விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தபோது திமுக கூட்டணியை உடைத்து புதிய அணியை உருவாக்க ஆதவ் அர்ஜுனா மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், 2009-ல் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் சூழல் உருவாகியும் அது தடுக்கப்பட்டதாக இதுவரை வெளியிடாத தகவலையும் திருமாவளவன் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற பிரசார கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் அவர்கள் வெற்றி பெற வேண்டும். அவருக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் இந்த வெற்றிக் கூட்டணி வெற்றி பெற்றது என்கிற வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. தமிழக அரசியல் களத்தின் திசைவழிப் போக்கை, எதிர்கால அரசியலின் திசைவழிப் போக்கைத் தீர்மானிக்கிற ஒரு புதிய கூட்டணி உருவாகியிருக்கிறது. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி. மதச்சார்பின்மை, சமூகநீதி என்கிற மகத்தான கோட்பாடுகளை முன்னிறுத்தி இந்தக் கூட்டணி உருவாகியிருக்கிறது.
அன்று திமுக கூட்டணியில் விசிக..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மதச்சார்பின்மையிலும் சமூகநீதியிலும் எவ்வளவு உறுதிப்பாட்டோடு களமாடியிருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதன் அடிப்படையில்தான் கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து நெடுங்காலம் பயணித்திருக்கிறோம். எத்தனையோ அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அணி சிதறிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு காய்களை நகர்த்தியிருக்கிறோம்.
ஏற்கனவே பலமுறை நான் இதைப் பேசியிருக்கிறேன் என்றாலும் கூட, அதை மீண்டும் நினைவூட்ட வேண்டிய மிக முக்கியத்துவம் வாய்ந்த களம் இந்தக் களம். என்னை உயிராய் நேசிக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான் மீண்டும் நினைவூட்ட வேண்டியது என்னுடைய பொறுப்பு.
தவெகவுடன் கூட்டணி
தவெகவோடு இன்றைக்கு கைகோர்த்திருக்கிறோம்; இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்றால், அதற்கான நியாயமான காரணங்களை, வரலாற்று நியாயங்களை மறுபடியும் மறுபடியும் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு, நினைவூட்ட வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
எந்தச் சூழலிலும் தனிநபரை முன்னிறுத்தி முடிவெடுத்ததில்லை. பதவி, அதிகாரம் என்பதை முன்னிறுத்தி முடிவெடுக்கவில்லை. நாம் உள்வாங்கிக்கொண்ட அரசியலை முன்னிறுத்தித்தான் முடிவெடுத்திருக்கிறோம்.

விசிகவின் அரசியலும் தவெகவும்
நாம் பேசும் அரசியல், அரசியல் கொள்கைகளுக்கான ஆசான்கள் அவற்றை இன்றைக்கு தவெக முன்னிறுத்துகிறது. அதனால்தான் இந்தக் கூட்டணிக்கு தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப் விஜய் அவர்கள் ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். அதிலே அவர்களுக்கு உடன்பாடு இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கை ஆசான்களில் ஒருவரான பெரியார், தவெகவின் கொள்கை ஆசான்.
விடுதலைச் சிறுத்தைகள் உள்வாங்கிக்கொண்ட கொள்கை ஆசான்களில் ஒருவரான புரட்சியாளர் அம்பேத்கர், தவெகவின் கொள்கை ஆசான்களில் ஒருவர்.
விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்ட கொள்கை ஆசான்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர், தவெகவின் கொள்கை ஆசான்களில் ஒருவர்.
எந்த அரசியல் கட்சியிலும் பெண்மணிகளை கொள்கை ஆசான்களாக முன்னிறுத்தாதபோது, தவெக 5 பேரில் 2 பேரை தமது கொள்கை ஆசான்களாக முதல் முறையாக உயர்த்திப் பிடித்திருக்கிறது.. வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள்.
இதில் நமக்கு என்ன முரண்பாடு இருக்கிறது? நம்முடைய கொள்கை ஆசான்கள் 3 பேர் தவெகவின் கொள்கை ஆசான்களாக இருக்கிறார்கள். நாம் உள்வாங்கியிருக்கிற பெண்ணியம் என்கிற கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் பெண்மணிகளைக் கொள்கை ஆசான்களாக முன்னிறுத்துகிறது. ஆகவே, தவெகவோடு கைகோர்ப்பதில் நமக்கு எந்தக் கொள்கை முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை.
தவெகவோடு நான் இணைந்ததற்குக் காரணம் பதவி ஆசையோ, அதிகார வேட்கையோ இல்லை. அப்படி இருந்திருந்தால், அதுதான் முதன்மையானது என்று நான் கருதியிருந்தால்… பின்னோக்கிப் பார்க்கிறேன். 2009-ல் இருந்து சொல்ல விரும்புகிறேன்; 2001 கூட வேண்டாம்.
2009-ல் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சூழலில் ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் எதிராக அணிசேர்க்கை செய்தபோது, அவர்களில் ஒருவராக இருந்த அண்ணன் வைகோ அவர்கள் இந்த மேடையிலே இருக்கிறார். மருத்துவர் ராமதாஸ் அவர்கள், மறைந்த தலைவர் தா. பாண்டியன் அவர்கள், இன்னும் நம்மோடு இருக்கிற ஐயா பழ. நெடுமாறன் அவர்கள், அண்ணன் எம். நடராஜன் அவர்கள்- சசிகலா அம்மையாருடைய துணைவர்- இவர்கள் எல்லோரும் சேர்ந்து, அன்றைக்கு திமுக கூட்டணியிலே இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகளை,
“இந்த அணிக்கு வாருங்கள். நாம் ஒன்று சேர்ந்து ஈழத் தமிழர்களின் நலன்களைக் காப்பதற்காக, திமுக – காங்கிரஸ் ஒத்துழைப்போடு நடைபெற்றுக்கொண்டிருக்கிற இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முயற்சிப்போம்” என்று சொன்னார்கள்.
அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும், அப்போது எனக்கு இருந்த நெருடல் என்னவென்றால், பிரபாகரனையே கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களாயிற்றே. 1991-ல் இருந்து 2009 வரையில் அதிமுக ஈழத் தமிழர் பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படாமல் ஒதுங்கியிருந்த கட்சியாயிற்றே. எப்படி திடீரென்று நாம் ‘இதுதான் சரி’ என்ற முடிவை எடுக்க முடியும்?

இது திமுக, அதிமுக மட்டுமே தொடர்புடைய பிரச்சினையா? இது ஒரு சர்வதேச சிக்கல். இதற்கு எப்படி திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ பொறுப்பேற்க முடியும் என்ற விளக்கத்தைச் சொல்லிவிட்டு, அன்றைக்கு நான் திமுக தலைமையிலான அணியிலேயே தொடர்ந்தேன். திமுக அணியை விட்டு நான் வெளியேறவில்லை.
இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார் ராமதாஸ் அவர்கள். அவர் சொன்னார், “தம்பி, நீங்கள் 2 இடங்களில் போட்டியிட நான் ஏற்பாடு செய்கிறேன். நீ நாமினேஷன் ஃபைல் பண்ணிவிட்டு வீட்டுக்குப் போய் படுத்துவிடு. 4 லட்சம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் உன்னை வெற்றி பெறச் செய்கிறேன்” என்றெல்லாம் சொன்னார். நான் அப்போதும் அதற்கு உடன்படவில்லை.
“நாங்கள் ஒரு அணியில் தொடர்கிறோம். அந்த அணிக்கு நான் துரோகம் இழைத்துவிட்டு வர விரும்பவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் இந்தத் தமிழ்நாட்டு தேர்தலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம். ஈழத் தமிழர் சிக்கல் ஒரு சர்வதேசச் சிக்கல். இது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுகிற மாற்றத்தால் தீர்வு கண்டுவிட முடியாது” என்று சொல்லி, நான் அன்றைக்கு திமுகவை விட்டு வெளியேறவில்லை.
அதனால் ஈழத் தமிழர்களின் நம்பிக்கையை இழந்தேன். ஈழத் தமிழர்களின் அன்பை இழந்தேன். ஈழத் தமிழர்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானேன். “காங்கிரஸோடும் திமுகவோடும் கூட்டுச் சேர்ந்து இனத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டேன்” என்ற விமர்சனத்திற்கு ஆளானேன்; ஆனால் அதை பொறுத்துக்கொண்டேன்; சகித்துக்கொண்டேன்.
தமிழ்நாட்டு அரசியலின் சமூக நீதிக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவை 2009-லேயே உறுதியாக எடுத்தேன். ஒருபோதும் நான் ஊசலாட்டத்தில் இல்லை.
2011 தேர்தல், 2014 தேர்தல் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தோடு பயணித்தோம். 2016-ல் நாங்கள் வெளியேறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் காரணம் இல்லை.

2016-ல் கூட்டணியை விட்டு வெளியேற்றிய ஸ்டாலின்..
அப்போது திமுக தரப்பிலிருந்து, ‘நீங்கள் வேறு கூட்டணிக்கோ அல்லது வேறு வழிக்கோ போகலாம். இந்தக் கூட்டணியில் தொடர வேண்டாம். நாங்கள் தனித்து 180, 200 இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்’ என்று தெரிவித்த பிறகுதான் நாங்கள் வெளியேற நேர்ந்தது.
அப்போது திமுகவை விட்டு நாங்களாக வெளியேறவில்லை. 2016-ல் வெளியேறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் காரணம் இல்லை.
ரவிக்குமார் அவர்களை அழைத்து, அன்றைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவராக இருந்த அண்ணன் ஸ்டாலின் அவர்கள்,
“நீங்கள் வேறு கூட்டணிக்கோ அல்லது வேறு வழிக்கோ போகலாம். இந்தக் கூட்டணியில் தொடர வேண்டாம். நாங்கள் தனித்து 180, 200 இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்” என்று அவரே அழைத்துச் சொன்ன பிறகுதான் நாங்கள் வெளியேற நேர்ந்தது. அப்போது திமுகவை விட்டு நாங்கள், நாங்களாக வெளியேறவில்லை. பயணித்தோம்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார், அண்ணா போன்றோர் மீது கொண்டிருந்த பற்றுதல், அந்த இயக்கம் முன்வைத்த அரசியல், சமூகநீதி அரசியல் ஆகியவற்றின் மீது இருந்த உடன்பாடு, புரிதல், நம்பிக்கை தொடர்ந்து பயணித்தோம்.
ஆனால், “திமுக கூட்டணியில் நீங்கள் தொடர வேண்டாம். நட்பு உறவின் அடிப்படையில் நாங்களே உங்களுக்கு முன்கூட்டி அறிவிக்கிறோம்” என்று சொன்னதன் அடிப்படையில்தான் வெளியே வந்தோம். வெளியே வந்ததும் நான் எழுப்பிய முதல் முழக்கம், “ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு”… தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற ஒரு கருத்தரங்கத்தையே நடத்தினோம்.
பதவி ஆசைக்காக நாங்கள் அணிமாறவில்லை. காவிரி நீர் பிரச்சினையையொட்டி அண்ணன் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்த யாத்திரையில் நாங்கள் பங்கேற்றோம்.
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், வைகோ, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் என 4 பேரும் அன்றைக்கு கைகோர்த்தோம்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் வெற்றி, 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வெற்றி. 2026-ல் அந்த வெற்றி கிடைக்கவில்லை.

விஜய் வெற்றி பெற்றது பிடிக்கவில்லைதான்..
விஜய் வெற்றி பெற்றது நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். தவெக ஆட்சியைப் பிடித்தது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் மக்கள் தேர்வு செய்துவிட்டார்கள். 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு புறம்; தவெக இன்னொரு புறம்.
20-க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்து 116 இடங்கள். ஒரே ஒரு கட்சி… கூட்டணி இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல் ஓட்டுக்கு 108 இடங்களைப் பெற்றிருக்கிறது. ஒரே ஒரு கட்சி, கூட்டணி இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல், ஓட்டுக்கு காசு தராமல், சாதி வரம்புகளைக் கடந்து, மத வரம்புகளைக் கடந்து, எல்லா அரசியலையும் கடந்து, ஒரு கட்சிக்கு 108 இடங்களை தமிழ்நாட்டு மக்கள் தந்திருக்கிறார்கள் என்கிறபோது, அது நமக்கு கசப்பாக இருக்கலாம். ஆனால் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இது மக்கள் இட்ட கட்டளை. இது மக்கள் இட்ட கட்டளை. திமுக தலைமையிலான கூட்டணி 70-க்கும் மேற்பட்ட இடங்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி 50-க்கும் மேற்பட்ட இடங்கள். ஒட்டுமொத்தமாக திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள்.
பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இன்னும் இன்னும் பல கட்சிகள்.. இத்தனை கட்சிகளும் சேர்ந்து 126 இடங்களில்தான் வெற்றி
அவர்கள் அரசியலுக்குப் புதிதாக இருக்கலாம். வயதில் இளமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை என்ன செய்ய முடியும்? மக்கள் இட்ட கட்டளை.
இந்தச் சூழலில் மிகக் கவனமாக நாம் கவனிக்க வேண்டிய இடம்.. திருமாவளவன் அல்லது காங்கிரஸ் கட்சி அல்லது இடதுசாரிகள் அல்லது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிவை தவெக தலைவர் ஜோசப் விஜய் எடுக்கிறார்.
