பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்தநாள்: ஸ்டாலின், ஈபிஎஸ், ஆதவ் அர்ஜுனா புகழ் வணக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!

ADVERTISEMENT

தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!

பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் – சமூகநீதியில் – மாநில உரிமையில் – தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் பதிவில்,”ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.

கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தனது எக்ஸ் பதிவில், “பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!

கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் – அண்ணா!

தமிழ்நாடு என்று பெயர் சூட்டி – சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து – இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் – இன்றைக்கும் – என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் – தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் – மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.

வாழ்க அண்ணாவின் புகழ்!” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.

அதிகாரத்தை விட கொள்கையையும்,
பதவியை விட மக்களையும்,
தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.

தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.

மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் #அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!

வாழ்க அண்ணா நாமம்!”என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பதிவில், “அண்ணா!

இந்த மூன்றெழுத்து தமிழ் நிலத்தில் புது சரித்திரம் படைத்தது. மாநிலக் கட்சிகள் ஆட்சியமைத்து ஜனநாயகத்தைப் பரவலாக்க முடியும் என்று இந்திய அரசியலுக்கு புதிய அத்தியாயத்தை எழுதியது. கூட்டாட்சி தத்துவமே இந்திய நாட்டின் அடையாளம் என்று அரசியலமைப்பு சிறப்பை முழுமைப்படுத்தியது. சாமானியர்களும் ஆட்சியாளர்கள் ஆகலாம் என்ற மக்களாட்சி புரட்சியை நிலைநாட்டியது.

சமத்துவத்தை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் வென்றெடுத்தார்; சமூகநீதியை அரசின் திட்டங்களில் அமல்படுத்தினார்; ‘மாநில சுயாட்சி’ என்ற வலிமையான அரசியலின் மூலம் ‘தமிழ்நாடு’ தனித்துவத்தோடு தலைநிமிர வழிகாட்டினார்.

‘மக்களிடம் செல்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்’ ஆகிய அண்ணாவின் பிரசாரங்களே என்னைத் தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்தன. அரசியல் அறிவியல் மாணவனான எனது ஆசிரியர்களில் மூத்தவரான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவே எப்பொழுதும் எனது வழிகாட்டி.

‘அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம். அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம்’ என்று அவரது பிறந்தநாளான இன்று உறுதியேற்போம்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share