நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி அவதூறு: அமைச்சர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு!

Published On:

| By Kavi

ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா இருவரும் நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று திமுக உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

போக்சோ வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர், முந்தைய திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டி வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை பெறுமாறு திமுக பொருளாளர் டி ஆர் பாலு இன்று சிறப்பு விசாரணை குழுவிடம் கடிதம் கொடுத்துள்ளார். 

இதற்கிடையே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

திமுகவினருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றி கழகத்தினர் செயல்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திமுக அரசு மீது குற்றம் சாட்டி கருத்துகள் தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தமிழக வெற்றி கழக ஐடி விங் ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

அதில் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, வீரமணி தொடர்பான வழக்கை படிக்கும் போது மனம் பதறுகிறது. இது தீவிரமான வழக்கு. இந்த விவகாரம் குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கும் திமுகவினருக்கும் அவரவர் தரப்பு வழக்கறிஞர்கள் அறிவுறுத்த வேண்டும். 

இந்த விவகாரத்தில் இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவிப்பது வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன் ஆஜராகி, “இந்த வழக்கில் ஒரு பதில் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை” என்று தெரிவித்தார். 

இதனால் பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். 

இதற்கிடையே ஜெம் வீரமணி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா,  நிர்மல் குமார் பின்பற்றவில்லை. தொடர்ந்து அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் ரவீந்திரன் குற்றம் சாட்டினார். 

இதைக் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் தரப்பு வழக்கறிஞர், அதாவது தலைமை வழக்கறிஞர் இந்த புகாரை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share