ஆதவ் அர்ஜுனா அவர்கள் சொன்னதைப் போல, பாரதிய ஜனதா கட்சிக்கு எரிச்சலை ஊட்டக்கூடிய ஒரு நிலைப்பாட்டை தன்னுடைய பெயரை அறிவிப்பதில் இருந்தே அவர் எடுக்கிறார்.
பாஜகவுக்கு எதிராக துணிச்சலாக முடிவெடுத்த விஜய்
பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு கிறிஸ்தவம் பிடிக்காது; இஸ்லாம் பிடிக்காது. இந்தியா முழுவதும் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை கொட்டி இறைத்திருக்கிறார்கள்; விதைத்திருக்கிறார்கள்.
வெறுப்பு அரசியலில்தான் அவர்கள் பாபர் மசூதியை இடித்தார்கள்; செங்கோட்டையையும் கைப்பற்றினார்கள். அந்த வெறுப்பு அரசியலில்தான் பைபிளை கொளுத்துகிறார்கள்; குர்ஆனை கொளுத்துகிறார்கள்; தேவாலயங்களை இடிக்கிறார்கள்; மசூதிகளை இடிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், “திரைப்படத்தில் என் பெயர் விஜய்; அரசியலில் என் பெயர் ஜோசப் விஜய். உன்னால் என்ன செய்ய முடியும்? நீ வெறுப்பு அரசியலை விதைத்தாலும் கூட, ஜோசப் விஜய் என்கிற பெயரிலே நான் தேர்தல் களம் காண்பேன்” என்ற ஒரு முடிவை துணிச்சலாக விஜய் அவர்களால் எடுக்க முடிந்தது என்பதைத் தாண்டி, இதுதான் மிக முக்கியமான புள்ளி.
“காங்கிரஸ் இல்லாத பாரதம்; கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதம்; கழகங்கள் இல்லாத தமிழகம்”.. இதுதான் பாஜகவினரின் முழக்கம்.
“ஒரே தேசம்; ஒரே கட்சி; ஒரே ஆட்சி”..இதுதான் ஆர்எஸ்எஸின் கனவு. “ஒரே தேசம்; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம்” .. இதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் கனவு.
காங்கிரஸ் கட்சியை முற்றாக அழித்தொழித்துவிட வேண்டும். இந்தியாவில் ஒரே கட்சிதான் இருக்க வேண்டும்.. அது பாஜக. கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் அழித்தொழிக்க வேண்டும். இந்தியாவில் ஒரே மதம்தான் இருக்க வேண்டும் – அது இந்து மதம். இதுதானே பாஜக, ஆர்எஸ்எஸுடைய கனவுத் திட்டங்கள்?
அப்படிப்பட்ட செயல்திட்டங்களை வைத்திருக்கிற பாஜகவை சீண்டுகிற வகையில், ஆத்திரமூட்டக்கூடிய வகையில், எரிச்சலூட்டும் வகையில், “என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்று சவால் விடுகிற வகையில் ஜோசப் விஜய் அவர்கள் எடுத்த முடிவு- ராகுல் காந்தியை தொடர்புகொண்டது; காங்கிரஸ் ஆதரவை தேடியது; காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைக்க எடுத்த முயற்சி.. எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் உள்ளபடியே ஆடிப்போனேன். “காங்கிரஸை எடுக்கிறார்களே… என்ன இவர்கள்? யார் இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார்கள்? காங்கிரஸை எடுத்தால் பாஜக இவர்களை சும்மா விடுமா? ஆட்சியை 3 மாதம்கூட வைத்திருக்க மாட்டார்களே. காங்கிரஸோடு உறவாடக்கூடிய அளவுக்கு இவர்கள் முடிவெடுக்கிறார்கள் என்றால், இவர்கள் தவறு செய்கிறார்களோ?” என்று நான் எண்ணினேன். பக்கத்தில் இருந்தவர்களோடு உரையாடினேன்.
ஆனால் தவெகவின் கொள்கை வகுப்பாளர்கள், கோட்பாட்டு வரையறுப்பாளர்கள் துணிச்சலாக இந்த முடிவை எடுத்தார்கள்.
‘காங்கிரஸோடுதான் நாங்கள் உறவாடப் போகிறோம். ஆட்சி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் காங்கிரஸ் எங்களுக்குத் தேவை’ என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ்- தவெக தொடர்பு என பேசினேன்..
தேர்தலுக்கு முன்பு நான் தவெகவை ஆர்எஸ்எஸோடு தொடர்புபடுத்திப் பேசினேன்; விமர்சனம் செய்தேன். “திமுகவை மட்டுமே குறிவைத்து விஜய் பேசுகிறார். ஒரு இடத்தில்கூட வேறு கட்சிகளைப் பேசவில்லை. அது ஒரு ஸ்ட்ரேட்டஜி. இரண்டு பேர்தான்; வேறு யாரும் வேண்டாம். நீயா, நானா என்ற நிலைப்பாடு. ஆனாலும் ஏன் பாஜகவை விமர்சிக்கவில்லை?” என்ற நிலையிலிருந்து நான் அந்த விமர்சனத்தைச் சொன்னேன்.
ஆனால் அந்த விமர்சனம் தவறு என்பதை உணர்த்தக்கூடிய வகையில் காங்கிரஸோடு ஏற்படுத்திக்கொண்ட உறவு. “நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்; நாங்கள் ஆட்சி அமைக்கிறோம்.”
காங்கிரஸிடம் இருந்தது வெறும் 5 உறுப்பினர்கள்தான். அந்த 5 உறுப்பினர்களை வைத்து ஆட்சி அமைக்க முடியாது. அவர்களுக்கு 108 இடங்கள். அதில் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டால் 107. அவர்களுக்கு 118-க்கு இன்னும் 11 இடங்கள் தேவை.
காலம் எப்படி கணக்குப் போடுகிறது பாருங்கள். காங்கிரஸ் 5; கம்யூனிஸ்ட்கள் 4; விடுதலைச் சிறுத்தைகள் 2.. மொத்தம் 11. சரியாக இந்த அணியிலே 11 இடங்கள் இருக்கின்றன. ஐயூஎம்எல் வந்தால் கூடுதல்; மதிமுக வந்தால் கூடுதல்.
ஆனால் 11 இடங்கள் இருந்தால் போதும். காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4; விடுதலைச் சிறுத்தைகள் 2; அவர்களுக்குத் தேவையான பற்றாக்குறை 11.
