உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்த ஆதவ் அர்ஜூனா! வைகோவின் ‘திருட்டு பசங்க’ விமர்சனம்!

Published On:

| By Mathi

Aadhav Arjuna-Udhayanidhi

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான மதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்து பேசினார்.

தாராபுரத்தில் இன்று செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: 1990-களில் மதிமுக எப்படி இருந்ததோ, இந்த ரூமுக்குள் வரும்போது அதே மாதிரி இருக்கிறது. மதிமுக அழிந்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு தாராபுரம் தொகுதியிலிருந்து மதிமுக என்றால் என்னவென்று காட்டுவார்கள்.

ADVERTISEMENT

கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கும்போது நல்ல தலைவர்களின் பேச்சுகளைப் பார்ப்பேன். அதில் முக்கியமான ஆளுமை வைகோ. அவர் பேசினால் தமிழ்நாடு முழுவதும் கேட்கும். அவர் பேசாத விஷயங்களே இல்லை.

சட்டப்பேரவைக்கு வாங்க துரை வைகோ

அவர் நாடாளுமன்றத்தில் பேசினார். சட்டப்பேரவையில் பேசியிருந்தால் அப்போதே ஆட்சி மாற்றம் வந்திருக்கும். அதனால் துரை வைகோவிடம் கேட்டுக்கொள்கிறேன். போதும் நாடாளுமன்றம். அடுத்த தேர்தலில் சட்டப்பேரவைக்கு வாருங்கள்.

ADVERTISEMENT

பேசத் தெரியாதவனெல்லாம் எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்து பேசி கொண்டிருக்கிறான். தயவுசெய்து உள்ளே வாருங்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்து போர் அடித்துவிட்டது. சீக்கிரம் மதிமுக எதிர்க்கட்சியாக ஆகும்.

ஒரு சித்தாந்தத்துக்கான போரை உருவாக்குவோம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் விஜய்யின் கொள்கையும் வைகோவின் கொள்கையும் ஒன்றாக இருப்பதால்தான் கொள்கையால் இணைந்தோம். இது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணி அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடரும்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டணியின் முதல் தேர்தலாக தாராபுரம், மதுராந்தகம் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். இந்தத் தேர்தல் புதுமையான தேர்தல்.
கடந்த 75 ஆண்டுகளாக இருக்கக்கூடிய திமுகவும், 50 ஆண்டுகளாக இருக்கக்கூடிய அதிமுகவும் தேர்தல் காலத்தில் எதிரும் புதிருமாக இருந்தன. கலைஞர், ஜெயலலிதா இருந்த காலம் வரை அப்படித்தான் இருந்தது.

ஆனால் இப்போது உதயநிதியாக இருக்கட்டும், மு.க.ஸ்டாலினாக இருக்கட்டும், இந்தப் பக்கம் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும், அவருடைய மகன் மிதுனாக இருக்கட்டும்; இவர்கள் எல்லோரும் இணைந்து திமுகவையும் அதிமுகவையும் ஒன்றாக்கிவிட்டார்கள்.

களத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்றாக நின்று தேர்தல் வேலை செய்கின்றன. யாரை எதிர்த்து? இந்த 5 கட்சிகளைக் கொண்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியை எதிர்த்து. நாம் பெறப்போகும் வெற்றியில்தான் இந்த இரண்டு கட்சிகளின் தோல்வியும் ஆரம்பிக்கப்போகிறது.

சட்டப்பேரவையில் இந்த ‘ஆபாச நிதி’ என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர் பேசுகிறார்; குதிரை பேரம் செய்கிறார்கள், ‘சோபா மாடல் அரசு’ நடத்துகிறார்கள் என்று.

மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரைப் பார்த்துக் கேட்கிறேன். மதிமுக ஏன் உங்களுடைய கூட்டணியில் இருந்தது? தமிழ்நாட்டில் பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். மதிமுகவை எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் பொறுமையாக இருந்தார்கள். துரை வைகோ நாடாளுமன்றத் தேர்தலில் அவமானப்படுத்தப்பட்டார். வேறு சின்னத்தில் நிற்கச் சொல்லப்பட்டது. அப்போதும்கூட வைகோ பொறுமையாகப் போகச் சொன்னார்.

