தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அப்போது பேசிய முதல்வர், ” 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களெல்லாம் தவெகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விட்டார்கள் என்பதை எல்லாம் மறந்துட்டு, திமுகவை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்கன்றதை எல்லாம் மறந்துட்டு, இன்னமும் நாங்கள்தான் முதலமைச்சர், இன்னமும் நம்முடைய குடும்பம்தான் அதிகாரத்தில் இருக்கு, இன்னமும் நம்ம குடும்பத்துக்குக் கீழதான் அடிமையா இருக்கணும் அப்படின்னு சில பேர் நினைக்கிற மாதிரி…
இந்த மன்னராட்சி மனப்பான்மை எல்லாம் நமக்கு கிடையாதுங்க. ஒன்று.
இரண்டாவது, ‘மக்களிடம் செல், மக்களுடன் வாழ்’ என்று அண்ணா அவர்கள் சொன்னதைத்தான் நாம் பின்பற்றுகிறோம்.
ஆனால் இன்றைக்கு அண்ணாவையும் மறந்துட்டு, அவர் ஆரம்பித்த அந்தக்கட்சியையும் மறந்துட்டு, இந்த தீய சக்தி திமுகவோடு மறைமுகமாக, பினாமியாகக் கூட்டு சேர்ந்துக்கிட்டு சுயநலமாகச் சுற்றுகிறவர்களும் நாம் கிடையாதுங்க.
நாம் இங்கு மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம். அவர்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம். மக்கள் நம் மீது ஒரு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதை நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம். சரிதானே?
நாம் அரசியலுக்கு வருகிறதற்கு முன்னாடி, ‘எம் மதமும் சம்மதம்’ என்று சொன்னதோடு இல்லாமல், ‘எம் மதமும் நம்மதம்’ என்று சொல்லிட்டுத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.
கடவுள் நம்பிக்கை இருக்கு என்று சொல்லிட்டுத்தான் அரசியலுக்குள் வந்திருக்கிறோம். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று சொல்லிட்டுத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.
உங்களது அந்த நம்பிக்கையை நாம் மதிக்கிறோம். மற்றவர்கள் மதிக்கிறார்கள், மதிக்கவில்லை என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் மதிக்கிறோம்.
அதனால் தான் நம்முடைய கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதிக்கொள்கை. நம்முடைய கூட்டணிப் பெயர்கூட மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி.

கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்வோம். கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வோம். பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்வோம். நமக்கு எல்லாருமே ஒன்றுதான். எல்லாருமே சமம்தான்.
மற்றவர்களைப் போல வெளியில் வேஷம் போட்டுக்கிட்டு, வீட்டுக்குள் பம்மிப் பதுங்கிக்கிட்டு, இந்த திமுகவைப் போல எல்லாம் நாம் எப்போதுமே இருக்க மாட்டோங்க.
இங்கு ஒருசில திமுக தலைவர்களுக்குக் கொஞ்சம் மறதி அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஏதோ ஞாபகத்தில் சில உண்மையை எல்லாம் போட்டு உடைக்கிறார்கள்.
இந்த திமுக பொதுச்செயலாளர் பேசும்போது சொல்கிறார், அண்ணா காலத்தில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஆட்களைத்தான் தேர்தலில் நிற்க வைத்து, அன்றைக்கு இருந்த மன்னர்களை எல்லாம் தோற்கடித்தார்கள் என்று சொன்னார்.
அண்ணா காலத்திலும் அப்படித்தான் நடந்தது. எம்ஜிஆர் காலத்திலும் அப்படித்தான் நடந்தது. ஏன், இன்றைக்கு நம் காலத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.
அதைவிடச் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த ஆட்களைத்தான் தேர்தலில் நிற்க வைத்து, இன்றைக்கு இருக்கிற திமுக மன்னரையும், குறுநில மன்னர்களையும் நம் தவெக தோற்கடித்தது.
இதைத்தான் அந்தப் பொதுச்செயலாளர் சொன்னார். அண்ணா காலம் மாதிரியே, எம்ஜிஆர் காலம் மாதிரியே இன்றைக்கு இந்தக் காலம் வந்திருக்கிறது. வரலாறு திரும்பியிருக்கிறது. தயவுசெய்து புரியாதவர்கள் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லி, திமுகவினுடைய தலைமையினுடைய மண்டையிலேயே ஓங்கி நறுக்கு நறுக்கென்று கொட்டியிருக்கிறார்.