இந்த 11 இடங்களை மூன்று, நான்கு கட்சிகளிடமிருந்து கேட்டுப் பெறுவதைவிட அதிமுகவோடு கைகோர்த்தால் ஆட்சி அமைப்பது எளிது. ஆனால் அதிமுகவோடு கைகோர்த்தால் அது தேசிய ஜனநாயகக் கூட்டணி; அது பாஜகவோடு அமைந்த கூட்டணி. அப்படிப்பட்ட கூட்டணியின் ஆதரவு, அதிமுக தனித்து வந்தாலும் தேவையில்லை என்ற முடிவை எடுத்துவிட்டு, ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், கம்யூனிஸ்ட்கள் போனாலும், சிறுத்தைகள் வராமல் போனாலும், காங்கிரஸை நாடியது தவெக.
இதை யாரும் மறுக்க முடியுமா? இது சாதாரணமான முடிவா? இது ஒரு துணிச்சல் மிகுந்த முடிவு இல்லையா? மதச்சார்பின்மையில் இவர்களுக்கு இருக்கிற உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறதா, இல்லையா?
தன் பெயரை ‘ஜோசப் விஜய்’ என்று அறிவித்ததும், “காங்கிரஸோடு நாங்கள் உறவாட விரும்புகிறோம்” என்று அழைப்பு விடுத்ததும், மதச்சார்பின்மையில் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு உறுதிப்பாடு இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தியது. இந்தச் சூழலில்தான் நான் சொன்னேன்: “நிதானமாக முடிவெடுக்கக்கூடிய கம்யூனிஸ்ட்களோடு இணைந்து நாங்கள் முடிவெடுப்போம்.”
அமைச்சரவையில் சேர சொன்ன விஜய்
அப்படிச் சொன்னதற்கு காரணம், அவர்களோடு நாங்கள் பல கட்டங்களில், பல களங்களில் கைகோர்த்து களமாடியிருக்கிறோம். ஆகவே அவர்கள் எடுக்கிற முடிவோடு இணைந்து முடிவெடுப்போம் என்று சொன்னோம். ஆனால் அரசியல் நெருக்கடியின் காரணமாக கம்யூனிஸ்ட்கள் விரைந்து முடிவெடுத்தார்கள். காங்கிரஸ் 6-ஆம் தேதி எடுத்தது; கம்யூனிஸ்ட்கள் 7-ஆம் தேதி எடுத்தார்கள்; விடுதலைச் சிறுத்தைகள் 8-ஆம் தேதி எடுத்தோம்.
கம்யூனிஸ்டுகளைப் போல நாங்களும் வெளியிலிருந்து ஆதரவு வழங்குவது என்ற முடிவைத்தான் எடுத்தோம். ஆனால் தவெக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 10-ஆம் தேதி வேளச்சேரிக்கு நேரில் வந்து நன்றி சொன்ன மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள், ‘உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஆனாலும் நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்’ என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். நான் மறுத்தேன். ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார்கள். எதையும் நாம் இட்டுக்கட்டிப் பேசுபவர்கள் அல்ல. அவர் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார்.
ஆனாலும் 10 நாள் கழித்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் முடிவெடுத்தோம். 10-ஆம் தேதி தவெக அமைச்சரவை அமைந்தது. 21-ஆம் தேதிதான் விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம்பெற்றோம். பதவிதான் முக்கியம் என்று எண்ணியிருந்தால், அழைப்பதற்கு முன்பே ‘நாங்கள் வருகிறோம்; எங்களுக்கு அமைச்சரவை இடம் தாருங்கள்’ என்று கேட்டிருப்போம்.
தம்பி ஆதவ் அர்ஜூனா ஒரு செய்தியை சொன்னார்.. எண்ணி பார்க்கிறேன்.. 2009-லேயே அவ்வளவு பெரிய நெருக்கடியான சூழலிலும்கூட திமுகவை விட்டு வெளியேற நான் விரும்பவில்லை. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் வரட்டும் என்று நான் கூடவே பயணித்தேன்.
அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா வந்து சேர்ந்த பிறகு, “அண்ணா, நான் எந்தக் கட்சியிலும் சேர முடியும். திமுகவிலேயே இருக்க முடியும். ஆனாலும் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்காகப் போராடுகிற உங்கள் உழைப்பை நான் நேரிலே பார்க்கிறவன். உங்களோடு பயணிக்க விரும்புகிறேன்” என்று இந்த இயக்கத்திலே தன்னை இணைத்துக்கொண்டவர்.
திமுகவுக்கு எதிரான அணியை உருவாக்க ஆதவ் அர்ஜூனா முயற்சி
என்னோடு அவர் போட்ட சண்டை என்னவென்றால், “கொள்கையை நீங்கள் பேசுங்கள். ஆனால் அதிகாரத்திற்கு வருவதற்காகவும் சிந்தியுங்கள். எனவே மாற்றி சிந்திப்போம். புதிய அணியை உருவாக்குவோம். பாஜக இல்லாத ஒரு அணியை என்னால் உருவாக்க முடியும். நீங்கள் தலையை அசைத்தால் போதும்” என்று என்னை எவ்வளவோ அசைத்துப் பார்த்தார்.
அவர் அசைத்துப் பார்த்தும் என் தலை அசையவில்லை. அப்போதும் நான் திமுகவிலேயே தொடர்ந்தேன். “வேண்டாம் அர்ஜுன். நான் இடம்பெற்றிருக்கிற இந்த அணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. அண்டர்லைன்.. மதச்சார்பற்ற.. இந்த அணியில் காங்கிரஸ் இருக்கிறது. இந்த அணியில் இடதுசாரிகள் இருக்கிறார்கள். அந்த அணியில்தான் நான் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். அதிகாரம் வரும், போகும் அல்லது இல்லாமல்கூட போகட்டும்; பிரச்சினை இல்லை. ஆனால் பதவிக்காக ஒரு அணியை உடைத்தான் திருமாவளவன் என்ற களங்கம் என் வாழ்க்கையில் வரக்கூடாது” என்று சொன்னேன்.
மூளை சலவை செய்த ஆதவ் அர்ஜூனா
டெல்லிக்கே வந்து 2 மணி நேரம் என் மூளையை கழற்றி தனியே சலவை செய்து பார்த்தார் ஆதவ் அர்ஜுனா. பிரெயின் வாஷ்.. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். அதிகார ஆசையை ஊட்டிப் பார்த்தார். “துணை முதலமைச்சராக முடியும்” என்று சொன்னார். முக்கியமான தலைவர்களோடு தொலைபேசியிலே இணைப்பு தந்து பேச வைத்தார்.