ஆனால் பொறுமையாகப் போவதற்கும் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும்.
துரை வைகோ தேர்தலுக்கு முன்பே வைகோவிடம், ‘நாம் தவெகவுடன் சேர்ந்துவிட்டால் அதிகமான எம்.எல்.ஏ.க்களை உருவாக்கலாம். நாம் ஏன் பழைய காலகட்டத்திலேயே இருக்க வேண்டும்? மதிமுக 2.0-வை உருவாக்க வேண்டும்’ என்று சொன்னார்.

துரை வைகோ நினைத்திருந்தால் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகியிருக்கலாம். இவ்வளவு தூரம் வந்து இங்கே கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

இளைஞர்களால் உருவாக்கப்பட்ட மதிமுக, திமுகவுடன் காம்ப்ரமைஸ் செய்து, காம்ப்ரமைஸ் செய்து அதன் வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அவமானப்படுத்தப்பட்டபோதும் போராடி தனிச் சின்னத்தை வாங்கி நின்று துரை வைகோ வெற்றி பெற்றார். அதன் பிறகு அந்தச் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவர்கள் சின்னத்தில் நிற்கச் சொன்னார்கள்.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன ஜனநாயக உரிமையைக் கொடுத்திருக்கிறது? காங்கிரஸ் தனது சின்னத்தில் நின்று வென்றிருக்கிறது. விசிக தனது சொந்தச் சின்னத்தில் நின்று வென்றிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது சொந்தச் சின்னத்தில் நின்று வென்றிருக்கிறது. ஆனால் மதிமுகவை மட்டும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்தார்கள். அதன் பின்னால் என்ன சூழ்ச்சி இருக்கிறது தெரியுமா?
ஒரு கட்சிக்கு சட்டப்பேரவையில் ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லை என்றால், அந்தப் பிரதிநிதித்துவம் இல்லை என்றால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு சொந்தச் சின்னமே கிடைக்காது.

இப்படித்தான் மற்ற கட்சிகளின் உழைப்பையும் தொண்டர்களையும் பயன்படுத்தி திமுக தனது எம்.எல்.ஏ.க்களை வெற்றிபெற வைத்தது. இத்தனை அவமானங்களையும் வைகோ மறந்தார். தனது மகனுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மறந்தார். தமிழ்நாட்டில் கொள்கை ரீதியாக பாஜக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

2026-க்குப் பிறகு சூழ்நிலை மாறியது. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டுகள் எல்லோரும் சேர்ந்து புதிய அரசை உருவாக்கினார்கள். மதச்சார்பற்ற, சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என்று வைகோவும் துரை வைகோவும் ஆதரவு கொடுத்தார்கள். இப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினையும் பார்த்துக் கேட்கிறேன்.

மதிமுகவுக்கு சீட் ஷேர் பண்ணும்போது அந்தக் கட்சிக்கென்று தொகுதிகளைக் கொடுத்தீர்கள். அதில் செந்தில் செல்வனும் ராஜேந்திரனும் ஜெயித்தார்கள். அவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்தது யார்? வைகோதானே? மதிமுகவின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு எல்லோரும் சேர்ந்து அவர்களை வேட்பாளர்களாக முடிவு செய்கிறார்கள் என்றால், அந்த இரண்டு பேரும் யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? வைகோவுக்கும் கட்சிக்கும்தானே விசுவாசமாக இருக்க வேண்டும்?

30 வருடமாக.. திருட்டு பசங்க..

காங்கிரஸ் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கூட்டணிக்கு வந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டார்கள். திருமாவளவன் சொன்னதும் விசிக எம்.எல்.ஏ.க்களும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டார்கள். ஆனால் வைகோவின் வருத்தம் என்ன தெரியுமா? ‘நாங்கள் செயற்குழுவைக் கூட்டினோம். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களைக் கூப்பிட்டோம். படுபாவிகள்… 30 வருடமாக என் கூட இருக்கிறவர்கள், திருட்டுப் பசங்கன்னு எனக்குத் தெரியல’ என்று சொன்னார்.

40 வருடமாக ஒரு கட்சியில் இருந்து, அந்தக் கட்சி உங்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்த பிறகு, கட்சி ஒரு முடிவு எடுக்கும்போது அதை எதிர்த்து நிற்பதா?

