த.வெ.க. கூட்டணியில் பா.ம.க.? – அமைச்சர் ராஜ்மோகன் பதிலும்.. வன்னி அரசின் நிலைப்பாடும்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சாதியவாத பா.ம.க-வுடனும், மதவாத பா.ஜ.க-வுடனும் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்காது என வி.சி.க. துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக்டோபர் 1) அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவதாக வதந்தி பரப்பப்படுகிறது எனத் திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், த.வெ.க. தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அது உண்மையா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “த.வெ.க. கூட்டணி என நீங்கள் சொல்கிறீர்கள். அது உண்மையிலேயே மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் ஒரு கட்சி சேர வேண்டும் என்ற முடிவை முதல்வரும், கூட்டணிக் கட்சியின் தலைவர்களாக இருக்கக்கூடிய பெருந்தகையாளர்களான திருமாவளவன், வைகோ, காதர் மொகிதீன் என அத்தனை பேரும் – எப்போதுமே ஒன்றாகக் கூடிப் பேசித்தான் முடிவெடுப்பார்கள். ஜனநாயகத்திற்குத்தான் முதலிடம்” என மழுப்பலாக தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “எங்களுடைய தலைவர் பத்தாண்டுகளுக்கு மேலாக வெளிப்படையாக அறிவித்த அறிவிப்பு இது. முக்கியமான அறிவிப்பு. சாதியவாத பா.ம.க-வுடனும், மதவாத பா.ஜ.க-வுடனும் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வைக்காது என்கின்ற எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் நாங்கள் தொடருவோம். அந்த நிலைப்பாட்டில் தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ADVERTISEMENT

இந்த கருத்து குறித்து மரியாதைக்குரிய சௌமியா அன்புமணி அவர்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அது வதந்தி என்று அவரும் சொல்லியிருக்கிறார். எனவே வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share