“நீ என்ன முயற்சி செய்தாலும் நான் அதற்கு உடன்பட மாட்டேன் அர்ஜுன். சாரி” என்று சொல்லிவிட்டேன். சாரி என்று சொல்லிவிட்டேன்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவும் விஜய்யும்
அதன் பிறகு அவர் எடுத்த முயற்சி.. ஜான் ஆரோக்கியசாமி அவர்களும் அப்போது அந்த இடத்திலே இருந்தார். ஆதவ் அர்ஜுனா அவர்களின் இல்லத்திலே சந்தித்தோம். ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற புத்தகத் தொகுப்பு வெளியீட்டு விழா. நேர்மையாக நான் சொல்ல விரும்புகிறேன். அந்தப் புத்தகத்தை முதலில் வெளியிட வேண்டும் என்று அவர் விரும்பியது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாட்டு முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்களைத்தான். அதுதான் அர்ஜுன் அவருடைய எண்ணம். “லீடர்தான் வெளியிட வேண்டும். நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்”.. இதுதான் முதலில் அவருடைய பிளான்.
ஆனால் முதலமைச்சரிடமிருந்து எந்த இசைவும் வரவில்லை. அதன் பிறகு அவர் எடுத்த முயற்சி, ராகுல் காந்தி அவர்கள் வெளியிட வேண்டும்; திருமாவளவன் பெற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு எழுத நேரமில்லை. ஆனாலும் அவர் பிடிவாதம் பண்ணி 25 கேள்விகளைத் தயார் செய்து, அந்த கேள்விகளுக்கெல்லாம் என்னைப் பதில் சொல்ல வைத்து, அந்தப் பதிலைத் தொகுத்து, அந்தப் புத்தகத்தின் முகப்பிலேயே.. புத்தகத்தைத் திறந்த உடனேயே.. திருமாவளவன் பேட்டி. அவ்வளவு பெரிய புத்தகத்தில் ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தொகுப்பு. அதுவும் விகடன் வெளியீடு. விகடன் வெளியீடு என்றால் அதற்குப் பொதுநீரோட்டத்திலே ஒரு மதிப்பு உண்டு.
அம்பேத்கர் புத்தகம் வெளியிட வேண்டும் என்று சிந்திக்காதவர்கள் மத்தியிலே போய் அந்தச் சிந்தனையை விதைத்து, “நான் அனைத்துப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அம்பேத்கருக்கு அப்படி ஒரு புத்தகத்தைக் கொண்டுவர வேண்டும்” என்ற முயற்சியை எடுத்தவர் தம்பி ஆதவ் அர்ஜுனா அவர்கள்.
அப்போது கடைசியாக ராகுல் காந்தியைச் சந்திக்க முடியவில்லை. அவருடைய இசைவைப் பெற முடியவில்லை. கடைசியாக அவர் சொன்ன வார்த்தை, “அண்ணா, வேறொரு முயற்சியை நான் மேற்கொள்கிறேன். அது நிறைவேறினால் உங்கள் இசைவு தேவை” என்று சொன்னார்.
“என்ன?” என்று கேட்டேன். சொல்லவில்லை.
திடீரென ஒரு நாள் இல்லத்திலே சந்தித்தபோது ஜான் ஆரோக்கியசாமியை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் இருவரும் சேர்ந்து அப்போதுதான் சொன்னார்கள், “ஜோசப் விஜய் அவர்கள் இந்தப் புத்தகத்தை வெளியிட இசைவு தந்திருக்கிறார். நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.” “நீங்கள் கூட்டணிக்காக வாருங்கள்” என்று சொல்லவில்லை. ஏனென்றால் அப்போது நம்முடைய கட்சியில்தான் இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர். கூட்டணிக்கான முயற்சி எடுக்கவில்லை.
வெறும் புத்தக வெளியீடுதான். வெறும் புக் ரிலீஸ்; அவ்வளவுதான். அவர் அதை வெளியிடக்கூடிய ஒரு ஆளுமையாக வருகிறார். நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். இரண்டு பேரும் அம்பேத்கரைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றெல்லாம் சொன்னார்.
ஜான் ஆரோக்கியசாமி அவர்களும் அதைத்தான் சொன்னார். “சார், நீங்கள் திமுக கூட்டணியில் கண்டினியூ பண்ணுங்க சார். இது எலக்சனுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. இது அம்பேத்கர். எல்லோருக்குமானவர். அதில் முதல் முறையாக ஜோசப் விஜய் போன்ற ஒரு ஆளுமை, ஒரு பாப்புலர் ஹீரோ, ஒரு புதிய அரசியல் கட்சித் தலைவர் வந்து வெளியிட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் வரவேண்டும்” என்று சொன்னார்.
ஆதவ் அர்ஜுன் அவர்களிடம் நான் சொன்னேன், “வேண்டாம் அர்ஜுன். நான் அப்படிப் போய் அவரோடு நின்றால் இங்கே அணி சேர்க்கை மாறிவிடும். அரசியல் வேறு மாதிரி போய்விடும்.” அப்போதும் நான் சொன்ன வார்த்தை, “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிதறிவிடக்கூடாது.” அதற்கு நான் உடன்படவில்லை.
அரியலூரில் இருந்தேன். 6 மணிக்கு போன் அடித்தார். என் முகநூல் அறிக்கையைப் பார்த்துவிட்டு பதறினார்.
“அண்ணா, என்னண்ணா இப்படி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறீங்க? நான் என்னண்ணா செய்யணும்? போக வேண்டாம்னா நான் போகல. புத்தக வெளியீட்டு விழா நடந்தாலும் நடக்கட்டும்; நடக்கலைனாலும் பரவாயில்லை” என்றார்.
“ஐயையோ, தப்பு. நீங்கள் பெரும் முயற்சி எடுத்து தொகுத்த புத்தகம் அது. நீங்கள் கட்டாயம் போக வேண்டும். செல்லுங்கள். ஆனால் அரசியல் பேச வேண்டாம். திமுகவைப் பற்றி பேச வேண்டாம். கூட்டணியைப் பற்றி பேச வேண்டாம். அம்பேத்கரைப் பற்றி மட்டும் பேசுங்கள்” என்று சொன்னேன்.
அவர் போனார். இங்கு நெருப்பாய் கொதித்ததுபோல், அங்கேயும் அவர் எரிமலையாய் குமுறினார். அந்த இடத்தில்கூட அவருக்கு எந்தக் கெட்ட எண்ணமும், இந்த இயக்கத்திற்கு எதிரான கெட்ட எண்ணமும் இல்லை. நல்லெண்ணம்தான்.