அது தெரியாமல் இவர்கள் எல்லாரும் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டு ‘ஹா… ஹா… ஹா…’ என்று சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சரி, அதை விடுங்கள். அது ஒரு கூத்து. பொதுச்செயலாளருக்குத் தலைமையோடு என்ன பிரச்சினையோ, அது அவர் பிரச்சினை. அவர் பார்த்துக்கொள்ளட்டும்.
அதனால், இப்படி திமுகவின் பொதுச்செயலாளர் பேசிய உடனே திமுகவின் தலைவர் பேச வேண்டும் அல்லவா? அவர் பங்குக்கு இதேபோல மறதியில் ஒரு உண்மையைப் போட்டு உடைக்கிறார்.
என்னவென்றால், கொளத்தூர் மக்கள் அவருக்கு ஓட்டு போடவில்லை என்று.
அதையும் அவர் எப்படிச் சொல்கிறார் என்றால், கையெடுத்துக் கும்பிட்டு, சத்தமாக, சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டே, ‘கோடான கோடி நன்றி’ என்று சொல்கிறார்.
இது எப்படி இருக்கிறது என்றால், ‘அந்தக் குழந்தையே நீங்கள்தான் சார்’ என்று சொல்வதைப் போல. அந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்துவதைப் போல.
அவர் வந்து அதை அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்.
அதாவது, என்ன ஒரு நடிப்பு பாருங்கள். படப்பிடிப்புக்குப் போய் தான் நடிப்பார்கள். ஆனால் மேடையிலேயே நடித்து நடித்து அந்தப் பழக்கம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன் அவருக்கு.
அதனால் தான் அவர் நடித்துச் சொன்னதற்கு என்ன அர்த்தம் தெரியுமல்லவா?
ஆமாம், திமுகவின் ஆட்சியில் அவ்வளவு தவறுகள் நடந்திருக்கின்றன. அதனால் தான் கொளத்தூர் மக்கள் உங்களுக்கு ஓட்டு போடவில்லை என்று அர்த்தம்.
இனிமேல் வரப்போகிற எல்லாத் தேர்தலிலும் இதேபோல கையெடுத்துக் கும்பிட்டு, ‘மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை… மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை… கோடான கோடி நன்றி… கோடான கோடி நன்றி’ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
இதற்கும் விஜய்தான் காரணம் என்று சொல்லி நம் மீது அசிங்கமாகப் பேசிவிட்டு, இப்போது ஒருமையில் வேறு பேசுகிறார். ‘அவன், இவன்’ அப்படியெல்லாம்.
நாம் அவரை அன்பாக, பாசமாக, உறவாகக் கூப்பிட்டால் அது தப்பா? கட்சிக்காரர்களை விட்டு ஏவி விடுகிறார். ‘அது எப்படி ஒரு முதலமைச்சரைப் பார்த்து அப்படிப் பேசலாம்?’ என்று.
ஆனால் இவர் ஒருமையில் ‘அவன், இவன்’ அப்படியெல்லாம் பேசுகிறார்.
நீங்கள் பேசுங்கள் சார். நீங்கள் தாராளமாகப் பேசுங்கள்.
உங்களுக்குப் பிடித்த கட்சிக்காரர்களை விட்டு, உங்களுக்குப் பிடித்த அந்த ஏஜென்ட்டுகளை விட்டு, அதான் உங்களுடைய பரம்பரைச் சொத்து இருக்கிறதே, பரம்பரைச் சொத்தான ஆபாச நதியை எல்லாம் வளர்த்து வைத்திருக்கிறீர்களே, வன்ம நதி, இவர்களை எல்லாம் வைத்துப் பேச விடுங்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு நம்மைத் தரம் தாழ்த்திப் பேசப் பேசப் பேச, மக்கள் நம் தரத்தை அப்படியே உயர்த்திக்கொண்டு போய் மேலே நிறுத்துவார்கள்.
அந்த வழக்கம் ஒன்று சொல்வீர்களே, ‘மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்… மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்’ என்று.
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் மக்களே. இந்த இடைத்தேர்தலுக்கு அப்புறம் அப்படி ஒரு அறிக்கை வருகிறதா இல்லையா என்று பாருங்கள்.
இதைத்தான் 2026 தேர்தலுக்கு முன்னாடி ஒரு பொதுக்குழுக் கூட்டத்தில் இதே விஷயத்தைத்தான் சொன்னேன். நடந்ததா? மறந்துவிட்டீர்கள் என்றால் எடுத்துப் போட்டுப் பாருங்கள்.
