SIR விவகாரத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தேசியச் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அன்றும் சரி… இன்றும் சரி… என்றும் சரி… தவெக, SIR என்ற செயல்திட்டத்தை (Process) எதிர்க்கிறது. SIR என்ற முழுச் செயல்பாடும் மிகப்பெரிய மோசடியாக இருக்கிறது. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றால், SIR என்ற முறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அன்றும் எங்கள் தலைவர் சொன்னார். அந்த நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கிறோம்.
ஆனால் இவர்கள் எல்லாம் பலிகடாக்கள்.. தனிநபரை (தேர்தல் ஆணையரை) மாற்றும்படி போராட்டம் நடத்த விட்டுவிட்டு, அவர்களே அவரை மாற்றிவிட்டு இதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். இது திசைதிருப்பும் செயல். இதற்கு நாங்கள் இரையாக மாட்டோம். அன்று சொன்ன அதே நிலைப்பாட்டில்தான் இன்னமும் இருக்கிறோம். SIR-ஐ நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் தனது எக்ஸ் தளப் பதிவில், “வாயைத் திறந்து உங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதை விட, சில சமயங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
