தலைமைத் தேர்தல் ஆணையர் குறித்த விவகாரத்தில் அமைச்சர் ராஜ் மோகன் கருத்து எதார்த்தத்திற்குப் புறம்பானது என பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் த.வெ.க. கலந்துகொள்ளாதது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை பி.ஜே.பி. அணியில் இடம்பெறாத அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் இக்கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்கின்ற பொதுவான அழைப்பையும் வேண்டுகோளையும் நாங்கள் விடுத்திருக்கிறோம். அந்த வேண்டுகோளை ஏற்று இணைவதும், இணையாமல் வெளியில் நிற்பதும் அந்தந்தக் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பமாகும்.
நேற்றைய தினம் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் செல்லவில்லை என்றாலும், எங்களது கோரிக்கைகளை அவர்கள் ஏற்கின்றனர். நாடாளுமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கத் தீர்மானம் வரும்போது அதை ஆதரித்துத் திராவிட முன்னேற்றக் கழகம் வாக்களிக்கும் என்று தி.மு.க. தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோல், அமைச்சர் ராஜ்மோகன், ‘தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற ஒரு தனிநபரை மட்டும் இதற்குக் பொறுப்பாக்குவதை நாங்கள் ஏற்கவில்லை’ என்ற வகையில் இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற முறையில் மற்ற அனைவரையும் விட அவருக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. ஆணையத்தில் இடம்பெற்றுள்ள மற்ற இரண்டு ஆணையர்களும், ‘எங்களுக்குத் தெரியாமல் ஆளும் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக, ஆளும் கட்சிக்குச் சாதகமாகப் பல்வேறு முடிவுகளைத் தன்னிச்சையாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் எடுத்தார்’ என்று கூறி உள்ளனர். இந்த சூழலில், ‘தலைமைத் தேர்தல் ஆணையரை மட்டும் பொறுப்பாக்கக் கூடாது’ என்று ராஜ்மோகன் சொல்லியிருப்பது பொருத்தமானது அல்ல; அது எதார்த்தத்திற்குப் புறம்பானது” என்றார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் காப்பாற்றப்பட வேண்டும். கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடூரச் சம்பவங்கள் நடைபெறாத மாநிலமாகத் தமிழகம் மாற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால், அதற்கு மாறாக இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற கொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும்போது, உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
