திக்..திக்.. விஜய் அரசின் புதிய தலைமை செயலகம்.. 9 மீனவ கிராம மக்கள் இன்று அறிவிக்கப் போவது என்ன?

Published On:

| By Mathi

Vijay Govt’s New Secretariat

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை அமைப்பதாக அறிவித்ததற்கு எதிராக இன்று 9 மீனவ கிராம மக்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நெய்தல் மக்கள் கட்சித் தலைவர் கு. பாரதி நமது மின்னம்பலத்திடம் கடந்த 10-ந் தேதி பேசுகையில், பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட உள்ள பகுதிக்கு தெற்கில் முள்ளிக் குப்பம், சீனிவாசபுரம், வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம்,இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் என மொத்தம் 9 மீனவ கிராமங்கள் உள்ளன. புதிய தலைமைச் செயலகம் இந்த பகுதியில் அமையும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ADVERTISEMENT

பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூரை உள்ளடக்கிய பகுதிகள் பள்ளி மண்டலம் (School zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயில்கின்றனர். ஏற்கனவே சாந்தோம் நெடுஞ்சாலையும், கடற்கரை லூப் சாலையும் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால்தான் கடந்த கால திமுக, அதிமுக அரசுகள் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்யவில்லை.

அத்துடன் சென்னையில் அதிக அளவில் மீன் தொழில் நடைபெறும் இடம் இந்த பகுதி. ஆகையால் இதனை மீன் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரி வருகிறோம். இதனை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. எங்களுடைய மீனவர்களின் நலத் திட்டங்களுக்கு நிதி இல்லை என்று சொல்கிற அரசுக்கு, புதிய தலைமைச் செயலகம் கட்ட மட்டும் நிதி இருக்கிறதா?

ADVERTISEMENT

தற்போதைய விஜய் அரசின் முடிவு தொடர்பாக 9 கிராம மீனவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக வரும் 15-ந் தேதி பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான அனைத்து மீனவர் கிராம பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம். இதனை ஏற்காவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி 9 கிராம மீனவ மக்கள் இன்று மாலை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி உள்ளனர். இதில் விஜய் அரசின் புதிய தலைமை செயலகத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share