உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்க வேண்டிய அவசியமும், தேவையும் அதிகரித்துள்ள நிலையில், இருக்கிற அதிகாரத்தையும் தவெக அரசு பறித்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஆட்சியரின் முன் அனுமதியை பெறும் நடைமுறையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்புக்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை நகரமைப்பு இயக்குநருக்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத் திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரவையில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்டத் திருத்த முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்பராயன் தனது முகநூல் பதிவில், “கிராமப்புற உள்ளாட்சி மன்றம் வரை, அதிகாரப் பரவல் நீடிக்க வேண்டும் என்பது தான், அதிகாரப் பரவல் என்ற சொல்லுக்கு மெய்ப்பொருளாகும்!
அது நிகழாதவரை இந்த சொல் ஏமாற்று நாடகமே ஆகும்!
அதிகஅதிகாரத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய அவசியமும், தேவையும் அதிகரித்துள்ள நிலையில், இருக்கிற அதிகாரத்தையும் பறித்து விட்டது தவெக அரசு!
விவசாய நிலத்தை, விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்குவகை மாற்றம் செய்யும் அதிகாரத்தை, கிராம சபையிடமிருந்து , அதாவது மக்களிடமிருந்து பறித்துக் கொண்ட தவெக அரசிற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்!
உடனடியாகமாநில அரசு, அந்த திருத்த சட்டத்தை இரத்து செய்ய வற்புறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
