”உமர் என் மகன்”. அவனை நான் சந்தித்ததே இல்லையென்றாலும், அவனை நான் அப்படித்தான் அழைக்க விரும்புகிறேன். எனக்கு மகன் கிடையாது. மகள்தான் இருக்கிறாள். சுயமாக சிந்திக்க தொடங்கும் வயதை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருப்பவள் அவள். ஆனால், உமர் அந்த வயதையெல்லாம் கடந்து விட்டான். அவன் ஏற்கனவே சுதந்திரமாக சிந்திக்க தொடங்கிவிட்டான். உலகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவன் இதயத்தின் மையத்தில் இருந்து ரத்தம் கசிகிறது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அவன் கோபத்தில் துடிக்கிறான், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஓயாமல் கூக்குரலிடுகிறான்.
ஒவ்வொரு பெற்றோரும் மகனாக அடைவதற்கு ஆசையும், பெருமையும் கொள்ளத்தக்கவன் உமர். ஏனென்றால், அவனால்தான் தன் பெற்றோர்களின் கருத்துகளோடு மோத முடியும். குடும்பமும், சமூகமும், மதமும் அவன் மீது திணித்த அடையாளங்களை களைந்து சுதந்திர பறவையாக வெளிவர முடியும். மற்றவர்கள் கடக்க தயங்கும் எல்லைகளை கடந்து தனது மனிதத்தை நிரூபணமாக்க முடியும்.
வேலைக்காகவும், பாக்கெட்டை முழுமையாக நிரப்பும் சம்பளத்திற்காக மட்டும் போராடும் இளைஞர்களாகவும், அடிபணிவதையும், பழமைவாத சிந்தனையையும் கொண்டவர்கள் மட்டுமே, இளைஞர் சக்தியாக வாய்ப்பது ஒரு தேசத்திற்கு எவ்வளவு பெரிய கெடுவாய்ப்பு. சிலருக்காக மட்டும் லாபத்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் சக்கரமாகவோ, பற்களாகவோ இருந்துவிட்டு போவதற்கு தயாராக இருக்கும் இளைஞர்கள் இந்தியாவில் கூட்டம், கூட்டமாக இருக்கிறார்கள். இந்த கூட்டம்தான் ஆன்மாவை வசதிக்காக விற்றுவிட்டு, முகநூலிலும், ட்விட்டரிலும் தேசியவாதத்தை விளம்பரப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இப்படி மந்தைகளாக மாற்றப்பட்டவர்கள்தான், உமர் தங்களோடு, தங்களைப்போன்று இல்லை என்று கோபித்துக் கொள்கிறார்கள்.
நான் உமரை நேசிப்பதற்கு, அவனுடைய சித்தாந்தமோ, அரசியலோ காரணமில்லை. என்னை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.. என்னுடைய திருத்தல்வாத கருத்துக்களுக்காக, ஜனநாயகத்தை பற்றிய என்னுடைய தாராளவாத நம்பிக்கைகளுக்காக என்னிடம் அவன் மிகக்கடுமையாக முரண்படக்கூடும். அவனை பற்றி நான் அறிந்தவரைக்கும் அவன் தீவிர மாவோயிஸ்ட் சிந்தனையாளன். நான் ஒரு தீவிரம் குறைந்த, கொள்கை சமரசம் செய்துகொண்ட கம்யூனிஸ்ட். மையநீரோட்டத்தில் தேர்தல் பாதையில் பங்கெடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர். அவனுடைய பார்வையில், அந்த கட்சி தன் பெயரளவில் மட்டுமே கம்யூனிஸ்ட்டாக இருக்கிறது. முடிவில்லா போராட்டத்தன்மைக்காக அவனை நான் ஏற்றுக் கொள்கிறேன். புரட்சி செய்வதென்பது, ஒருவருடைய மானுடத்தன்மையை உறுதி செய்து கொள்வதுதான். அதேபோல, போராளி என்பவன் மனிதம் துருப்பிடித்துப் போகாமல் காப்பாற்றி அதை புதுப்பிப்பவன்.
போராளி என்பவன் யார்? வேண்டாம் என்று மறுப்பவர்தான் போராளி, ஆனால், அவரது மறுப்பு என்பது துறவு இல்லை. போர்க்குணத்தின் முதல் சமிக்ஞையை வெளிப்படுத்திய முதலாவது கணத்திலிருந்து அதை அடைய வேண்டும் என்று முடிவெடுப்பவன்தான் என்றார் அல்பர்ட் கேமஸ்.