“விடுதலைச் சிறுத்தைகள் அதிகாரத்திற்கு வரணும். திருமாவளவன் வரத்தான் போறான். எனக்கு ஆசை இல்லைங்கிறதுக்காக மற்றவர்களை எல்லாம் நீ பட்டினி கிடன்னு சொல்ல முடியாது. எனக்குப் பசி இல்லைங்கிறதுக்காக மற்றவர்களை பட்டினி கிடன்னு சொல்ல முடியாது. மற்றவர்கள் அதிகாரத்திற்கு வரட்டும். எத்தனை நாளைக்கு 2, 3 சீட்டில் இருப்பீங்க? அதனால் நீங்கள் மாற்றி சிந்திக்க வேண்டும்; உத்தியை மாற்ற வேண்டும்” என்றுதான் என்னைக் கட்டாயப்படுத்தினார்.
ஆதவ் அர்ஜூனா நீக்கமும் தவெகவில் சேர்ந்ததும்
அப்போதுகூட ஒரு இடத்தில்கூட திமுகவைப் பற்றியோ, திமுக தலைமையைப் பற்றியோ என்னிடத்தில் அவர் குறைவாகப் பேசவில்லை; குறைத்துப் பேசவில்லை. “லீடர் என்றுதான் தான்” சொன்னார். ஆனால் அந்தக் கூட்டத்தில் போய் அவர் கடுமையாகப் பேசினார். வேறு வழியில்லாமல் 6 மாதம் நான் அவரை இடைநீக்கம் செய்தேன். 6 மாத காலம்.
அதன் பிறகு அவர் நேரிலே வந்தார். “அண்ணா, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்கள்… எனவே நான் வேறொரு முடிவெடுக்கிறேன். என்னை நீங்கள் வாழ்த்த வேண்டும்” என்று சொன்னார்.
“என்ன?” என்று கேட்டேன்.
“நான் ஜோசப் விஜய் அவர்களோடு, தவெகவில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று சொன்னார். நான் வாழ்த்தி அனுப்பினேன்.
இன்றைக்கு பலர், ‘நீங்கள் அப்போதே ஆதவ் அர்ஜூனாவை பிடித்து உங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கக் கூடாதா? அவரை ஏன் வெளியே விட்டீர்கள்?’ என்று கேட்கிறார்கள்.
அவர் தனிப்பட்ட முறையில் யாரையும் கொச்சையாக விமர்சித்ததில்லை. கேரக்டர் அசாசினேஷன் செய்ததில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளிம்புநிலை மக்களுக்கான கட்சி. அதிகாரத்திற்கு வர வேண்டும். அதனால் கூட்டணி நிலைப்பாடுகளில் மாற்றம் வேண்டும்; உத்தியை மாற்ற வேண்டும் என்று விரும்பியது உண்மை. ஆனாலும் அந்தச் சூழலிலும் நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்னால் கலைந்தது என்ற ஒரு அவப்பெயர் வாழ்நாளில் எனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. இதில்தான் ‘Political Ethics’ என்ற அந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருந்தேன்.
8-ஆம் தேதி தவெகவோடு சேரப் போகிறேன் என்று சொல்லுகிற வரையில் திமுகவின் முன்னணித் தலைவர்களோடு நான் தொடர்பில் இருந்தேன். சொல்லிவிட்டுத்தான், ஆதரவு தருகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் ஆதவ் அர்ஜுனாவை வரச் சொன்னேன்.
உடனே, “டிலே பண்றார்; பேரம் பேசுகிறார்” என்று எனக்கு எதிரான விமர்சனங்கள். அதற்குள்ளே நான் மீண்டும் நுழைய விரும்பவில்லை.
தோழர்களே, தவெகவோடு நான் இணைந்து இந்தக் கூட்டணியில் இன்றைக்கு பயணிக்கக்கூடிய ஒரு சூழல் உருவானதற்குக் காலம் இட்ட கட்டளைதான் காரணம். காலம் இட்ட கட்டளைதான்; வரலாறு இட்ட கட்டளைதான்.
தமிழ்நாட்டு அரசியல் இருமுனை, இருதுருவ அரசியலாக இருந்த நிலை மாறி மும்முனை அரசியலாக மாறியிருக்கிறது. ஒரு ஆண்ட கட்சி அதிமுக; இன்னொரு ஆளும் கட்சி திமுக. இந்த இரண்டு கட்சிகளையும் சவால்விட்டு களம் காணுகிற புதிய கட்சி தவெக.
தவெகவுக்கு எதிராக.. என் ஒப்புதல் வாக்குமூலம்
தவெகவை நாம் குறைத்து மதிப்பிட்டோம் என்பதைவிட, தவெகவை நாம் குறுகிய புத்தியோடு அணுகினோம் என்பதுதான் உண்மை.
என்ன குறுகிய புத்தி என்றால், அவர்கள் வெற்றி பெற்றுவிடக்கூடாது; ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. ஒப்புக்கொள்கிறேன். ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன்.
ஏனென்றால், நாங்கள் இடம்பெறுகிற அணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் இருக்கிற அணி ஆட்சிக்கு வர வேண்டும். அவர்கள் ஆட்சியை, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை என்றாலும்கூட, சாதிய, மதவாத சக்திகள் தலைதூக்காமல் இந்தக் கூட்டணி வலுவோடு இருக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
தனிப்பட்ட முறையில் தவெக மீது நமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் வரலாறு நமக்குப் பாடம் கற்பிக்கிறது. உங்களை எல்லாம் தாண்டி மக்கள் வேறு கணக்குப் போடுகிறார்கள். காலம் இன்னொரு கணக்கைப் போடுகிறது. என்ன செய்ய முடியும் என்ற கசப்பான உண்மையை நமக்குப் பாடமாகக் கற்பிக்கிறது.
20-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு 126. ஒரே ஒரு கட்சிக்கு 108 இடங்கள் என்கிறபோது, 50 விழுக்காட்டுக்கு மேல் வெற்றி வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தந்திருக்கிறார்கள்? இதை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்? இதை எப்படிக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியும்?
இது எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; எனக்குக் கசப்பாக இருக்கலாம்; எனக்கு ஒவ்வாமையாக இருக்கலாம்; எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்; எனக்கு எரிச்சலாக இருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். அவன்தான் உண்மையாக ஜனநாயகச் சிந்தனை உள்ளவனாக இருக்க முடியும்.
எனக்குப் பொதுவாழ்க்கையில் 40 வருட அனுபவம் இருக்கலாம். விஜய் அவர்களுக்கு இரண்டே இரண்டு ஆண்டுகள் அரசியல் அனுபவம் இருக்கலாம். ஆனால் மக்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியாக விஜய் அவர்களைத் தேர்வு செய்த பிறகு, அவரோடு இணைந்து பயணிப்பதற்கான ஒரு களமும் கண்ணில் தெரிகிறபோது, மதச்சார்பின்மை, சமூகநீதி என்கிற கருத்தியல் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று உணர்த்தக்கூடிய நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொள்ளுகிறபோது, “அதெல்லாம் உங்களை நம்ப முடியாது; அதெல்லாம் உங்களை ஏற்க முடியாது” என்று நாம் புறந்தள்ள முடியுமா? எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதைவிட முக்கியமாக, 1999 அந்தக் காலகட்டத்தில் மூப்பனார் அவர்களோடு கைகோர்த்தபோது, “ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு; எளிய மக்களுக்கும் அதிகாரம்; கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்” என்று மேடைகளில் முழங்கியவன் திருமாவளவன். தேர்தலுக்கு முன்பே இதை அங்கீகரித்து பிரகடனம் செய்தவர் ஜோசப் விஜய்.
