தமிழகத்தை உலுக்கிய நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கவின், காதல் விவகாரம் காரணமாகக் கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, அவர் காதலித்த பெண்ணின் சகோதரரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இது சாதி ஆணவப் படுகொலை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பாளையங்கோட்டை காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, பெண்ணின் சகோதரரான சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த 9 மாதங்களுக்கு பின் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவு:
இந்நிலையில், இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விஜயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதன்மூலம் காவல் அதிகாரிகளான சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கவின் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி உறவினர் ஜெயபால் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கௌசல்யா சங்கர் குற்றச்சாட்டு:
ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் கௌசல்யா சங்கர், இத்தீர்ப்பு குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தன் சாதி காக்கச் செயல்படுகிறாரா என்றால்.. ஆம் என்றுதான் சொல்வேன்! இவ்வளவு அலட்சியமாக ஒரு அமைச்சரால் தன் துறை மீது எப்படி கவனம் செலுத்தாமல் இருக்க முடியும்? குற்றவாளிகளைக் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கம் செய்வதென்றால் இதில் சட்டத்துறையின் விழிப்பின்மை காரணம் எனச் சொன்னால் அதில் தவறில்லையே! அதுவும்
சாதிக் குழுக்கள் நிர்மல்குமாரிடம் பட்டியலின/பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கொடுத்த கோரிக்கை மனுவை முதலில் எப்படிப் பெற்றுக் கொள்ள முடியும்? பெற்றுக் கொள்கிறீர்கள் என்றால் அதைப் பரிசீலனை செய்யப் போகிறீர்களா என்ன?
ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள் கவின் கொலையில் சுர்ஜித் தாயாரை கைது செய்து விட்டோம் என்று சட்டசபையில் மார்தட்டிக் கொண்ட ஆதவ் அர்ஜுனா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
சாதி வாக்குகள் இன்றி வெற்றி பெற்றோம் என்று பெருமையாகச் சொன்னீர்கள். ஆனால் சாதி காக்கும் திருப்பணியைச் செய்வதற்கு வெட்கமாக இல்லையா?
அப்படியெல்லாம் இல்லை என்றால் என் கேள்விகளுக்குச் செயலளவில் பதில் அளியுங்கள். ” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் பதிவில்,நெல்லை கவின் கொலைவழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2) கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான ‘குற்றச்சாட்டு அறிக்கையை’ மதுரை உயர்நீதிமன்றம் ‘ரத்து’ செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வது தான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்றவிசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை ‘ரத்து’ செய்வது ‘தவறான முன்மாதிரி’ ஆகும்.
கவின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்ததும் இன்னொரு கொலைவழக்கில் கூலிப்படையினரோடு தொடர்பிருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரையும் அவரது மனைவியையும் குற்றமற்றவர்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
