அன்பில் மகேஷுக்கு இடைக்கால நிவாரணம் கிடையாது : உயர் நீதிமன்றம் செக்!

Published On:

| By Kavi

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது. 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் அவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டது. 

இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை செய்தனர். 

ADVERTISEMENT

தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்னையில் மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 

இதற்கிடையே அவர், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது அன்பில் மகேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி வருவதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி அரசகுமார் தனியாக அலுவலகம் அமைத்து பணம் வசூலித்துள்ளார். அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி இந்த மனு மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது. கைது செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தால், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி  எழுப்பும். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுமானால் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறினார். 

மேலும் அன்பில் மகேஷ் மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share