமுக தான் வலுவாக இருந்தது. ஆனால் 2026 தேர்தலில் அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் 50 தொகுதிகளில் மொத்தம் 15 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. சேலத்தில் ஏழு தொகுதிகள் தான் ஜெயித்திருக்கிறார்கள். அதுவும் பாமக இல்லை என்றால் அதிமுகவால் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றால் எடப்பாடி தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது.
தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருண்குமாரை விலை கொடுத்து வாங்கினர். அவரை எங்கேயோ கொண்டு போய் அடைத்து வைத்து விட்டார்கள்.
அவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிமுகவில் சேர்ந்திருக்கிறார். எவ்வளவு காசு கொடுத்து சேர்த்து இருக்கிறீர்கள். இது குதிரை பேரம் இல்லையா.
இன்றைக்கு அதிமுகவில் இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். ஒருவர் எடப்பாடி பழனிசாமி, இன்னொருவர் அவரது மகன் மிதுன்.
மிதுன் தான் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால், அதிமுக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியே போகிறார்கள்.
தென் மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக வலுவிழந்து அதிமுக வெற்றி பெறவே இல்லை. டெல்டா பக்கமும் ஜெயிக்கவே இல்லை.
கொங்கு மண்டலத்தில், தமிழக வெற்றி கழகத்தினர் எந்த கூட்டணியும் பண பலமும் இல்லாமல் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்..
ஆனால் எடப்பாடி பழனிசாமி பாமக, பாஜகவோடு சேர்ந்து பிரச்சாரம் செய்தார். இத்தனை கூட்டணிகள் இருந்தும், கொங்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் வெறும் 15 தொகுதிகள் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்.
பழனிசாமி தலைமையிலான அதிமுகவை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
தமிழக வெற்றி கழகம் இல்லை என்றால் கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற்று இருக்கும். அப்படி திமுக வந்திருந்தால், இங்கு தொழில்துறைகள் இருக்க முடியுமா.
10 முதல் 15 சதவிகிதம் வரை ஊழல் கேட்டு மிரட்டி இருப்பார்கள்.
தாராபுரத்தில் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து 50 பேரை நிற்க வைத்துக் கொண்டு தவெக வேட்பாளரை புறக்கணிக்கிறார்கள் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய தலைவர் இங்கு பிரச்சாரம் செய்த பிறகு எல்லா பொய்களும் கட்டவிழ்க்கப்படும்.
குறிப்பாக மிதுன் அதிமுக என்பது உடைக்கப்படும். எம்ஜிஆர் மீதும் , ஜெயலலிதா மீதும் திமுக தனிப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதேபோன்றுதான் இன்று எடப்பாடி செய்கிறார்.
இந்த இழிவான பிரச்சாரத்தை தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கி எறிவார்கள்.
திமுக பிரச்சாரத்தை இன்று எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு இருக்கிறார். திமுகவின் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதுதான் இன்றைய நிலைமை.
மதுராந்தகத்தில் திமுகவுக்காக அதிமுக ஓட்டு கேட்கிறது. தாராபுரத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று திமுக ஓட்டு கேட்கிறது.
திமுகவும் அதிமுகவும் சேர்ந்து விட்டது. மிதுனை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அதனால்தான் எங்கள் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசி பிரச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று விமர்சித்தார்.
