புதிய தலைமைச் செயலகம்: பட்டினப்பாக்கத்தில் கறுப்பு கொடிகளுடன் மீனவர்கள் போராட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (செப்டம்பர் 29) கறுப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது 110-வது விதியின் கீழ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும் அப்பகுதி மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாகப் பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் தங்களது அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகுவதோடு தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எண்ணூர்முதல் கோவளம் வரை உள்ள மீனவ மக்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டினப்பாக்கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 564-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், முள்ளிக்குப்பம் மற்றும் முள்ளி மாநகர் நிலத்தை மீனவர் குடியிருப்புப் பகுதியாக உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும், லூப் சாலையில் பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்வாதார உரிமையையும் மீன்பிடித் தொழிலையும் பாதுகாக்க இந்தக்கடற்கரையை மீன்பிடித் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கருப்புக்கொடியுடன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share