மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்ததாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழ் வணக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்னறர்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பிரதமரைத் தொடர்ந்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, டெல்லி ஆளுநர் தரன்ஜித் சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பிரார்த்தனை, பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அகிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் ஒளி விளக்காகத் திகழ்கிறது. இது ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து விளங்கும். ‘எல்லா உயிர்களிடத்தும் பகையற்றவராகவும், நட்புணர்வும் கருணையும் கொண்டவராகவும் இருப்பவர்; எனது என்ற பற்றும் அகந்தையும் இல்லாதவர்; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவர்; பொறுமை கொண்டவர்” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று தனது எக்ஸ் பதிவில், “அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.

எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.

ADVERTISEMENT

மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “My life is my message: சத்தியத்தின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாத மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்.

இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அவர் வாழ்க்கையில் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தையும் கொண்டு தொடர்ந்து தன்னைச் செதுக்கிக் கொண்டவர் காந்தியடிகள்.

தொடர்ந்து சமூகத்தோடு உரையாடினார். தொடர்ந்து தன்னையும் தன் கருத்துகளையும் மாறுபாட்டுக்கு உட்படுத்திக் கொண்டே வந்தார். ஆனால், உண்மையாக இருந்தார்.

அதனால்தான், ‘என் வாழ்க்கையே நான் விட்டுச் செல்லும் செய்தி’ என அவரால் கூற முடிந்தது.

அவரது பெருமையைப் போற்றும் வகையில், நமது #DravidianModel ஆட்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்தோம், உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகளை மீண்டும் வழங்கத் தொடங்கினோம்.

காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! அவரிடம் இருந்து கற்போம்! மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்!” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share