முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திமுகவினரால் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இன்று மாலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முப்பெரும் விழா நடைபெறவிருந்தது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.கனிமொழி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
”திமுக தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
