இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ( எண் 93) அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்” என்று எச்சரித்திருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி, ”கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டதைக் கண்டித்து பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்க முடியாது. இதன் பின்னணி என்ன? யார் காரணம்? என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டி பலகைகளில் இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்தநிலையில் இந்தி எழுத்துகள் நீக்கப்பட்டு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
”தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தமிழக அரசு கூறியுள்ளது.
