தவெகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ராகுல் காந்தி, திருமாவளவன் உள்ளிட்டோரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிறந்த நாளான செப்டம்பர் 22-ந் தேதி வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுகவின் கூட்டம் நேற்று தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ”திமுக எதிர்க்கட்சியாக இருந்து போரடித்துவிட்டது.. துரை வைகோ, நாடாளுமன்றத்தில் பேசியது போதும்.. சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவராக வர வேண்டும். மதிமுக 2.0- வை துரை வைகோ வழிநடத்துகிறார். 1990களில் மதிமுக எப்படி இருந்ததோ அதை வலிமையுடனே அந்த கட்சி இப்போதும் இருக்கிறது. மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்கள் வைகோவின் பேச்சை கேட்டிருக்க வேண்டும்; அவர்களுக்கு அறிவு இல்லை.. அறிவு இருந்திருந்தால் இந்த நேரம் அமைச்சர்களாகி இருப்பார்கள்” என்றார்.

இதில் பேசிய அமைச்சர் ஆனந்த், “வைகோ வாழ்த்தியதால் நான் எம்.எல்.ஏ.வாகி இருக்கிறேன். துரை வைகோ, எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்று சொன்னார்கள். அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய் ஜெயிப்பார்.. அதில் மதிமுக- துரை வைகோ ஆளும் கட்சியாகத்தான் இருப்பார்” என்றார்.
அதேபோல அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “வைகோ அவர்கள் அன்றைக்கே அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்திருந்தால் தி.மு.கவை கைப்பற்றி இருக்கலாம்.. தி.மு.கவிற்கு சென்ற இரண்டு ம.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு கிரகம் பிடித்து விட்டது.. எதிர்கட்சி தலைவராக துரைவைகோ வருகிற காலம் மிக விரைவில் வரும்” என்றார்.
இரட்டை குழல் துப்பாக்கி- உயிரையும் கொடுப்போம்
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேசுகையில், “ இந்தியாவே உற்று நோக்கும் மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் நீடிக்கனும். தவெக கூட்டணியில் சேர்ந்ததால் 2 எம்.எல்.ஏ.க்களை மதிமுக இழந்துவிட்டது. எங்களது ஒரே நோக்கம் திமுக எனும் தீயசக்தி ஒழிக்கப்பட வேண்டும். எங்களுக்கு மரியாதை கொடுத்த தவெகவுக்காக உயிரையும் நாங்கள் கொடுக்க தயார். மதிமுகவும் தவெகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும்” என்றார்.
மதிமுகவை தவெக மூத்த அமைச்சர்கள் இப்படி பாராட்டுகின்றனர்; துரை வைகோவும் தமது உயிரையே கொடுப்பேன் என வைகோ பாணியில் நெகிழ்ந்து சூளுரைக்கிறார்.

வைகோவுக்கு வாழ்த்து சொல்லாத விஜய்
இன்னொரு பக்கம், தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு (ஜூன் 19) வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய். தவெக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளுக்கு (ஆகஸ்ட் 17) வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய். ஏன் தவெக கூட்டணியில் இல்லாத நிலையிலும் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் நிறுவனர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளுக்கு (ஆகஸ்ட் 25) வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய்.
ஆனால் தவெகவுக்காக உயிரையே தருவோம் என பேசும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் பிறந்த நாளான செப்டம்பர் 22-ந் தேதி , விஜய் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. தமது பள்ளி ஆவணங்களில் மே 22-ந் தேதி பிறந்த நாள் என குறிப்பிட்டிருந்த போதும் தமது உண்மையான பிறந்த தேதி செப்டம்பர் 22 என வைகோ ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