அன்று வைகோ பேசினார்.. இன்று விஜய் செய்கிறார்

வைகோ 1990-களில் என்ன பேசினாரோ அதை 2026-ல் எங்கள் தலைவர் விஜய் சாத்தியப்படுத்தினார். வைகோ பதவிக்காக இந்தக் கூட்டணிக்கு வரவில்லை. தனது மகனுக்கு தொகுதி வேண்டும் என்றோ, வேறு பொறுப்பு வேண்டும் என்றோ கேட்கவில்லை. பணமும் கேட்கவில்லை. மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் முதலமைச்சர் விஜய்யுடன் சேர்ந்தார்.

இந்த முடிவை வைகோ மட்டும் எடுக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் எடுத்தன. தமிழக மக்களும், பெண்களும், இளைஞர்களும் எடுத்த முடிவு இது. ஆனால் மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு எடுத்துக்கொண்டு போய் சட்டப்பேரவையில் திமுகவுடன் உட்கார வைத்திருக்கிறீர்கள்.

திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களே, அதற்குப் பெயர் என்ன? திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, பெரிய உத்தம புத்திரன் மாதிரி பேசுகிறீர்கள். மதிமுகவுடைய இரண்டு வேட்பாளர்களை எத்தனை காசு, எத்தனை கோடி கொடுத்து வாங்கினீர்கள்? சொல்லுங்கள். எவ்வளவு செட்டில்மென்ட் பண்ணினீர்கள்?

30 வருடமாக வைகோவுடன் இருந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை எத்தனை கோடி கொடுத்து மு.க.ஸ்டாலின் பேக் பண்ணி அறிவாலயத்துக்குக் கொண்டு போனார்? இது மக்களுக்குத் தெரியாதா?

தமிழக வெற்றிக் கழகம்தான் இன்னொரு எம்.ஜி.ஆர்.; தமிழக வெற்றிக் கழகம்தான் இன்னொரு ஜெயலலிதா; தமிழக வெற்றிக் கழகம் என்றால் இன்னொரு வைகோ. வைகோ தோற்கவில்லை. அவர் கண்ட கனவு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

முதலமைச்சரைச் சந்தித்தபோது, ‘இது என்னுடைய கடைசிக் காலகட்டம். நான் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று வைகோ சொன்னார். அதற்கு முதலமைச்சர், ‘யார் சொன்னது கடைசிக் காலகட்டம்? இனிமேல்தான் உங்களுடைய அடுத்த வாழ்க்கை ஆரம்பிக்கப்போகிறது’ என்று வைகோவைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு கட்சியைக் கூட்டணியில் சேர்த்து, அந்தக் கட்சியின் தொண்டர்களைப் பயன்படுத்தி முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இல்லை. எல்லாக் கட்சிகளுக்கும் மரியாதை, பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அமைச்சரவையிலும் இடம் கொடுத்திருக்கிறார்.

மதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகி இருப்பார்கள்..

அந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களும் வைகோ பேச்சைக் கேட்டிருந்தால் இந்நேரம் அமைச்சர்களாக கூட இருந்திருக்கலாம். வைகோவை நம்பி வந்திருந்தால் எங்கள் தலைவர் அமைச்சர் பதவி கொடுத்திருக்க மாட்டாரா?

துரோகிகள் அடையாளம் காணப்பட வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியம். தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்த திமுக இனி தேர்தல் அரசியலில் ஜெயிக்கவே முடியாது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். சும்மா இருந்த மதிமுகவை டச் பண்ணிவிட்டீர்கள். இனிமேல் மதிமுக 2.0-வைப் பார்ப்பீர்கள்; புது வைகோவைப் பார்ப்பீர்கள்.

திமுக என்ற கட்சி இருக்கட்டும். அண்ணா உருவாக்கிய கட்சி உயிரோடு இருக்கட்டும். ஆனால் இந்தக் குடும்ப ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும். திமுகவை இந்தக் குடும்பம் கைப்பற்றி வைத்திருக்கக் கூடாது. கீழே இருந்து யாராவது ஒருவர் திமுகவின் தலைவராக வரட்டும்.

வைகோ திமுக தலைவராக இருந்திருந்தால் இந்நேரம் அரசியல் சூழ்நிலையே மாறியிருக்கும். அன்று அவரை ஒழித்துவிட்டார்கள். இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து அரசியல் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களோடு மக்களாக இருந்து சாமானிய மக்களுக்கான மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share