தேர்தல் வழக்கு முடியும் வரை சட்டப்பேரவை தொகுதிகளை காலியாக வைத்திருப்பது பொது நலனுக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கில், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வெங்கடாஜலபதி சார்பில், ‘எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியில் இணைந்துள்ளனர். எனவே இந்த காலியிடத்தை இடைத்தேர்தல் அறிவிப்பதற்கான தெளிவான காலியிடமாக கருத முடியாது.
தேர்தல் வழக்கு முடியும் வரை ஐந்து தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே இந்த மனுவை ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேர்தல் வழக்குகள் முடிவடைய அதிக காலம் எடுக்கும் என்ற எதிர்தரப்பின் வாதங்களை ஏற்கக்கூடாது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர் காந்திமதி நாதன் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதுபோன்று முதல்வர் விஜய் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது தரப்பில், “திருச்சி கிழக்கில் 91,381 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். அந்த தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜ் அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும்படி முன்வைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது.
இது பொதுநல வழக்கு அல்ல. தனிநபர் வழக்கு. எனவே தேர்தல் வழக்கு முடியும் வரை தொகுதியை காலியாக வைத்திருப்பது பொது நலனுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நாளையும் முதல்வர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.
