தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வா் ச. ஜோசப் விஜய் பிரசாரம் இன்று(செப். 30) மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்’ என்று திமுக தலைவர் சொல்வாராம். ஆனால் அதை மதிக்க மாட்டாராம்.
எப்படியாவது இடையூறு பண்ணலாம், என்னென்ன சதிவேலை செய்யலாம், யாருடன் கூட்டு சேரலாம், யாருடன் எல்லாம் கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் எல்லாம் சேர்ந்து திட்டம் போடுவது.
இந்த திமுக புதிதாக ஒரு கிளை ஒன்று திறந்திருக்கிறார்கள். அந்தக் கிளை வந்து முதல்ல பாஜகவின் ஒரு கிளையாக இருந்தது. இப்போது திமுகவின் கிளையாகவும் மாறிவிட்டது.
இவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே இவர்களும் செய்வார்கள். இவர்கள் என்ன பேசுகிறார்களோ அதை அப்படியே இவர்களும் பேசுவார்கள். இவர்கள் என்ன அறிக்கை விடுகிறார்களோ, இவர்களும் அப்படியே நகலெடுத்து (copy paste) அந்த அறிக்கையை விடுவார்கள்.
யார் என்று தெரிகிறதல்லவா?
இந்த ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ மற்றும் பலர்.
இவர்கள் இரண்டு பேரும் ஒன்றுதான். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே உரிமையாளர்தான் (owner).
அதனால் நீங்கள் என்ன சதிவேலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், கடவுளும் மக்களும் நம்மோடு இருக்கும்போது… ஒன்றும்…
ஒரு சிறிய கேள்வி ஒன்று கேட்கிறேன் மக்களே.
எம்ஜிஆர் அவர்கள் யாரை எதிர்த்துக் கட்சி ஆரம்பித்தார்?
ஜெயலலிதா அம்மையார் யாரை எதிர்த்து அரசியல் செய்தார்?
இந்த தீய சக்தி திமுக.
அப்படிப்பட்ட இந்த தீய சக்தி திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டால், அது எம்ஜிஆர் அவர்களை அவமானப்படுத்துவது போலத்தானே?
ஜெயலலிதா அம்மையாரை அவமானப்படுத்துவது போலத்தானே?
இன்றைக்கு இருக்கிற எம்ஜிஆர் தொண்டருக்கு அது வலிதானே? அது வேதனைதானே? அந்தச் சதியை எப்படி அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்?
அதனால் தான் இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்தும், நம்முடைய சகோதரி சத்யபாமா அவர்கள், எம்ஜிஆர் அவர்களின் ஒரு உண்மையான விசுவாசியாக, ஜெயலலிதா அம்மையாரின் ஒரு உண்மையான விசுவாசியாக, அதைத் தாங்க முடியாமல் நம்மோடு வந்தார்கள்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு ஒன்றும் கட்சி தாவவில்லை. முறையாகப் பதவியை விலகிவிட்டு (resign) நம்மோடு வந்தார்கள்.
உடனே அந்தப் பேரும், இந்தப் பேரும், ஏதோ கழுதை, குதிரை ஏதேதோ பெயர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.
மக்கள் ஆதரவு நம்மோடு இருக்கும்போது நமக்கு எதற்குங்க இந்தப் பெயர்கள் எல்லாம்?
மக்கள் இந்த அவதூறை எல்லாம் பரப்புவதே இல்லை. அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திமுகவும் இந்த மற்றும் பலரும் சேர்ந்துதான் இந்த அவதூறை எல்லாம் பரப்புகிறார்கள்.
இந்த திமுகவுக்கு இந்த மற்றும் பலர் ஒரு முட்டு ஒன்று கொடுக்கிறார்கள் பாருங்கள்.
ஒரு உதாரணமாகச் சொல்லப்போனால், சட்டமன்றத்தில் சர்க்காரியா ஆணையத்தைப் பற்றி நான் பேசினேன்.
நான் ஏன் பேசினேன் என்றால், ஜெயலலிதா அம்மையார் இருக்கிற வரைக்கும் அந்தச் சர்க்காரியா ஆணையத்தைப் பற்றி இதே…
சரி, நாமும் அந்தப் புள்ளியை எடுத்துப் பேசுவோம் என்று பேசினால், ‘நீ ஏன் பேசுகிறாய்?’ என்கிறார்கள்.
