முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் பாமக இணைவதாக வெளியாகும் தகவல் வதந்தி என சவுமியா அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, அதிமுகவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தால் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக வெற்றி பெற்றாலும், சட்டமன்றத்தில் அக்கட்சியின் பலம் 109 ஆக மட்டுமே உயரும். எனவே, மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுடன், மேலும் நான்கு தொகுதிகளின் ஆதரவும் தவெக ஆட்சிக்குத் தேவைப்படுகிறது.
இதனிடையே, ஏற்கனவே ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக கூட்டணியில் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளன. இந்த இடைத்தேர்தலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக எதிர்கொள்வதால் தற்போது களத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம் பெற்ற பாமக இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்தது.
இச்சூழ்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், சில அமைச்சர்கள் நீக்கப்பட்டுச் சிலரின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், தவெக கூட்டணிக்குள் பாமக வந்தால் அக்கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்றும் செய்திகள் பரவின. குறிப்பாக, பாமக ஆதரவு அளித்தால் அக்கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் சவுமியா அன்புமணிக்குச் பள்ளிக்கல்வி, சுற்றுச்சூழல் அல்லது வனத்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறை ஒதுக்கப்பட்டு அமைச்சராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலவின
இதுகுறித்து விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சவுமியா அன்புமணியிடம், இடைத்தேர்தலுக்குப் பின் தவெக அமைச்சரவையில் பாமக இணையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அது முற்றிலும் வதந்தி. பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இதுபோன்ற வதந்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்” எனத் தெரிவித்துப் பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
