முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைகிறாரா?

Published On:

| By Pandeeswari Gurusamy

semmalai

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் இன்று கட்சியில் இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தாராபுரத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT

கோவை வந்தடைந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தாராபுரம் நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். வழிநெடுகிலும் அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாராபுரத்தில் இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் அவர் தவெக கட்சியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

முன்னதாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவியது. இதையடுத்து, ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்த செம்மலை அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து கட்சியில் பயணிக்க எனது மனம் இடம் தரவில்லை. ஆகையால் தான் அதிமுகவிலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்தேன்” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக செம்மலை கடந்த 2001-ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தற்காலிகச் சபாநாயகராகப் பணியாற்றினார்.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது தாராபுரத்தில் விஜய் பங்கேற்கும் விழா வளாகத்தில், தவெக அமைச்சர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் செம்மலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share