- ரவிக்குமார்
இந்தியாவில் தற்போதுள்ள நீதி அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்தியாவுக்கு வணிகம் செய்வதற்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனி, உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி நீதிபரிபாலனத்தைத் தொடங்கிவிடவில்லை. அதற்குப் பல ஆண்டுகள் ஆயின.
1765ஆம் ஆண்டில், வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாகாணங்களை நிர்வகிப்பதற்கான திவானி உரிமைகளை முகலாயப் பேரரசர் ஷா ஆலம் அவர்களிடமிருந்து கிளைவ் முதன்முதலில் பெற்றார். அந்த நிர்வாக அதிகாரம் வரி வசூலிப்பதற்கும் உரிமையியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பதற்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் மட்டும் நவாபிடமே தொடர்ந்து இருந்தது.

1771ஆம் ஆண்டில் பதவியேற்ற வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு, கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் உரிமையியல் நீதிமன்றங்களை ஒழுங்கமைத்தார். அவருக்குப் பின்னர் பதவியேற்ற கார்ன்வாலிஸ் பிரபு, 1790 முதல் 1793 வரையிலான காலகட்டத்தில் கம்பெனியின் நீதித்துறை அதிகாரங்களை ஒருங்கிணைத்து வலுப்படுத்தினார். நவாபிடம் இருந்த குற்றவியல் அதிகாரம் பறிக்கப்பட்டு, கவர்னர் ஜெனரலுக்கு மாற்றப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட பின்னரும்கூட இரண்டு வகையான நீதித்துறை அமைப்புகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தன. ஒன்று: மாகாணத் தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் இருந்த நீதிமன்றங்கள். அவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அவர்களுடைய சொந்தச் சட்டங்களின்படி நேரடியாக நிர்வகிக்கப்பட்டன. இரண்டு: கிராமப்புறங்களிலும் சிறிய நகரங்களிலும் இருந்த நீதிமன்றங்கள். அவை உள்ளூர் சட்டங்கள் மற்றும் மரபுகளின்படி செயல்பட்டன. இந்த நிலைமை 1861-ஆம் ஆண்டு வரை நீடித்தது (Our Judiciary, 1993, B. R. Agarwala, National Book Trust, Delhi).
இந்த இரண்டு வகையான நீதிமன்றங்களும் ஒரே காலத்தில் செயல்பட்டபோது, தண்டனைகள் பல நேரங்களில் சாதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டன. ‘தங்களை உயர்சாதியினர் என்று அழைத்துக்கொண்டவர்கள், மற்றவர்களைத் தாழ்ந்த சாதியினர் என்று முத்திரை குத்தி ஒடுக்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், கிழக்கிந்தியக் கம்பெனி இங்கு வந்து, 1816-ஆம் ஆண்டில் தாழ்ந்த சாதியினருக்குக் கசையடி போன்ற உடல்ரீதியான தண்டனைகளை விதித்தது; உயர்சாதியினருக்கோ வெறும் சிறைத்தண்டனையை மட்டுமே வழங்கியது. இதனால் ஏழை மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் சிதறிச் சென்று தப்பியோடினர்’ என்று பண்டிதர் அயோத்திதாசர் இதனை விமர்சித்தார் (தமிழன், ஏப்ரல் 15, 1908).

ரெட்டைமலை சீனிவாசன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பறையன் இதழில் (பிப்ரவரி 9, 1894) வெளிவந்த ஒரு செய்தி இதனை மேலும் தெளிவுபடுத்துகிறது: “தேசிய காங்கிரஸின் தலைவரான திரு. வெப் அவர்களுடன் உதவியாளராகச் சென்ற கோபால ஐயர் என்பவர், மெஸ்ஸர்ஸ். ரென் பென்னெட் அண்ட் கோ நிறுவனத்திலிருந்து ஒரு கழுத்துப்பட்டையைத் திருடியபோது பிடிபட்டார். அவரை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஒருநாள் சிறைத்தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்தார். இதே குற்றத்தைப் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் செய்திருந்தால், அவருக்குக் குறைந்தது பத்து மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை நிச்சயமாக விதிக்கப்பட்டிருக்கும்.” என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட பிற சட்டங்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்தியச் சமூகத்தில் அறிமுகப்படுத்தின. எனினும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று அறிவித்தபோதிலும், இந்தியச் சமூகம் உண்மையில் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிற்காலத்தில் நீதித்துறை அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்தியர்களும், ஆழமாக வேரூன்றியிருந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவில்லை. குற்றங்களை நடுநிலையோடு விசாரித்து நீதி வழங்குவதற்குப் பதிலாக, அதே பாகுபாட்டு மனப்பான்மையை உள்வாங்கிக்கொண்டு அதனைத் தொடர்ந்து நிலைநிறுத்தினார்கள். இத்தகைய அநீதிகளுக்கு எதிராகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் கண்களை மூடிக்கொண்டனர். இத்தகைய சூழலின் காரணமாகவே, “முன்சீப்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது” என்று அயோத்திதாசப் பண்டிதர் வலியுறுத்தினார். “உரிமையியல் வழக்குகளை விசாரிக்கும் முன்சீப்களிடம் குற்றவியல் அதிகாரங்களை ஒப்படைக்கக் கூடாது” என்று வாதிட்டார்.

சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நீதித்துறையின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து நிலைநிறுத்துவதற்காக நிரந்தரமான, வலிமையான ஏற்பாடுகளை அவர் செய்தார். அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள உரிமைகளின் பாதுகாவலனாக நீதித்துறையை அவர் கருதினார். இதற்காகவே நீதித்துறை சீராய்வு (Judicial Review) என்ற அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்டது. “உரிமைகளுக்கான தீர்வுகள் இருக்கும்போதுதான் அந்த உரிமைகள் உண்மையானவையாக இருக்க முடியும். உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்பட்ட ஒருவர் சட்டரீதியான நிவாரணத்தைப் பெற முடியாவிட்டால், அத்தகைய உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை. எனவே, நமது அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும்போதே, அவற்றைப் பறிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கோ சட்டமன்றத்துக்கோ இல்லாதவாறு தடுக்க வேண்டியது அவசியமாகிறது. அந்தப் பொறுப்பு நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள உரிமைகளை நீதிமன்றங்களே பாதுகாக்கின்றன” என்று அம்பேத்கர் விளக்கினார்.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து, இந்தியா குடியரசாகி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய சூழலில் நீதித்துறையின் மீதான அம்பேத்கரின் நம்பிக்கையை நீதிமன்றங்கள் காப்பாற்றுகின்றனவா? என்ற கேள்வி எழுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவாக விளங்கும் சமத்துவத்தை இந்தியச் சமூகத்தில் வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அதனை நலியச் செய்யும் பணியை உச்ச நீதிமன்றமும் ஆற்றத் தொடங்கிவிட்டதா? இது வெறும் ஊகமல்ல; நீதித்துறையைப் பாதிக்கும் அண்மைக்கால நிகழ்வுகளிலிருந்து எழுகின்ற கவலையாகும்.

2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் மாநிலங்களவையில் ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டது. அதன்படி, ஜனவரி 2021 முதல் ஜனவரி 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட 593 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், பட்டியல் சாதியினரைச் (SC) சேர்ந்தவர்கள் வெறும் 4% மட்டுமே; பட்டியல் பழங்குடியினரைச் (ST) சேர்ந்தவர்கள் சுமார் 2%; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் (OBC) சேர்ந்தவர்கள் 14% க்கும் குறைவானவர்கள். அதேசமயம், சுமார் 80 % நீதிபதிகள் முன்னேறிய அல்லது ‘மேல்’ சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இது ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல; 2018-ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 715 நீதிபதிகள் குறித்த அரசுத் தரவுகளும் ஏறக்குறைய இதே போன்ற விகிதாச்சாரத்தையே காட்டுகின்றன: பொதுப் பிரிவினர் 77% ;பட்டியல் சாதியினர் 3%, மற்றும் பட்டியல் பழங்குடியினர் 2%. உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, சட்ட ஆய்வாளர்களின் தனிப்பட்ட கண்காணிப்பின்படி, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிபதிகள் நியமனங்களுக்குப் பிறகு, அங்குள்ள 33 நீதிபதிகளில் குறைந்தது 12 பேர் (சுமார் 36% ) பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் ( The Wire, 17.08.2026)
இந்தியாவில் சமத்துவம் செழித்தோங்க வேண்டுமானால், சமூகக் கட்டமைப்பை அரித்துத் தின்றுகொண்டிருக்கும் புற்றுநோயான சாதியமைப்பு பலவீனப்படுத்தப்பட வேண்டும். ஆனால், சாதியமைப்பைத் தகர்த்தெறியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நமது நீதித்துறையோ, குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்களையே அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக நியமித்து சாதியைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளை மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.