போராளி என்பவன் கடுமையான கோபக்காரன்தான் என்றாலும் சொந்த இடர்ப்பாடுகளால் வருத்தமடைந்து பழிவாங்கும் உணர்ச்சியால் உந்தப்பட்டவன் அல்ல. பழிவாங்கும் உணர்ச்சி என்பது தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கிறதென்னும் உணர்ச்சியை அதிகப்படுத்தும். வலிகளும், வீரியமும் மட்டுமே போராளியின் குணங்களே அன்றி பழிவாங்கும் உணர்ச்சியும், பொறாமையும் அல்ல. தன்னை பிறரோடு அடையாளப்படுத்திக் கொண்டு, பிறரின் துயர்களுக்காக வருந்துபவன் போராளியாக மாறுகிறான். துயரக்கடலை கடக்கும் அவன் தன் சிலுவையின் அளவை பெரிதாக மாற்றிக் கொள்கிறான். தனிப்பட்ட துயரங்களால் உந்தப்படாததால், அவன் சுயநலவாதியுமல்ல, அவன் கசப்பான மனிதனும் அல்ல.
உமர் என்பது பெயரால் உமர் என்பது மட்டுமே, அதற்கு இஸ்லாமிய அடையாளம் கிடையாது. அவனுடைய குடும்பமும், அவனுடைய தந்தையும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவனுடைய தந்தை முன்பு சிமியில் உறுப்பினராக இருந்தவர். ஆனால், உமர் தந்தையின் பாதையை தேர்வு செய்யவில்லை. அவனுடைய அரசியல் இஸ்லாமியர்களுக்காக மட்டும் சிந்திப்பதல்ல. தன்னுடைய குடும்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பகுத்தறிவாளனாகவும், தீவிர மாவோயிஸ சிந்தனையுடனும் மாறியிருக்கிறான். அதேபோல, பாலினம் மற்றும் தலித்துகள் தொடர்பான சிக்கல்களில் உணர்வுரீதியில் தன்னுடைய அமைப்புக்கு புரிதல் குறைபாடு இருக்கிறது என்று கருதியதால் அமைப்பிலிருந்தும் விலகி இருக்கிறான். தொடர்ந்து இடதுசாரியாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் ஆளுமை அவன்.
இடது என்பது கடினமான சிந்தனையாகவும், அடைய முடியாத இறுதி லட்சியத்தையும் கொண்டதாக இருக்கிறது. உமருக்கு இந்த சிந்தனையின் மீது பேரார்வம் உள்ளது. அவனுடைய இந்த தேடல், இதுவரை நாம் படைக்காத புதுமையை படைத்திடக் கூடும் என்பதால் நான் அவனை தடுக்கப்போவதில்லை. அவனின் இந்த தேடல் என்பது தவறுகளை அடையாளம் கண்டபிறகும், அதை தொடர்ந்து செல்லும் இறுக்கமான அணுகுமுறை இல்லாமல் இருப்பதால், நமக்கு பயன்தரக்கூடியதாகத்தான் இருக்கும்.
தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கான அன்பு, தவறாக சித்தரிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, வரலாற்றின் எதிர்ப்பக்கம் நிற்கின்றவர்களுக்கான அன்பு என போராளி ஆமோதிக்கும் கருத்துக்கள் என்பது அன்பினால் உந்தப்பட்டது,
கேமஸ் இதை அறியா காதல் என அழைக்கிறார். இது திட்டமிட்டு வருவதல்ல. அது சந்தேகிக்காத காதல். இப்படியான காதலால் நிரம்பிய வழியில் ஒரு போராளி தன்னுடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்கமாட்டான். மனிதனால் மட்டுமே எதிர்காலத்தை குறித்து சிந்திக்க முடியும் என்று தத்துவவாதிகள் கூறுவதுண்டு. ஆனால், போராளிகள் எதிர்காலத்தை குறித்து திட்டமிடுவதோ, அதற்காக வாழ்வதோ இல்லை.