தேர்தலுக்கு முன்பே, கூட்டணி அமைப்பதற்கு முன்பே, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற புத்தகத்தை வெளியிடுகிறபோது, “தொல். திருமாவளவன் அவர்கள் இங்கே இல்லை. ஆனாலும் அவர் மனம் இங்கேதான் இருக்கும்” என்று உரிமையோடு அவர் சொன்னார்.
அப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை நான் ஏற்று, மனம் இறங்கி அவரோடு கைகோர்க்க வேண்டும் என்ற முடிவை நான் எடுக்கவில்லை.
தோழர் ரவிக்குமார் அவர்கள் ஒருமுறை தொலைபேசியிலே தொடர்புகொண்டு, “அண்ணன் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் புதுச்சேரியைச் சார்ந்தவர்தான். உங்கள் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர். உங்களோடு பேச விரும்புகிறார்” என்று தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
அண்ணன் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் என்னோடு பேசியபோது, தேர்தல் நிலைப்பாடுகள் எல்லாம் எடுப்பதற்குப் பல மாதங்களுக்கு, வருடங்களுக்கு முன்பு, விக்கிரவாண்டி மாநாடு நடப்பதற்கு முன்பு, கட்சி இன்னொரு வடிவம் பெறுவதற்கு முன்பு, புஸ்ஸி ஆனந்த் அவர்கள் என்னோடு பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகளை ஒரு நேச சக்தியாகப் பார்க்கிற அந்த அணுகுமுறை இருந்தது. நான் அதன்பிறகு அவரைத் தொடர்புகொள்ளவே இல்லை. அந்த உறவை நான் தேடவில்லை; நாடவில்லை.
தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைப்பதற்கு முன்பு, இன்றைக்கு சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிற அருண்ராஜ் அவர்கள் என்னை ஒருமுறை ஜிஎஸ்டி சாலையிலே நள்ளிரவு ஒன்றரை மணிக்குச் சந்தித்தார்.
அவர் முகத்தைக்கூட என்னால் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு இருட்டான நேரம்.
அப்போது சொன்னார், “ஏன் நீங்கள் மாற்றிச் சிந்திக்கக்கூடாது? எங்கள் தலைவர் உங்களை மிகவும் நேசிக்கிறார்” என்று சொன்னார். அப்போது நான் அதற்கு உடன்படவில்லை. அந்த உறவைத் தேடவில்லை; நாடவில்லை.
ஆதவ் அர்ஜூனாவிடம் கரூர் சம்பவம் பற்றி..
என்னிடம் வாழ்த்துப் பெற்று வெளியேறிய பிறகு ஒருமுறைகூட ஆதவ் அர்ஜுனா என்னோடு தொடர்புகொண்டு பேசவில்லை. இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருக்கிற ஒரு ஆளுமையாகத்தான் தம்பி ஆதவ் அர்ஜுனா அவர்களை நான் பார்க்கிறேன்.
நானே தொடர்புகொண்டு பேசினேன். கரூர் சம்பவத்தின்போது ஆறுதல் சொல்வதற்காகவும், என்ன நடந்தது என்று கேட்பதற்காகவும் ஒரே ஒருமுறை தொலைபேசியில் பேசி, “என்ன நடந்தது அர்ஜுன்? இப்படி நடந்தது ஏன்? நீங்கள் எல்லாம் அங்கே இருந்து இந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே?”
“இல்லைண்ணா, சூழல் சரியில்லை.” “சரி, இது ஒரு விபத்துதான். இதை அரசியல் ஆக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு நான் தொலைபேசியைத் துண்டித்துவிட்டேன்.
தோழர்களே, தவெகவோடு விடுதலைச் சிறுத்தைகள் கொண்டிருக்கிற தேர்தல் பணி.. ஆற்றப்போகிற என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான் சொல்லுகிறேன்:
எஞ்சியிருக்கிற 4 நாட்களில் ஒரு வாக்குகூட சிந்தக்கூடாது; சிதறக்கூடாது.
விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறுகிற அணி வெற்றி பெறும் என்கிற வரலாற்றை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு காலம், ஒரு களம் இது என்பதை நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
காலத்தின் கட்டளை
தவெகவோடு நாம் சேர்ந்திருப்பது, கைகோர்த்திருப்பது, களமாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பது காலம் இட்ட கட்டளை. வேறு வழியில்லை.
வெறும் பதவிக்காக நான் எடுத்த முடிவில்லை. தனிப்பட்ட முறையிலே “என்னை அமைச்சராக்குங்கள்” என்று வன்னி அரசு சொல்லவில்லை. இதைவிட வேறு என்ன வாய்ப்பு விடுதலைச் சிறுத்தைகள் அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கு?
தேர்தலுக்கு முன்பே “ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு” என்று சொன்ன ஒரே தலைவர் தமிழ்நாட்டின் தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்கள்தான்.
தேர்தலுக்கு முன்பே, கூட்டணி நிலைப்பாடு எடுப்பதற்கு முன்பே, “யாரும் வரலாம்; அதிகாரத்தில் பங்குதர நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்கிறபோது, என்னைப் பின்பற்றுகிற தம்பிகள் கேட்க மாட்டார்களா? “ஏன் அண்ணே அதிகாரமே தர முடியாது என்கிற கூட்டணியிலே இருக்கிறீர்கள்? அதிகாரத்தைப் பங்குபோட்டுத் தரத் தயாராக இருக்கிற தவெகவோடு ஏன் கைகோர்க்கத் தயங்குகிறீர்கள்?” என்று கேட்க மாட்டார்களா?
எனக்குப் பதவி வேண்டாம். நான் அமைச்சராக விரும்பவில்லை. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது ஒரு வரலாற்றுத் தீர்ப்பு இல்லையா? வாய்ப்பு இல்லையா?
அப்போது முன்னணித் தலைவர்கள் சொன்னார்கள், “நாங்கள் சோலோ மெஜாரிட்டியில் வந்திருந்தாலும்கூட கூட்டணி அரசுதான் அமைத்திருப்போம்.” இந்த flexibility, ஒரு நெகிழ்வுத்தன்மை, அதிகாரத்தைப் பகிர்ந்துதர வேண்டும் என்கிற அந்தத் தாராள உளவியல்.. இதெல்லாம் எல்லோருக்கும் சாதாரணமாக வந்துவிடாது.
