‘போராட்ட களமான’ பட்டினப்பாக்கம்: விஜய் அரசின் புதிய தலைமை செயலகத்துக்கு எதிர்ப்பு… கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு!

Published On:

| By Mathi

Pattinapakkam Protest

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று (செப்டம்பர் 29) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையின் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடியில் புதிய வளாகத்தை அமைப்பதற்கு அரசு முதற்கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் தங்களது பாரம்பரிய குடியிருப்புப் பகுதி மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது அவர்களது முக்கியக் குற்றச்சாட்டு.

இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 29-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

மேலும் பட்டினப்பாக்கம் பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்களது கோரிக்கைக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என்ற அரசாணையை முதல்வர் விஜய் அரசு திரும்பப் பெறவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று பட்டினப்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share