சமகாலத்தில் வாழும் மனிதர்களுக்காக, சமகாலத்திற்காக தன்னுடைய அனைத்தையும் தியாகம் செய்கிறான். போராளிகளைப் பற்றிய தன்னுடைய ஆய்வில்”சமகாலத்திற்கு அனைத்தையும் வழங்குவதன் மூலம், எதிர்காலத்திற்கு நம்முடைய உண்மையான கருணையை அளிக்க முடியும்” என்கிறார் கேமஸ்.
ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி உமரால் கண்டிப்பாக நகர்ந்திருக்க முடியும். அப்படி செய்வதன் மூலம் தன்னுடைய அரசியலை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று அதற்கு நியாயமும் கற்பித்திருக்க முடியும். ஆனால், அவன் பாதுகாப்பு இல்லாத ஒன்றையே தேர்வு செய்தான்.
தன்னை எல்லைகளற்ற ஒருவனாகத்தான் உமர் நினைக்கிறான். தேசியவாத சிறைகளுக்குள் அவன் அடைப்பட்டு கிடக்க விரும்பவில்லை. அமெரிக்காவின் கொலம்பியாவிலிருந்து கடல் கடந்து வந்து, பாலஸ்தீன வீடு ஒன்று தகர்க்கப்படுவதை எதிர்த்த காரணத்தினால் புல்டோசர் ஏற்றிக் கொல்லப்பட்ட ரேச்சல் கோரியை (Rachel Corrie) உமர் எனக்கு நினைவுபடுத்துகிறான். அவள் தன்னுடைய தேச நலனுக்கு எதிராக இயங்கியவள். அதற்கான விலையாக தன்னுடைய உயிரையே கொடுக்க நேர்ந்தது. இஸ்ரேலிய டாங்கி தன்னுடைய கூட்டாளியான நாட்டின் குடிமகளைக் கூட விடவில்லை. நாம் அவர்களை கண்டு அஞ்சினாலும், உமர்களும் கோரிகளும் நமது உலகியல் விருப்பங்களுக்காகவும், தேசியவாத இருப்புக்காகவும் மிகவும் தேவைப்படுகிறார்கள்.
தன் நண்பர்கள் மத்தியில் உமர் மீண்டும் ஜேஎன்யூ வளாகத்தில் நுழைந்துவிட்டான். தெள்ளத்தெளிவாக உரக்க பேசுவதை கேட்டிருப்பீர்கள். அவன் குறுகலான தந்திரம் நிறைந்தவனில்லை, வெறியூட்டப்பட்ட இந்த தேசத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு துணிச்சல் படைத்தவனாகவே அவன் இருக்கிறான். பிரதானமான கேள்வி என்னவென்றால், கடந்த பத்து நாட்களாக இணையத்தின் வெளியில் அவனுக்கு எதிரான அவதூறு பரப்பப்படுவதை வேடிக்கை பார்த்த நம்மால், அவனுடைய கண்களை துணிச்சலாக சந்திக்க முடியுமா என்பதுதான்?
காஸி நஸ்ரூல் இஸ்லாமின் பிட்ரோஹியை பாடிக் கொண்டே, உமரை விட்டு விலகியும் நிற்போம் என்பது பொருத்தமான நடவடிக்கை இல்லை. உமர், கன்ஹையா மற்றும் அவர்களது நண்பர்கள் இந்திய தேசபக்தி உயிர்ப்போடு இருப்பதற்காக ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. நாம் நம்முடைய உள்ளத்தின் அழைப்பிற்கு உண்மையாக இருப்போமென்றால், அவர்களை நம்முடையவர்களாக அறிவித்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கமுடியும்.
அவர்களின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல், அவர்களை தண்டித்து, தன் உமர்களோடும், கன்ஹையாக்களோடும் நிற்க முடியாத நாட்டிற்கு ஆழ்ந்த வருத்தங்களைத்தான் தெரிவிக்க வேண்டும். நாம் நம்முடைய உமர்களை தியாகம் செய்யாமல் இருப்போம். நம்மை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தாமல் இருப்போம். நாம் நம்முடைய குழந்தைகளை கொலை செய்யாமல் இருப்போம்.
எழுதியவர்: அபூர்வானந்த், டெல்லி பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக பணிபுரிகிறார்
நன்றி. இந்தியன் எக்ஸ்பிரஸ்
(தமிழில்: குணவதி)