ஏனென்றால் எதை வேண்டுமானாலும், சொத்தைக்கூட பிரித்துக் கொடுப்பான்; அதிகாரத்தை யாரும் பகிர்ந்துதர மாட்டான். அதிகாரத்தைப் பகிர்ந்து தருவது… பெற்ற பிள்ளைக்கே அதிகாரத்தைப் பகிர்ந்துதர மாட்டார்கள். அதனால்தான் அந்தக் காலத்தில் மகன் தந்தையைப் பிடித்துச் சிறையில் வைத்துவிட்டு ஆட்சிக்கு வருவான்.
ஏனென்றால் அப்பன் பிள்ளைக்கு அதிகாரத்தைத் தர மாட்டான். அதிகார போதை உலகத்திலேயே மிக மோசமான போதை. சாராயம் குடித்த போதை கொஞ்ச நேரத்தில் தெளிந்துவிடும்; மாத்திரை போடுகிற போதை கொஞ்ச நேரத்தில் தெளிந்துவிடும். அதிகார போதை என்பது குடும்பத்தில் உள்ளவர்களுக்குக்கூட பகிர்ந்துதர இடம் கொடுக்காது.
அப்படிப்பட்ட ஒரு அதிகாரத்தை முன்கூட்டியே, “நான் பகிர்ந்துதரத் தயாராக இருக்கிறேன்; கூட்டணி அரசுக்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்கிறார்கள்.
1977-க்குப் பிறகு டெல்லியிலே தொடர்ந்து கூட்டணி ஆட்சி முறைதான் நடைமுறையில் இருக்கிறது. தனிப்பெரும்பான்மையோடு பாஜக வெற்றி பெற்றாலும்கூட சின்னச் சின்ன கட்சிகளுக்கெல்லாம் கேபினட் மந்திரி தருகிற ஒரு நிலைப்பாட்டை பாஜகவே எடுக்கிறது.
நாம் விமர்சிக்கிற பாஜக; நாம் எதிர்க்கிற பாஜக; நாம் கடுமையாக விமர்சிக்கிற அந்த பாஜக, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்துதருவதற்குத் தயாராக இருக்கிறது; தந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு எம்.பி., அதுவும் ராஜ்யசபா எம்.பி. ராம்தாஸ் அத்வாலே.. மினிஸ்டர் கேபினெட்டில்.பாஜகவால் அப்படி அதிகாரத்தைப் பகிர்ந்துதர முடிகிறது.
2009-ல் மத்திய வனத்துறை அமைச்சர் பதவி கிடைத்ததை தடுத்தனர்
1977-க்குப் பிறகு ஜனதா ஆட்சி உருவான காலத்திலிருந்து தொடர்ந்து யுபிஏ-1,2 விலும் காங்கிரஸ் அதிகாரத்தைப் பகிர்ந்துதந்திருக்கிறது. இன்றைக்கு நான் சொல்லுகிறேன். இதுவரையில் சொல்லாததைச் சொல்லுகிறேன். யாரிடமும் பகிர்ந்து கொள்ளாததைச் சொல்லுகிறேன்.
2009-ல் நான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஒரே ஒரு உறுப்பினர். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்…
ஜெய்ராம் ரமேஷ் இன்றைக்கும் இருக்கிறார். அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ரவிக்குமாரிடம் பேசுகிறபோது, “உங்கள் தலைவர் திருமாவளவன்.. வனத்துறை அமைச்சர். சோனியா காந்தி அம்மையார் தேர்வு செய்துவிட்டார். திருமாவளவன் அமைச்சரானால் அவருக்கு செக்ரட்டரியாக, அதிகாரியாக இருப்பவர் யார்?” என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பெயரையும் சொல்லிவிட்டார்கள்.
ஆனால் திருமாவளவன் அமைச்சராக முடியவில்லை.
இதுவரையில் நாங்கள் எங்கேயும் சொன்னதில்லை. என்ன காரணம் என்று தெரியாமல் நாம் சொல்லக்கூடாது. ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் தரப்பிலேயே சொல்லப்பட்டது.
நான் பெரிதும் மதிக்கும், மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உள்ளத்தில், அவருடைய அன்பில் நமக்கு இடமிருந்தால் போதும். அவருடைய அன்புதான் எனக்கு முக்கியம் என்று தோழர் ரவிக்குமார் அவர்களிடம் சொல்லிவிட்டு நாங்கள் விலகினோம்.
அதாவது அந்தக் கோரிக்கையை நாங்கள் வைக்கவே இல்லை. அண்ணன் எ.வ. வேலு அவர்களும், அண்ணன் பொன்முடி அவர்களும், “ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள் தலைவரிடத்திலே” என்றும் சொன்னார்கள்.
ஆனால் அதற்கு முன்னமே ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் தொலைபேசியிலே தொடர்புகொண்டு, “திருமாவளவனுக்கு வனத்துறையும் இன்னும் ஒருசில இலாகாக்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர் அமைச்சர் ஆகிறார்” என்று சொல்லியிருந்தார்.
காங்கிரஸ் அதிகாரத்தைப் பகிர்ந்துதருவதற்கு முன்வந்திருக்கிறது. டெல்லியில் அதிகாரப் பகிர்வு நடக்கிறது; கூட்டணி ஆட்சி நடக்கிறது; கூட்டணி அரசு நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்திருப்பவர் தலைவர், தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்.
இந்தப் புதிய அத்தியாயம் தொடர வேண்டுமானால் மரகதம் குமாரவேல் இங்கு வெற்றி பெற வேண்டும். கூட்டணி ஆட்சி முறை தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டுமானால் தாராபுரத்திலும் சத்யபாமா வெற்றி பெற வேண்டும். மதச்சார்பின்மையையும் சமூகநீதியையும் பாதுகாப்பதற்கான ஒரு வலுவான கூட்டணியாக இந்தக் கூட்டணி மாற வேண்டுமானால், இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெற்றாக வேண்டும்.
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, யார் என்ன வதந்தியை கிளப்பினாலும், என்ன அவதூறுகளைக் கிளப்பினாலும், என்ன பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், அதைப் பொருட்படுத்த வேண்டாம்; கண்டுகொள்ள வேண்டாம்; எதிர்வினையாற்ற வேண்டாம்.
சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே மதச்சார்பற்ற அணி; சமூகநீதி அணி.
உங்கள் பொறுப்போடு களப்பணி ஆற்றுங்கள்; வாக்கு சேகரியுங்கள். குமாரவேலை வெற்றிபெறச் செய்யும்படி கேட்டுக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கிறேன். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.