திமுக கோபப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் மற்றும் பலர் கோபப்பட்ட உடனே எனக்கு ஒன்றும் புரியவில்லை.
‘இத்தனை வருடமாக நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். அதேதானே இப்போது நான் பேசுகிறேன். என் பக்கம் திரும்புகிறீர்களே?’ என்று…
இந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மாதிரி, ‘என்ன ஆச்சு? என்ன ஆச்சு?’ என்று நம்மளையே குழப்பி… அப்படி ஒரு முட்டு.
அதனால் எம்ஜிஆர் அவர்கள் மாதிரியே, ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மாதிரியே, இன்றைக்கும் துணிச்சலாக இந்த திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும்தான்.
அது எம்ஜிஆர் அவர்களின் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அதனால் தான் என்னென்னவோ கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தார்கள். இப்போது புதிதாக ஒரு கணக்கு போட்டு, குறுக்கு வழியில் எப்படிடா இந்த ஆட்சியைக் கலைக்கலாம் என்று…
அன்றைக்கு நான் சொன்னதுதான் இன்றைக்கும் சொல்கிறேன்.
எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது அன்புக் கணக்கு. இந்தத் தேர்தலை எல்லாம் தாண்டிய பாசக் கணக்கு.
இதையெல்லாம் தீர்ப்பதற்கு இந்த ஊழல் கணக்கு போடுகிற திமுகவாலும் முடியாது. கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்த இந்த மற்றும் பலராலும் முடியாது.
ஏனென்றால், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற பச்சைக் குழந்தையிலிருந்து பாட்டி, தாத்தா வரைக்கும் என்னுடைய சொந்தங்கள், என்னுடைய உறவுகள்.
அதனால் எப்பாடுபட்டாவது அவர்களுக்கு நல்லது செய்வேன். நல்லது மட்டும்தான் செய்வேன். எந்த எல்லைக்கும் போய் நான் அதைச் செய்யத் தவறவே மாட்டேன்.
தாராபுரம் தொகுதி மக்களே, எனக்கு நீங்கள் ஒரு உத்தரவாதம் ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த தீய சக்தி திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?
அதேபோல, எம்ஜிஆர் அவர்களையும் ஜெயலலிதா அம்மையார் அவர்களையும், இரண்டு பேருக்கும் துரோகம் செய்த… மறுபடியும் சொல்கிறேன், துரோகம் செய்த… மறுபடியும் சொல்கிறேன், அடிக்கோடிட்டுச் சொல்கிறேன், துரோகம் செய்த இந்த மற்றும் பலருக்கு ஓட்டு போடுவீர்களா?
எனக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். நிறைய விஷயம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
திமுகவை எதிர்த்த எம்ஜிஆர் அவர்களுக்கும், ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும் சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல், உண்மையாக, உணர்வாக, நேர்மையாக, உயிராக இத்தனை வருடம் நீங்கள் கூடவே இருந்திருக்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அது நன்றாகத் தெரியும்.
கொங்குப் பகுதி மக்களே, நீங்கள் உழைக்கின்ற மக்கள். நீங்கள் எப்போதுமே சத்தியத்தின் பக்கம்தான் நிற்பீர்கள்.
அதனால் நம் சத்யபாமா அவர்களுக்கு, நம் சகோதரி சத்யபாமா அவர்களுக்கு, தயவுசெய்து உங்கள் விசில் சின்னத்தில், உங்கள் விசில் சின்னத்தில் நீங்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் அதை உறுதியாக நம்புகிறேன்.
இவர்கள் இரண்டு பேருக்கும் நீங்கள் ஓட்டு போடுவது ஒன்றுதான். இரண்டு பேரும் ஒன்றுதான். வெளியில் தான் வேஷம். இரண்டு பேரும் கூட்டுதான்.
அதனால் நம் வீட்டில் இருக்கிற, நம் குடும்பத்தைச் சேர்ந்த நம் சகோதரி சத்யபாமா அவர்கள் இந்த தாராபுரம் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார்கள்.
இந்த இரண்டு பேரும் சொல்கிற பொய்யை எல்லாம் நம்பாதீர்கள்.
நம்முடைய ஆட்சி அமையக் கூடாது என்று சொல்லிச் சதி செய்த இவர்கள் இரண்டு பேருக்கும் நீங்கள் ஒரு சரியான பாடம் புகட்டியே ஆக வேண்டும்.” என்றார்.
